Last Updated : 02 Jun, 2018 03:17 PM

 

Published : 02 Jun 2018 03:17 PM
Last Updated : 02 Jun 2018 03:17 PM

8 ஆண்டுகளுக்குப் பின் வாய்ப்பு பெற்ற தினேஷ் கார்த்திக்: ஆப்கன் டெஸ்ட்டில் இருந்து சாஹா நீக்கம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியில் இருந்து விக்கெட் கீப்பர் விர்திமான் சாஹா காயம் காரணமாக நீக்கப்பட்டதையடுத்து, அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளுக்குப் பின் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விர்திமான் சாஹா இடம் பெற்று இருந்தார். கடந்த மாதம் 25-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விர்திமான் சாஹாவுக்கு வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது.

அதன்பின் நடந்த மருத்துவ சிகிச்சையில் அவரின் வலதுகை பெருவிரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதைக் கண்டுபிடித்த மருத்துவர்கள் அதற்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனால், இம்மாதம் 14-ம் தேதி பெங்களூருவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்குத் தேர்வாகி இருந்த விர்திமான் சாஹா அதில் விளையாடும் அளவுக்கு உடற்தகுதியுடன் இருப்பாரா எனச் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால், சாஹா நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ அமைப்பின் செயலாளர் அமிதாப் சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில், ஜுன் 14-ம் தேதி ஆப்கானிஸ்கான் அணியுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டியில் இருந்து விக்கெட் கீப்பர் விர்திமான் சாஹா காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

விர்திமான் சாஹாவுக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை, சிகிச்சையை பிசிசிஐ மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்தனர். ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்குள் அவர் உடற்தகுதி அடையமாட்டார் என அறிந்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதேசமயம், இங்கிலாந்து தொடருக்குள் சாஹா முழுமையாக குணமடைந்துவிடுவார் என நம்புகிறோம். சாஹா முழுமையாக குணமடைய இன்னும் 4 முதல் 5 வாரங்கள் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பாக விளையாடக்கூடிய விர்திமான் சாஹா, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 14 போட்டிகளில் 234 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். அதேசமயம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன், தினேஷ் கார்த்திக் 16 போட்டிகளில் 498 ரன்கள் குவித்தார்.

கடந்த 2010-ம் ஆண்டுக்குப் பின் தினேஷ் கார்த்திக் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு சிட்டகாங்கில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக தினேஷ் கார்த்திக் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் மீண்டும் 8 ஆண்டுகள் இடைவெளியில் இப்போது அணியில் இடம் பிடித்துள்ளார்.

இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் ஒரு சதம், 7 அரைசதம் உள்ளிட்ட ஆயிரம் ரன்கள் சேர்த்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x