Published : 17 May 2018 04:32 PM
Last Updated : 17 May 2018 04:32 PM

கிரிக்கெட்டுக்கு மீண்டும் வரும் அதிரடி பாக். ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்: மறக்க முடியாத சாதனைகளில் சில...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் 38 வயதில் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்புவதாக அறிவித்துள்ளார்.

குவைத்-இ-ஆஸம் ட்ராபிக்கான கிரிக்கெட் தொடரில் ரசாக் ஆடவிருக்கிறார், இதன் மூலம் பாகிஸ்தான் சூப்பர் லீகிற்கு திரும்ப உத்தேசித்துள்ளார் ரசாக்.

இவர் ஓய்வு பெறவில்லை, வாய்ப்புகள் இல்லாமல் கிரிக்கெட்டிலிருந்து மறைந்து போனார். 2013-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக டி20யில் ஆடினார். உள்நாட்டு கிரிக்கெட்டில் 2015-ல் கடைசியாக ஆடினார். இவர் 46 டெஸ்ட் போட்டிகள், 265 ஒருநாள் போட்டிகள், 32 டி20 போட்டிகளை ஆடியுள்ளார்.

இவர் ஆடும் காலத்தில் இவரை வீழ்த்தாமல் பாகிஸ்தானை வீழ்த்தி விட்டோம் என்று எந்த அணியும் நினைத்துவிட முடியாது, அந்த அளவுக்கு எந்த நிலையிலிருந்தும் தன் அதிரடி பேட்டிங் மூலம் எதிரணியினரின் பந்து வீச்சை நிலைகுலையச் செய்பவர்கள், இன்றைய தோனிகளுக்கும் லின்களுக்கும், கெய்ல்களுக்கும் இன்னபிற அதிரடி வீரர்களுக்கும் இவர் அதிரடி முன்னோடி என்றால் மிகையாகாது. அதிரடியும் ஆடுவார் டெஸ்ட் போட்டிகளில் நின்று ட்ராவும் செய்துள்ளார். முன்னதற்கு உதாரணம் கிளென் மெக்ராவை ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள் விளாசி அவரை கடுப்பேத்தியது, பிந்தைய சந்தர்ப்பத்துக்கு உதாரணம் மொஹாலியில் இந்தியாவுக்கு எதிராக கடைசி நாளில் தூண் போல் நின்று ட்ரா செய்தார்.

 

அவரது நம்ப முடியாத சாதனைத்துளிகளில் சில..

7 பவுண்டரி 10 சிக்சர்கள்; 70 பந்துகளில் ஒருநாள் சதம்:

அபுதாபியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 2010-ம் ஆண்டு 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 286/8 என்று ரன் குவித்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 70/4, ஷாகித் அப்ரீடி அவுட் ஆகும் போது 30வது ஓவரில் ஸ்கோர் 136/5. கடைசி 4 ஓவர்களில் 4 சிக்சர்கள். ஒருவிதத்தில் இன்றைய டி20 பேட்டிங்கை அன்றே கையாண்டவர் அப்துல் ரசாக். 72 பந்துகளில் 7 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் 109 நாட் அவுட் 49.5 ஓவரில் பாகிஸ்தான் வெற்றி.

1999 ஷார்ஜாவில் இலங்கையின் வெற்றி வாய்ப்பைப் பறித்த ரசாக்:

இது மிக முக்கியமான போட்டி பேட்டிங்கில்தான் அதிரடி சாதனை புரிந்து வெற்றி பெற முடியாத இடத்திலிருந்து நம்ப முடியாத வெற்றியைப் பெற்றுத் தரமுடியும் பந்து வீச்சினால் முடியாது என்ற நிலையை மாற்றிக்காட்டினார் அப்துல் ரசாக். ஷார்ஜாவில் 1999-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை 173/2 என்று 41வது ஓவரில் இருந்தது, வெற்றிக்குத் தேவை 24 ரன்களே. அப்போது வாசிம் அக்ரம் ஒரு ஸ்பெல் போட்டாரே பார்க்கலாம். ஷோயப் மாலிக்கும் வாசிம் அக்ரமும் 3 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினர். ஆனாலும் 5 ஓவர்களில் 14 எடுத்தால் வெற்றி என்று எளிதாகவே இருந்தது. அப்போதுதான் வந்தார் ரசாக் கடைசி 5 ஓவர்களில் 3 ஓவர்களை வீசினார். ரன் கொடுக்காமல் 4 விக்கெட்டுகளை வீழ்த்த ஆட்டம் டை ஆனது.

கால்லே 2000: ரசாக் ஹாட்ரிக்

2000-ம் ஆண்டு கால்லே டெஸ்ட் போட்டியில் இலங்கையின் முதல் இன்னிங்ஸை விரைவில் முடித்து வைத்தார், இந்தப் போட்டியில் அபாய வீரர் ரொமேஷ் கலுவிதரனா, ரங்கனா ஹெராத் மற்றும் புஷ்பகுமாரா ஆகியோரை அருமையான ரிவர்ஸ் ஸ்விங்கில் வீழ்த்தினார்.

கிளென் மெக்ராவின் ஈகோவுக்கு அடி கொடுத்த ரசாக்:

2000-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் கிளென் மெக்ராவை எங்கு போட்டாலும் பவுண்டரிகளில் டீல் செய்தார், ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள், கடைசி பந்து மட்டும்தான் யார்க்கர் சரியாக விழுந்தது ரன் இல்லை. ரசாக்கை உலகம் திரும்பிப் பார்த்தது.

மொஹாலி டெஸ்ட்டை காப்பாற்றிய ரசாக்- 2005

மிகப்பெரிய பவர் ஹிட்டர் என்று நினைத்தால் சில வேளைகளில் சுவராக நின்று டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டைக் கொடுக்காமல் தடுப்பாட்டம் ஆடி வெறுப்பேற்றும் திறமை கொண்டவர்.

இந்தியாவுக்கு எதிராக 2005ம் ஆண்டு மொஹாலியில் இந்திய அணியின் முன்னிலை ரன்களைக் கழித்தால் பாகிஸ்தான் 39 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற நிலைதான், எப்படிப் பார்த்தலும் இந்திய அணி வென்று விடும் என்று நம்பியிருந்தார்கள். கம்ரன் அக்மல் இவருடன் இணைந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து சுமார் 56 ஓவர்கள் ஆடி 184 ரன்களைச் சேர்க்க ஆட்டம் டிரா ஆனது ரசாக் 71 ரன்கள் எடுத்தார், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இது ஒரு முக்கியமான தப்பிப்பாகும், ரசாக் சற்றும் எதிர்பாராதவிதமாக டிரா செய்தார், 6 மணி நேரம் பேட் செய்தார்.

இது மட்டுமல்ல வால்ஷ், ஆம்புரோஸுக்கு எதிராக 7 மணி நேரம் பேட் செய்து 87 ரன்கள் எடுத்தார். அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே 6 மணி நேரம் பேட் செய்து 72 எடுத்தார். அதைவிட எம்.சி.யில் ஒருமுறை 76 பந்துகளில் 4 ரன்களை எடுத்தார், இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மெக்ராவை ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள் அடித்தவரா 76 பந்துகளில் 4 ரன்கள்! இவர் ஒரு புரியாத புதிர்தான்.

2006ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக கராச்சியில் ஆல்ரவுண்டர் திறமையைக் காட்டினார். பேட்டிங்கில் 45 மற்றும் 90. பவுலிங்கில் 67 ரன்களுக்கு 3 விக்கெட் மற்றும் 88 ரன்களுக்கு 4 விக்கெட்.

இப்போதெல்லாம் வயது ஒரு மேட்டரேயல்ல என்று பேசத்தொடங்கியுள்ளோம் அதனால் இந்த அருமையான ஆல் ரவுண்டர், டி20-யின் முன்னோடி மீண்டும் வந்து ஆடி வெற்றிகரமாக பாகிஸ்தான் டி20, ஒருநாள் போட்டிகளில் ஆட முடிந்தால் அது கிரிக்கெட்டுக்கு நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x