Published : 02 Jun 2018 05:54 PM
Last Updated : 02 Jun 2018 05:54 PM

இடமாற்றத்தை நோக்கி 2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி - எங்கு நடத்த வாய்ப்பு?

2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியை வேறு நாட்டில் நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. எந்த நாட்டில் நடத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

11-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த 11-வது ஐபிஎல் போட்டிகளில் இரு ஐபிஎல் போட்டிகள் வேறு வழியின்றி வெளிநாடுகளில் நடத்தப்பட்டுள்ளன. உள்நாட்டில் தவிர்த்து வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டிகளை ஐபிஎல் நிர்வாகம் நடத்தும்போது எதிர்பார்த்த வருவாய் இழப்பு அணிகளுக்கும், நிர்வாகத்துக்கும் ஏற்படுவது என்பது இயல்பு.

ஏனென்றால், உள்நாட்டில் போட்டிகள் நடக்கும் போது, அந்தந்த மாநில அணிகளின் போட்டிகளைக் காண ரசிர்கள் அதிக ஆர்வத்துடன் வருவார்கள், டிக்கெட் விற்பனை அதிகரிக்கும். உதாரணமாக இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் அனைத்தும் காவிரி பிரச்சினை காரணமாக புனேவுக்கு மாற்றப்பட்டது.

 இதனால், சிஎஸ்கே நிர்வாகத்துக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கக்கூடும். ஆனால், சென்னை சேப்பாக்கத்தில் போட்டிகள் நடத்தப்பட்டு இருந்தால், சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைத்திருக்கும்.

இதற்கு முன் கடந்த 2009-ம் ஆண்டு நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்த காரணத்தில் ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டன. அதன்பின் 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் காரணமாக துபாய்க்கு பாதி அளவு போட்டிகள் மாற்றப்பட்டன.

இதேபோல 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதிகளோடு, ஐபிஎல் போட்டி நடத்தும் தேதிகளுக்கும் இடையே மோதல் ஏற்படக்கூடாது என்பதால் போட்டியை வெளிநாட்டில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

இது குறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, துபாயில் வெளியாகும் கலீஜ் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

‘‘2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது ஏதுவாக இருக்காது என நினைக்கிறேன். மக்களவைத் தேர்தல் தேதிகளுக்கும், போட்டியின் தேதிகளுக்கும் மோதல் இருந்தால், பாதுகாப்பு அளிக்க முடியாது என்று போலீஸார் மறுத்துவிடுவார்கள்.

இதனால், போட்டிகளை வெளிநாட்டில்தான் நடத்த வேண்டிய நிலை இருக்கும். ஏற்கனவே 2009, 2014-ம் ஆண்டுகளில் தேர்தல் தேதிகளோடு, ஐபிஎல் போட்டியின் தேதிகளும் சேர்ந்து வந்ததால், பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மாநில அரசுகளும், மத்திய அரசும் தெரிவித்தன. அதனால்

போட்டியைத் தென் ஆப்பிரிக்காவிலும், துபாயிலும் நடத்தினோம். ஆதலால், இந்த முறையும் அவ்வாறு நேர்ந்தால், வேறுவழியில்லை வெளிநாட்டில்தான் நடத்தவேண்டியது இருக்கும்’’ என சுக்லா தெரிவித்தார்.

ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்தால், பெரும்பாலும் துபாயில் நடத்தப்படவே அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதற்கான ஆலோசனையில் ஐபிஎல் நிர்வாகம் ஈடுபட்டுஇருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

2009-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் முழுமையாகத் தென் ஆப்பிரிக்காவிலும், 2014-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் பாதி ஆட்டங்கள் துபாயிலும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x