Published : 04 May 2018 07:09 AM
Last Updated : 04 May 2018 07:09 AM

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 177 ரன்கள் குவிப்பு

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது.

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் காயம் அடைந்த நித்திஷ் ராணாவுக்கு பதிலாக ரிங்கு சிங் இடம் பெற்றார். எந்தவித மாற்றமும் இல்லாமல் களமிறங்கிய சென்னை அணிக்கு டு பிளெஸ்ஸிஸ், ஷேன் வாட்சன் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. மிட்செல் ஜான்சன் வீசிய முதல் ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. பியூஸ் சாவ்லா வீசிய அடுத்த ஓவரில் டு பிளெஸ்ஸிஸ் இரு பவுண்டரிகள் விரட்டினார்.

எனினும் அடுத்த இரு ஓவர்களை வீசிய சிவம் மாவி, சுனில் நரேன் ஆகியோர் முறையே 6 மற்றும் 5 ரன்களையே விட்டுக்கொடுத்தனர். ஜான்சன் வீசிய 5-வது ஓவரில் டு பிளெஸ்ஸிஸ் ஸ்கொயர் லெக் திசையிலும், வாட்சன் பைன் லெக் திசையிலும் சிக்ஸர் விளாச அந்த ஓவரில் 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. பியூஸ் சாவ்லா வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் டு பிளெஸ்ஸிஸ் மிடில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர், 15 பந்துகளில், 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு வாட்சனுடன் இணைந்து டு பிளெஸ்ஸிஸ் 48 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 2 பவுண்டரிகள் விரட்டினார். அதே ஓவரில் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசப்பட்ட 5-வது பந்தை ரெய்னா அடிக்க முயன்ற போது மட்டை விளிம்பில் பட்டு தினேஷ் கார்த்திக்கிடம் சென்ற நிலையில் அவர் பிடிக்கத் தவறினார். இதனால் ரெய்னா ஆட்டமிழப்பதில் இருந்து தப்பினார். பவர்பிளேவில் சென்னை அணி 57 ரன்கள் எடுத்தது. ஆந்த்ரே ரஸ்ஸல் வீசிய 7-வது ஓவரிலும் ரெய்னா இரு பவுண்டரிகள் விரட்டினார். குல்தீப் யாதவ் ஓவரில் வாட்சன் நேர்திசையில் சிக்ஸர் விளாச 10 ஓவர்களில் சென்னை அணி 90 ரன்கள் குவித்தது.

சீராக ரன்கள் சேர்த்த ஷேன் வாட்சன் 25 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரேன் பந்தில், டீப் மிட்விக்கெட் திசையில் நின்ற சிவம் மாவியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 91 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன் இணைந்து வாட்சன் 43 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து அம்பாட்டி ராயுடு களமிறங்கினார். குல்தீப் யாதவ் வீசிய 14-வது ஓவரின் 4-வது பந்தை ரெய்னா, லாங் ஆன் திசையில் விளாசிய போது மிட்செல் ஜான்சனிடம் கேட்ச் ஆனது. ரெய்னா 26 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய தோனி, அம்பாட்டி ராயுடுவுடன் இணைந்து நிதானமாக விளையாட அணியின் ரன் விகிதம் குறையத் தொடங்கியது. அம்பாட்டி ராயுடு 17 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரேன் பந்தில் போல்டானார். ஸ்டெம்புக்கு உள்ளே வந்த பந்தை அவர், தேர்டுமேன் திசையில் திருப்ப முயன்ற போது கால்காப்புக்கும், மட்டைக்கும் இடையே பந்து ஊடுவிச் சென்று ஸ்டெம்பை பதம் பார்த்தது. அப்போது ஸ்கோர் 14.4 ஓவர்களில் 122 ஆக இருந்தது. இதையடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார்.

சிவம் மாவி வீசிய 16-வது ஓவரின் கடைசி பந்தை தோனி மிட்விக்கெட் திசையில் சிக்ஸராக மாற்றினார். இதைத் தொடர்ந்து ஜான்சன் வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசி மிரளச் செய்தார் தோனி. 19-வது ஓவரை வீசிய சுனில் நரேன் வெறும் 5 ரன்களை மட்டு விட்டுக் கொடுத்து நெருக்கடி கொடுத்தார். இந்த ஓவரில் ஜடோ 4 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 3 ரன்களே சேர்த்தார். பியூஸ் சாவ்லா வீசிய கடைசி ஓவரில் பவுண்டரி அடித்த ஜடேஜா 5-வது பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 12 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் தோனி மிட்விக்கெட் திசையில் பவுண்டரி அடிக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. தோனி 25 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பியூஸ் சாவ்லா, சுனில் நரேன் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து 178 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா பேட் செய்த ஆயத்தமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x