Published : 04 May 2018 08:10 PM
Last Updated : 04 May 2018 08:10 PM

ஐபிஎல் போட்டியில் தொடரும் ‘அம்பயரிங் சொதப்பல்’: போட்டிகளைப் புரட்டிப்போடும் “உஷ் கண்டுக்காதீங்க”

மும்பை

2018—ம் ஆண்டு 11-வது ஐபிஎல் சீசனில் களநடுவர்களின் தவறான முடிவுகள் தொடர்ந்து வருவதால், பல போட்டிகளில் “உஷ்கண்டுக்காதீங்க” தருணங்கள் அதிகரித்து வருகின்றன.

உள்நாட்டு நடுவர்களின் திறமையை மெருகேற்றும் வகையில், இந்த ஐபிஎல் சீசனுக்கு, வெளிநாட்டு நடுவர்கள் யாரையும் ஐபிஎல் நிர்வாகம் நியமிக்கவில்லை. ஆனால், வெளிநாட்டு நடுவர்கள் இல்லாததன் குறை இந்த ஐபிஎல் போட்டியில் அதிகமாகத் தெரிகிறது

தலைத்தொப்பியில் கேமிரா, ஸ்டெம்பில் கேமிரா, மூன்றாவது நடுவர் ஆகியோர் இருப்பதால், சில நேரங்களில் தீர்ப்புகள் மூன்றாவது நடுவருக்குக் கொண்டு செல்லப்பட்டு ஓரளவுக்கு நடுநிலையுடன் வருகின்றன.

ஒருவேளைத் தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்டதால், என்னவோ நாம் கண்ணும் கருத்துமாக ஒவ்வொரு பந்தையும் பார்க்கத் தேவையில்லை என்ற நினைப்பு நடுவர்கள் மத்தியில் எழுந்துவிட்டது போல் சொதப்பலான முடிவுகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், ஸ்டெம்பில் கேமிரா, தலையில் கேமிரா போன்றவை இல்லாமல் களநடுவர்கள் துல்லியமான முடிவுகளை அளித்தனர். குறிப்பாக இந்தியர்கள் வெங்கட்ராகவன், விக்ரமராஜூ, விஜயசாரதி, இங்கிலாந்து நடுவர் டேவிட் ஷெப்பர்டு, டிக்கி பர்ட், மேற்கிந்தியத்தீவுகள் ஸ்டீவ் பக்னர், நியூசிலாந்து பில்லி புவடன், ஆஸ்திரேலியாவின் சைமன் டாஃபல் ஆகியோர் எந்தவிதமான தொழில்நுட்ப கருவிகள் இல்லாமல் நடுவர் பணியைச் சிறப்பாகச் செய்தனர்.

ஆனால், இப்போது தொழில்நுட்ப வசதிகள் சிறப்பாக இருந்தாலும் நடுவர் பணியில் தொடர்ந்து சொதப்பல்கள் இருந்துவருகிறது.

கடந்த ஐபிஎல் போட்டியில் ஏறக்குறை. 25 முறை நடுவர்கள் தவறான தீர்ப்புகளை அளித்தனர், அதற்கு எந்தவிதத்திலும் குறையில்லாமல் இந்த முறையும் நடுவர்களின் தீர்ப்புகள் சொதப்பலாகவே இருந்து வருகின்றன.

நடப்பு ஐபிஎல் முதல் ஆட்டத்தில் தோனிக்கு பிளம்ப் அவுட் மறுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, வாட்ஸன் கால்பேடில் பந்தை வாங்கியது தெளிவான எல்பிடபிள்யு என்பது தொலைக்காட்சியை பார்த்தவர்களும், மூன்றாவது நடுவர்களுக்கும் தெரிந்தது. ஆனால் அதற்குக் கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை, 3வது நடுவரும் அவுட் கொடுக்கவில்லை. இதனால், அந்தப்போட்டியில் அந்த வாழ்வைப்பயன்படுத்திய வாட்ஸன் பொளந்துகட்டிவிட்டார்.

இதேபோல, பெங்களூரு அணிக்கும், மும்பை அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் நோபாலில் நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால், மூன்றாவது நடுவர் பார்த்தபோது அது நோபால் எனத் தெரிந்தது.

சன்ரைசர்ஸ் அணிக்கும், சிஎஸ்கே அணிக்கும் இடையில் கடந்த வாரம் நடந்த போட்டியில் நடுவர் வினீத் குல்கர்னி ஹைதராபாத் ரசிகர்களின் மொத்த கோபத்துக்கும் ஆளானார். சர்துல் தாக்கூர் வீசிய பந்து கான் வில்லியம்சனுக்கு மார்புக்கு மேல் சென்றும் அதற்கு நடுவர் நோபால் கொடுக்கவில்லை. இந்த தவறான முடிவால், சன்ரைசர்ஸ் அணி அந்த போட்டியில் தோற்றது.

அதேபோல கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையிலான ஆட்டத்தில், பஞ்சாப் வீரர் ஆன்ட்ரூ டை வீசிய பந்து நோபால் இல்லை. ஆனால், அவர் எல்லைக் கோட்டை தாண்டி வீசினார் எனக்கூறி பேட்ஸ்மேனுக்கு ப்ரீஹிட் கொடுத்தார் நடுவர்.

கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திலும் இதே நிலை நீடித்தது. ஆன்ட்ரூ டை வீசிய பந்து நோபால் இல்லை எனத் தெரிந்தும், அது கொடுக்கப்பட்டது குறித்து தொலைக்காட்சி நடுவர்கள் மத்தியில் வாதம் நடந்தபோதிலும் அது தவறு என அறிவிக்கப்படவில்லை.

அதுமட்டுமல்லாமல், ஒருஓவருக்கு 7 பந்துகள் வரை வீசப்படும் வரைநடுவர்கள் பந்துகளைக் கூட எண்ணமுடியாத தருணங்களும் இந்த ஐபிஎல் போட்டியில் அரங்கேறின.

உள்நாட்டு நடுவர்களின் திறமையை வளர்க்க வேண்டும் என்று பிசிசிஐ அமைப்பு நினைப்பதில் தவறில்லை. ஆனால், களநடுவர்கள் அளிக்கும் சில தீர்ப்புகள் சில நேரங்களில் போட்டியின் முடிவுகளை மாற்றிவிடுகிறது. மேலும், சர்வதேச அளவில் போட்டிகளுக்கு நடுவர் பணி செய்யும் வெளிநாட்டு நடுவர்களுடன் இந்தியர்களால் போட்டியிட முடியவில்லை.

இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் கூறுகையில், தவறுகளில் இருந்து ஏன் நாம்பாடம் கற்பிக்க முடியாது. ரசிகர்களிடம் இருந்துவரும் விமர்சனங்களைக் குறித்துக்கொண்டு, நடுவர்கள் என்ன விதமான தவறுகளை செய்கிறார்கள் என்பதை அறிந்து திருத்தலாம், அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆலோசிப்பதில் தவறில்லைதானே. நாம் மிகப்பெரிய கிரிக்கெட் லீக்போட்டியை நடத்துகிறோம். அதில் தரமற்ற நடுவர்தீர்ப்பு அமைந்துவிடக்கூடாது, நடுவர் பணியில் சந்தேகத்தையும் விதைக்கூடாது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x