Published : 22 Jun 2018 07:51 AM
Last Updated : 22 Jun 2018 07:51 AM

ஸ்பெயின் அணிக்கு முதல் வெற்றி: ஈரானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ரஷ்யாவின் கஸான் நகரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் 4-1-4-1 என்ற பார்மட்டில் களமிறங்கியது. 37-வது இடத்தில் உள்ள ஈரான் அணியும் அதே பார்மட்டில் களம்புகுந்தது. 4-வது நிமிடத்தில் ஸ்பெயினின் டேனியல் கார்வாஜல், பாக்ஸ் பகுதியின் வெளியே இருந்து இலக்கை நோக்கி உதைத்த பந்து அதிக உயரமாக கோல்கம்பத்துக்கு வலது புற மாக விலகிச் சென்றது. 6-வது நிமிடத்தில் ஈரானின் வஹித் அமிரி, பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்தானது கோல்கம்பத்துக்கு வெளியே இடதுபுறம் சென்று ஏமாற்றம் அளித்தது.

10-வது நிமிடத்தில் ஸ்பெயினின் டேவிட் சில்வாவிடம் இருந்து பாஸை பெற்ற ஜெர்ரார்டு பிக்யூ, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டி கோல் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் பந்து வலது புறம் விலகிச் சென்றது. 14-வது நிமிடத்தில் ஈரானின் ஹரிம் அன்சாரிஃபர்ட் அடித்த பந்து கோல்கம்பத்துக்கு வலது புறம் வெளியே சென்றது. 19-வது நிமிடத்தில் செர்ஜியோ பஸ்குயிட்ஸ் உதவியுடன் டேவிட் சில்வா அடித்த பந்து தடுக்கப்பட்டது. இதே போல் 22-வது நிமிடத்தில் செர்ஜியோ ரமோஸ் அடித்த பந்தும் இடைமறிக்கப்பட்டது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஸ்பெ யின் அணி பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதிலும் 25-வது நிமிடத்தில்தான் அந்த அணியால் பந்தை இலக்கை நோக்கிய துல்லியமாக அடிக்க முடிந்தது.

பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து டேவிட் சில்வா அடித்த பந்தை கோல்கம்பத்தின் மையப்பகுதியில் வைத்து கோல்கீப்பரான பெய்ரன்வான்ட் தடுத்தார். 30-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து உதைக்கப்பட்ட பந்தை செர்ஜியோ ரமோஸ் தலையால் முட்ட அதனை டேவிட் சில்வா, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து கோல் வலைக்குள் தள்ள முயற்சித்தார். ஆனால் பந்து கோல்கம்பத்துக்கு மேலே சென்று ஏமாற்றம் அளித்தது. 31-வது நிமிடத்தில் இஸ்கோ, பாக்ஸின் வெளியே இருந்து அடித்த பந்து கோல்கம்பத்துக்கு இடது புறம் விலகிச் சென்றது. 42-வது நிமிடத்தில் இஸ்கோ உதவியுடன் டேவிட் சில்வா, பாக் ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்து தடுக்கப்பட்டது. முதல் பாதியின் முடிவில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

49-வது நிமிடத்தில் செர்ஜியோ பஸ்குயிட்ஸ் பாக்ஸின் வெளியே இருந்து இலக்கை நோக்கி அடித்த பந்தை கோல்கீப்பரான பெய்ரன்வான்ட், வலது புற ஓரத்தில் துள்ளியவாறு தடுத்தார். அவர் மீது பட்டு திரும்பி வந்த பந்தை அருகில் நின்ற இகோ அஸ்பஸ் கோல் வலைக்குள் தட்டிவிட முயன்றார். ஆனால் அவ ரது முயற்சிக்கும் முட்டுக்கட்டை போட்டார் பெய்ரன்வான்ட். 53-வது நிமிடத்தில் ஹரிம் அன்சாரிபஃர்ட், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்து கோல்கம்பத்தின் வெளியே இடதுபுறம் விலகிச் சென்றது.

54-வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோலை அடித்தது. பாக் ஸின் மையப்பகுதியில் பந்தை பெற்ற டிகோ கோஸ்டா, ஈரான் அணியின் இரு டிபன்டர்கள் ஊடாக பந்தை கடத்தி சென்றார். அப்போது ஈரா னின் ரமின் ரெசாயியன் பந்தை கிளியர் செய்ய முயன்ற நிலை யில் அது, டிகோ கோஸ்டாவின் காலில் பட்டு கோலாக மாறியது. உண்மையில் இது ஸ்பெயின் அணிக்கு கிடை த்த அதிர்ஷ்ட கோல்தான். 62-வது நிமிடத்தில் ஈரான் வீரர் சயித் எசாடோலஹி கோல் அடித்து சமநிலையை ஏற்படுத்தினார். ஆனால் ‘விஏஆர்’ தொழில்நுட்ப உதவியுடன் இந்த கோலை ஆஃப் சைடு என அறிவித்தார் ரெப்ரீ விக்லியானோ மவுரோ. இதனால் ஈரான் அணி கடும் அதிர்ச்சியடைந்தது.

இதன் பின்னர் கடைசி கட்ட நிமிடங்களில் ஈரான் அணி கோல் அடிக்க கடுமையாக போராடியது. 82-வது நிமிடத்தில் மெஹ்தி தர்மி, இலக்குக்கு நெருக்கமாக நின்று தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்றது. 90-வது நிமிடத்தில் சர்தார் அஸ்மவுன், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமாக இடது புறத்தில் வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது. கடைசி வரை போராடியும் ஈரான் அணியால் பதில் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பி பிரிவில் இடம் பெற்றுள்ள அந்த அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. முன்னதாக போர்ச்சுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தை ஸ்பெயின் டிரா செய்திருந்தது. தற்போது பி பிரிவில் ஸ்பெயின், போர்ச்சுக்கல் அணி கள் தலா 4 புள்ளிகள் பெற்று முதல் இரு இடங்களில் உள்ளன. ஈரான் அணி 3 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளது. ஸ்பெயின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் 25-ம் தேதி மொராக்கோவுடன் மோதுகிறது. அதே நாளில் ஈரான், போர்ச்சுக்கல் அணியை எதிர்கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x