Published : 10 Jun 2018 09:23 AM
Last Updated : 10 Jun 2018 09:23 AM

சிமோனா ஹாலெபுக்கு பிரெஞ்சு ஓபன் பட்டம்

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றார்.

பிரான்ஸின் பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெபும், அமெரிக்காவின் ஸ்லோவன் ஸ்டீபன்ஸும் மோதினர். இதில் ஹாலெப் 3-6, 6-4, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் கோப்பையைக் கைப்பற்றினார்.

இது சிமோனா ஹாலெப் வெல்லும் முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிச் சுற்றில் நடால்

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரரும், தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான ரபேல் நடால் முன்னேறினார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் ரபேல் நடாலும், அர்ஜென்டினாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவும் மோதினர்.

இதில் ரபேல் நடால் 6-4, 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஜுவான் மார்ட்டினை எளிதில் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து 24-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு நடால் முன்னேறியுள்ளார். அவர் இறுதிச் சுற்றில் ஆஸ்திரிய வீரர் டொமினித் தியமை எதிர்த்து விளையாடவுள்ளார்.

இதுவரை 10 பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை நடால் வென்றுள்ளார். இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நடால் பட்டம் வென்றால் 11-வது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற வீரர் என்ற சாதனையை நடால் சமன் செய்வார். இதற்கு முன்பு மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் வீராங்கனை மார்கரெட் கோர்ட், ஆஸ்திரேலிய ஓபனில் 11 முறை பட்டம் வென்றுள்ளார்.

கிங் ஆஃப் கிளே என்று வர்ணிக்கப்படும் நடால், செம்மண் தரை டென்னிஸ் போட்டிகளில் மிகுந்த பலம் வாய்ந்தவர். எனவே இந்த முறையும் பிரெஞ்சு ஓபனில் அவரே பட்டம் வெல்வார் என டென்னிஸ் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது குறித்து நடால் கூறும்போது, “பிரெஞ்சு ஓபனில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். இங்கு டென்னிஸ் விளையாடும்போது எனக்கு ஊக்கம் மிகவும் அதிகமாகக் கிடைக்கிறது.ஆனால் டென்னிஸ் வாழ்க்கையில் உங்களுக்கு இறுதிச் சுற்று வாய்ப்புகள் மிகவும் குறைவாகக் கிடைக்கும். அதை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

பல முறை நான் வாய்ப்புகளை இழந்துள்ளேன். காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனதும் உண்டு. இப்போது எனது 17-வது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை நோக்கி நான் நடைபோடவுள்ளேன்” என்றார். - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x