Last Updated : 02 Jun, 2018 07:54 AM

 

Published : 02 Jun 2018 07:54 AM
Last Updated : 02 Jun 2018 07:54 AM

தள்ளாத வயதிலும் தீராத கால்பந்து மோகம்

கொ

ல்கத்தாவைச் சேர்ந்த தம்பதிகள் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளை நேரில் காண ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளனர். இது இவர்கள் நேரில் காணவிருக்கும் 10-வது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியாகும்.

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் பன்னாலால் சட்டர்ஜி (85). இவரது மனைவி சைதாலி (76). இருவருமே கால்பந்துப் பிரியர்கள். 1982-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற போது இந்த தம்பதியினர் போட்டிகளை தொலைக்காட்சியில் கண்டு களித்தனர். திடீரென போட்டியை நேரில் காணும் ஆர்வம் அதிகரிக்கத் தொடங்க இருவரும் உடனே ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றனர். அதன் பின்னர் ஒவ்வொரு உலகக் கோப்பையையும் அவர்கள் நேரில் கண்டுகளித்து வருகின்றனர்.

பன்னாலால் சட்டர்ஜி கூறும்போது, “எனக்கு இப்போது 85 வயதாகிறது. அடுத்த உலகக்கோப்பை 2022-ல் நடைபெறும்போது எனக்குக் கிட்டத்தட்ட 90 வயதாகியிருக்கும். ரூ.5 லட்சம் செலவில் இப்போது ரஷ்யா செல்கிறோம். இந்த முறை ஜூன் 14-ல் பயணம் தொடங்கி ஜூன் 28-ல் திரும்புகிறோம்.

1986-ல் அர்ஜென்டினா கோப்பையை வென்றபோது மரடோனா ஒரு ஆட்டத்தில் அடித்த கோல் சர்ச்சையானது. அந்தப் போட்டியையும் நாங்கள் கண்டு களித்தோம்” என்றார்.

பல ஜாம்பவான்களுடன் புகைப்படங்களையும் இந்த தம்பதியினர் எடுத்துள்ளனர். சைதாலி கூறும்போது, “ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியும் மறக்க முடியாதது. மரடோனா அழைத்த கடவுளின் கை கோல் அபாரமானது. அது இன்னும் என் கண்களை விட்டு அகலவில்லை. நாங்கள் எப்போதுமே பிரேசில் அணிக்கே ஆதரவு தெரிவிப்போம்” என்றார். இந்தத் தம்பதியின் வீடு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் பழைய டிக்கெட்டுகள், விருதுகள், நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றால் நிறைந்து கிடக்கிறது. தள்ளாத வயதிலும் இவர்களுக்கு கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வம் குறையவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x