Published : 04 May 2018 05:26 PM
Last Updated : 04 May 2018 05:26 PM

2 கேட்சுகளை விட்ட ஜடேஜா சிஎஸ்கே அணியில் நீடிக்கலாமா?: ரசிகர்கள் கருத்து என்ன?

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் 2 கேட்சுகளை கோட்டைவிட்டு, பேட்டிங்கிலும் சொதப்பிய ரவிந்திர ஜடேஜா விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து நீடித்து வருபவர் ரவீந்திர ஜடேஜா. தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்ற சிறப்பாக விளையாடுவதற்காக “ராக் ஸ்டார்” என்ற பட்டத்தை ஷேன் வார்ன் வழங்கினார். அதை அடிப்படையாக வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.98 லட்சத்துக்கு ஜடேஜாவை ஏலத்தில் விலைக்கு வாங்கியது.

அதன்பின் தொடர்ந்து சிஎஸ்கே அணியில் இடம்பெற்று விளையாடி வந்த ஜடேஜா அவ்வப்போது மட்டுமே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தார். சூதாட்டப்புகார் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் இடம் பெற்றுள்ளது.

இந்த சீசனில் தோனியின் உச்சபட்ச பரிந்துரையால் சிஎஸ்கே நிர்வாகம் ரவிந்திர ஜடேஜாவை தக்கவைத்துக் கொண்டது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா மெச்சும்படியான பேட்டிங், பந்துவீச்சு ஏதும் இல்லாமல், விளையாடி வருகிறார். ஒட்டுமொத்தமாக 9 போட்டிகளில் 59 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் எந்தவிதமான ஃபார்மிலும் இல்லாத ஜடேஜா சிஎஸ்கே அணியில் விளையாடும் லெவனில் இடம் பெற்று இருப்பது ஒவ்வொரு ஆட்டத்தின் போது விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது. சிஎஸ்கே அணிக்கு ஒரு “எக்ஸ்ட்ரா லக்கேஜ்” போலவே ஜடேஜா இருந்து வருகிறார்.

இவரின் இந்த சொதப்பலான ஆட்டம் நேற்றைய கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் உச்சத்தை தொட்டு, உள்ளங்கை நெல்லிக்கனி போல் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

சிஎஸ்கே வீரர் ஆசிப் 2-வது ஓவரை வீசியபோது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரேன் அடித்த பந்தை கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டார். முதல் வாய்ப்பைத்தான் தவறவிட்டார் என்றால் அடுத்தபந்திலும் கிடைத்த கேட்ச் வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டார். இது போட்டியை தொலைக்காட்சியிலும், மைதானத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சிஎஸ்கே ரசிகர்களின் கோபத்தையும் தூண்டிவிட்டது.

களத்தில் இருந்த தோனியும் கேட்ச் வாய்ப்பை இரு முறை தவறவிட்ட ஜடேஜாவின் செயலைப்பார்த்துக் கடுப்பாகிவிட்டார். அதன்பின் அம்பதி ராயுடு, ரெய்னா, பில்லிங்ஸ் ஆகியோர் வந்து ஜடேஜாவை சமாதானப்படுத்தி அவருக்கு நம்பிக்கை ஊட்டினர்.

நரேன் அடித்த இருஷாட்களில் ஒரு கேட்சை பிடித்திருந்தால் கூட, நரேன் 32 ரன்கள் விளாசுவதை தடுத்திருக்க முடியும், போட்டியில் கொல்கத்தா ரன் சேர்ப்பை தடுத்திருக்கலாம். ஆனால், ஆட்டத்தின் முடிவு வேறுமாதிரியாகச் சென்றது. சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்க ஜடேஜாவின் மோசமான பீல்டிங்கும் ஒருவிதத்தில் காரணமாகவே அமைந்தது எனக் கூறலாம்.

ஜடேஜா போட்டியில் இரு கேட்ச் வாய்ப்புகளை விட்டதைத் தொடர்ந்து, அவர் அணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்று சிஎஸ்கே ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிஎஸ்கேவின் ட்விட்டர் தளத்தில், “ ஒரு ரசிகர் பதிவிடுகையில், தோனி, பிளமிங்குக்கு அன்பான வேண்டுகோள், அணியில் ஜடேஜாவின் பங்கு என்ன. சிஎஸ்கே அணியில் விளையாடும் லெவனில் அவர் இருக்க வேண்டுமா, அணியில் அவர் பங்கு என்ன, பேட்ஸ்மேனா அல்லது பந்துவீச்சாளரா என்னவென்றே தெரியவில்லை, அவரை தயவு செய்து நீக்குங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஆற்றங்கரையில் மீனை ஒருவர் தூக்கிப்போடுவது போலவும், அதை ஒருபிடிக்காமல் தவறவிடுவதுபோன்ர வீடியோ கிளிப்பை பதிவிட்டு அதில் ஒருவரை தோனியாகவும், மற்றொருவரை ஜடேஜாவாகவும் குறிப்பிட்டு மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர் பதிவிடுகையில், ஜடேஜா பந்துவீச மாட்டார், பேட்டிங் செய்யமாட்டார், ஆனால் 8 போட்டிகள் விளையாடிவிட்டார், இதன்பின் தோனி எப்படி ஜடேஜாவை அணியில் வைத்திருக்கிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜடேஜாவை அணியில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக இதுவரை எத்தனை ஜடேஜாக்களை தோனி கழற்றிவிட்டு இருப்பார் என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

இதுபோல் ஏராளமான சிஎஸ்கே ரசிகர்கள் ஜடேஜாவுக்கு எதிராக புறப்பட்டுவிட்டனர். பெங்களூரு அணிக்கு எதிராக நாளை நடக்கும் போட்டியில் ஜடேஜா தொடர்ந்து நீடிப்பாரா என்பது தோனியும், பயிற்சியாளர் பிளெம்மிங் ஆகியோர் முன் இருக்கும் கேள்வியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x