Published : 02 Jun 2018 02:52 PM
Last Updated : 02 Jun 2018 02:52 PM

அதிர வைக்கும் ஐபிஎல் சூதாட்டம்: நடிகர் சல்மான் கான் தம்பி ஒப்புதல் - தோற்ற பணத்தை தராததால் அம்பலம்

ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கிய இந்தி நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கான், சூதாட்டம் நடத்தியதை ஒப்புக் கொண்டார். சூதாடிய தொகை ரூ. 2.8 கோடியை தராததால் சூதாட்ட கும்பல் அவரை மிரட்டியதும் உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் 11-வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் நடந்த முடிந்தன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. சூதாட்டச் சர்ச்சை காரணமாக 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டு மீண்டும் திரும்பி வந்த சிஎஸ்கே அணி அபாரமாக கோப்பையை வென்றது

இந்நிலையில், ஐபிஎல் சூதாட்ட புகார் மீண்டும் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மே 15-ம் தேதி அன்று ஐபிஎல் சூதாட்ட கும்பலைச் சேர்ந்த 5 பேரை மகாராஷ்டிர மாநிலம் தானே போலீஸார் கைது செய்தனர். அதில் சோனு ஜலான் என்ற சூதாட்ட கும்பல் தலைவரும் சிக்கினார்.

அவரிடம் நடந்த விசாரணையில், கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின் போது, 100 கோடிக்கு மேல் சூதாட்டம் நடந்திருப்பதும் வெளிநாடுகளில் உள்ள பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும் சோனு ஜலானுக்கு, நடிகரான சல்மானின் கானின் தம்பி, நடிகர் அர்பாஸ் கானுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அர்பாஸ் கானுக்கு மகாராஷ்டிர போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதை தொடர்ந்து இன்று அர்பாஸ் கான் தானே காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது, அர்பாஸ் கானுக்கு முன்பாக சோனு ஜலானை அமர வைத்து நேருக்கு நேர் கேள்விகள் கேட்டு போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது, 6 ஆண்டுகளாக ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை நடிகர் அர்பாஸ் கான் ஒப்பு கொண்டார் மேலும். ஜலானுடன் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்திய அவர், சூதாட்ட தரகர் சோனு ஜலானிடம், 2.80 கோடி ரூபாய் தொகையை இழந்ததாகவும், ஆனால் அந்த தொகையை செலுத்தவில்லை எனவும் கூறியுள்ளார். அதனால், பணம் கேட்டு தன்னை மிரட்டியாதகவும், அர்பாஸ் கான் கூறியுள்ளார். இதனை கைதான ஜலானும் உறுதிபடுத்தியுள்ளார்.

முன்பு நடந்த ஐபிஎல் போட்டிகளில், பெரிய அளவில் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. ஸ்பாட் ஃபிக்ஸிங் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

மேலும், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக் காரணமாக 2016 மற்றும் 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் இவ்விரு அணிகளும் பங்கேற்கவில்லை. ஆனால் அணியிலிருந்த வீரர்கள் புனே மற்றும் குஜராத் அணிகள் சார்ப்பில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x