Published : 04 May 2018 07:11 AM
Last Updated : 04 May 2018 07:11 AM

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்:வெற்றி நெருக்கடியில் மும்பை இந்தியன்ஸ்; வெளுத்துக்கட்ட கெயில், கே.எல்.ராகுல் ஆயத்தம்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு இந்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

3 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் வெளியேறும் அணிகளில் முதலிடத்தை பிடிப்பதற்கான வரிசையில் நிற்கிறது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 2 வெற்றிகள் மட்டுமே பெற்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடம் வகிக்கிறது. மறுபுறம் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் மெதுவாகவும் அதே சமயத்தில் உறுதியாகவும் பிளே ஆஃப் சுற்றை நோக்கி காய் நகர்த்தி வருகிறது.

ஒருவார இடைவெளிக்கு பிறகு பஞ்சாப் அணி தனது 8-வது லீக் ஆட்டத்தை இன்று சந்திக்கிறது. இந்த ஓய்வானது கிறிஸ் கெயில், கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் புத்துணர்ச்சி பெற உதவியாக இருந்திருக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது. இந்த சீசனில் பஞ்சாப் அணி ஒருங்கிணைத்த செயல்திறனால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

டி 20 ஆட்டங்களில் ‘உலக நாயகன்’ என வர்ணிக்கப்படும் கிறிஸ் கெயில் மனதளவில் காயமடைந்த நிலையில் இந்த சீசனில் பங்கேற்ற போதிலும் ஒரு சதம், 2 அரை சதம் என 252 ரன்கள் விளாசி அனைவரது பார்வையையும் தன் மீது மீண்டும் குவியச் செய்துள்ளார். அதேவேளையில் ஐபிஎல் வரலாற்றில் அதிவிரைவாக அரை சதம் அடித்த கே.எல்.ராகுலும் தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை. இந்த சீசனில் அவர், 2 அரை சதங்களுடன் 268 ரன்கள் விளாசியுள்ளார்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ‘சுழல் மாயாவியான’ முஜீப் உர் ரஹ்மான் சிக்கனமாக ரன்கள் வழங்கி (சராசரியாக ஓவருக்கு 6.51) 7 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அவரது திறனை கேப்டனான அஸ்வின் சிறந்த முறையில் மெருகேற்றுவதுடன் சரியான நேரத்தில் அதை வெளிக்கொண்டுவர உதவுகிறார். இதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களான அங்கித் ராஜ்புத், ஆன்ட்ரூ டை ஆகியோரும் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். இவர்கள் முறையே 7 மற்றும் 9 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளனர். இதில் ராஜ்புத் சிக்கனமாக ரன்களை (6.27) வழங்கி உள்ளார். ஆன்ட்ரூ டை சராசரியாக ஓவருக்கு 7.78 ரன்கள் விகிதம் விட்டுக்கொடுத்துள்ளார்.

மும்பை அணியை பொறுத்தவரையில் அந்த அணி 6 தோல்விகளை சந்தித்ததற்கு முதன்மையான காரணம் மோசமான தொடக்க பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பவர்பிளேவில் அதிக ரன்களை வாரி இறைத்ததுதான். மும்பை அணியின் தொடக்க ஜோடி இதுவரை நடைபெற்ற 8 ஆட்டங்களிலும் முறையே சேர்த்த ரன்கள் 7, 11, 102, 0, 1, 12, 69, 5 இவைதான். தொடக்க வீரர் வரிசைக்கு மாற்றப்பட்ட சூர்யகுமார் யாதவ் (8 ஆட்டங்களில் 283 ரன்கள்), எவீன் லீவிஸ் (7 ஆட்டத்தில் 194 ரன்கள்) ஆகியோர் மட்டுமே ஒழுங்கான முறையில் ரன்கள் சேர்த்து வருகின்றனர். ரோஹித் சர்மா தனது பேட்டிங் வரிசையை மாற்றிக் கொண்டதும், சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவதும் மும்பை அணியை பெரிய அளவில் காயப்படுத்தி உள்ளது.

ஆல்ரவுண்டர்களான கெய்ரன் பொலார்டு, ஹர்திக் பாண்டியா ஆகியோரது மோசமான செயல்திறனும் மும்பை அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. பந்து வீசுவதற்கு முழு உடல் தகுதியுடன் இல்லாத பொலார்டு பேட்டிங்கில் 6 ஆட்டங்களில் வெறும் 76 ரன்களே சேர்த்துள்ளது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியாவோ 8 ஆட்டங்களில் 111 ரன்கள் சேர்த்த நிலையில் பந்து வீச்சில் 11 விக்கெட் வீழ்த்தி உள்ளார். எனினும் வெற்றியை தேடித்தரக்கூடிய அளவிலான இன்னிங்ஸ் அவரிடம் இருந்து ஒரு ஆட்டத்தில் கூட வெளிப்படவில்லை.

இதேபோல் வேகப் பந்து வீச்சில் முஸ்டாபிஸூர் ரஹ்மான், மிட்செல் மெக்லீனகன் ஆகியோர் தொடக்க ஓவர்களிலும் இறுதிகட்ட ஓவர்களிலும் அதிக ரன்களை வாரி வழங்குவது அணியை மேலும் நெருக்கடிக்கு தள்ளுகிறது. இவர்கள் இருவரும் இந்த சீசனில் முறையே சராசரியாக ஓவருக்கு 8.34 மற்றும் 8.66 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர். தாக்கத்தை ஏற்படுத்தாத இவர்களின் பந்து வீச்சால் ஜஸ்பிரித் பும்ராவும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் என்னவென்றால் இளம் ரிஸ்ட் ஸ்பின்னரான மயங்க் மார்க்கண்டேவின் பந்து வீச்சுதான். இந்த சீசனில் 11 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள அவர், சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தி உள்ளார். இன்றைய ஆட்டத்திலும் அவர், சவால் அளிக்கக்கூடும்.

இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெறுவதற்கான வரிசையில் மற்ற அணிகளுடன் இணைய முடியும். ஒவ்வொரு ஆட்டமும் அந்த அணிக்கு நாக் அவுட் போன்றது என்பதால் கட்டாயமாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ச்சியான வெற்றிகளை குவித்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் ஒட்டுமொத்த வீரர்களும் எழுச்சி காண வேண்டிய நிலையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x