Last Updated : 10 Jun, 2018 03:34 PM

 

Published : 10 Jun 2018 03:34 PM
Last Updated : 10 Jun 2018 03:34 PM

இங்கிலாந்து அணியிடம் பிரமிக்கும் அம்சம் எதுவுமில்லை; இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல முடியும்: இயன் சாப்பல் உறுதி

பேட்டிங்கில் நிலையற்ற தன்மையுடன், தடுமாறிக்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணியை எளிதாக வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வரும் இந்த மாத இறுதியில் இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொள்கிறது. இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அதற்கு முன்பாக இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்களில் சிலர் இங்கிலாந்து கவுண்டி அணியில் இணைந்து விளையாடி வருகின்றனர். குறிப்பாக புஜாரா, இசாந்த் சர்மா உள்ளிட்டோர் விளையாடி வருகின்றனர். இந்த டெஸ்ட் தொடர் மிகவும் சவாலானதாக இந்தியாவுக்கு இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான இயான் சேப்பல் இந்தியாவின் வெற்றி எளிதாக இருக்கும் என்று கணித்துள்ளார்.

இது குறித்து கிரிக்இன்போ தளத்தில் இயான் சேப்பல் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:

இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. என்னைப் பொருத்தவரை இங்கிலாந்து தொடரை மட்டுமல்ல, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரையும் இந்தியா வெல்வதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன.

இலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தபின் பெரும் குழப்பத்தில் இருக்கிறது. அதன்பின் ஹெடிங்லியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் யாரும் கணிக்கமுடியாத நிலையில், பாகிஸ்தானை வென்றது இங்கிலாந்து.

இங்கிலாந்து அணியில் ஏராளமான பலவீனங்கள் நிறைந்து கிடக்கின்றன. தொடக்க ஆட்டக்காரர் அலிஸ்டார் குக் பேட்டிங்கில் இருந்து, வேகப்பந்துவீச்சு வரை ஏராளமான குறைபாடுகள் உள்ளன. அலிஸ்டார் குக் தனக்கு ஏற்றார்போல் சரியான பார்ட்னர்அமையால் தடுமாறி வருகிறார். இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் வலதுகை வேகப்பந்துவீச்சாளர்களே இருப்பதும், தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாததும் மிகப்பெரிய குறைகளாகும்.

அதிலும் இப்போதுள்ள டாம் பெஸ் எந்தவிதமான சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இல்லாதவர். இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரும்பாலான போட்டிகளல் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்து வருவதை நான் தொடர்ச்சியாகப் பார்க்கிறேன். தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையாதபோது, இதுபோன்று விக்கெட்டுக்கள் மளமளவென விழுவது இயல்பானதுதான் அதில் ஒன்றும் வியப்பில்லை. அலிஸ்டார் குக்குடன் விளையாடப் பல வீரர்கள் பரிசோதிக்கப்பட்டும் சரியான வீரர் அமையவில்லை. ஆனால், அலிஸ்டார் குக் நல்ல பாட்னர்ஷிப் கிடைத்துவிட்டால் ஆபத்தான பேட்ஸ்மேனாக மாறிவிடுவார்.

கடந்த 29 இன்னிங்ஸ்களில் 2 இரட்டைச் சதம் அடித்துள்ளார்.கடந்த 12 மாதங்களில் டெஸ்ட் போட்டிகளில் 12, 19 ரன்கள் ஒருமுறையும், 10 முறை ஒற்றைப்படை ரன்னிலும் ஆட்டமிழந்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர் நிலைத்து ஆடாத போது, அடுத்து வரும் வீரர்களுக்கும், நடுவரிசையில் உள்ள வீரர்களுக்குமே அழுத்தமும், நெருக்கடியும் ஏற்படும்.

இங்கிலாந்து அணியின் தேர்வாளர் ஸ்மித்தின் குறிப்பிடத்தகுந்த தேர்வு ஆப் ஸ்பின்னர் டாம் பெஸ். இளம்வீரர், அருமையாகப் பந்துவீசக்கூடியவர். இவரின் பேட்டிங் திறமையும் கவுண்டி அணிகளில் சிறப்பாக இருந்துள்ளது. ஆனால், இந்திய அணிக்கு நெருக்கடியும், மிரட்டும் வகையிலும் டாம் பெஸ்ஸின் சுழற்பந்துவீச்சு இருக்கப்போவதில்லை. அஸ்வின் பந்துவீச்சைக்காட்டிலும் அதிகமான புல்டாஸ்களை டாம் பெஸ் வீசுகிறார். இது விராட் கோலிக்கும், விஜய்க்கும் ‘அல்வா’ சாப்பிட்டதுபோல் இருக்கும்.

வேகப்பந்துவீச்சில் இங்கிலாந்து அணியில் விதவிதமான பந்துவீச்சாளர்கள் இல்லை. குறிப்பாக ஆன்டர்சன் தவிர்த்து பல்வேறு விதமாக பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் இல்லை.

இங்கிலாந்துஅணியின் பேட்டிங் பிரச்சினை ஒருபக்கம் இருந்தாலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளோடு இங்கிலாந்து அணி விளையாடிய போது, அனைத்து வேகப்பந்துவீச்சாளர்களும் ஒரேமாதிரியாக, ஒரே வேகத்தில் பந்துவீசியது எதிரணிக்கு எந்த விதத்திலும் சிரமத்தை அளிக்காது.

வெளிநாடுகளுக்குப் பயணம் செல்லும் போது, தரமான வேகப்பந்துவீச்சாளர்களையும், பலவிதமாகப் பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர்களையும் அடையாளம் காணமுடியாமல் இங்கிலாந்து அணி இருப்பது மிகப்பெரிய பிரச்சினையாகும். இங்கிலாந்தில் கோடைகாலத்தில் ஆடுகளம், மைதானம் வெப்பமாகவும், காய்ந்தும் ஈரமின்றி இருக்கும். அப்போது, ஆடுகளம் பலவிதமாகமாறக்கூடும், கணித்து விளையாட முடியாத சூழல் ஏற்படும்.

இந்திய அணிக்கு ஆன்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் ஸ்விங் பந்துவீச்சு சவாலாக இருக்கலாம். மற்ற வகையில் இங்கிலாந்து அணியைப் பார்த்து பிரமிக்கும் அம்சம் ஏதுமில்லை. ஆனால், இங்கிலாந்து அணியோடு ஒப்பிடும் போது, இந்திய அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. பந்துவீச்சிலும் பலவிதமாக வீசக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்களும், சுழற்பந்துவீச்சாளர்களும இருப்பது, இங்கிலாந்து அணிக்கு சவாலாக அமையும். இவ்வாறு இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x