Published : 30 Apr 2018 05:57 PM
Last Updated : 30 Apr 2018 05:57 PM

இன்னும் எவ்வளவு கீழேதான் செல்வீர்கள்? கிரிக்கெட்டைப் பிடித்தாட்டும் பேராசைப் பேய்: இயன் சாப்பல் வேதனை

ஐபிஎல் மூலம் டி20 கிரிக்கெட் பணமழை பொழிந்ததால் நாட்டுக்கு நாடு டி20 கிரிக்கெட் பெரிய அளவில் பெரிய பணத்தாசையுடன் பூதாகாரம் அடைந்து வருகிறது, இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 100 பந்து கிரிக்கெட் என்ற புதிய திட்டத்தை பரிசீலித்து வருவதன் அபாயத்தை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன்சாப்பல் (கிரெக் சாப்பலின் மூத்த சகோதரர்) வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:

பணம் அனைத்து மொழிகளையும் பேச முடியும் என்றால் கிரிக்கெட் உரையாடலில் அது தற்போது சரளமாக புழங்குகிறது. பணம் எனும் கவர்ச்சிதான் கிரிக்கெட் குறித்த முடிவுகளைத் தீர்மானித்து வருகிறது.

தங்கள் நாட்டு வாரியங்கள் குறைவாகப் பணம் கொடுக்கும் வீரர்கள் டி20 பணமழைக்குச் செல்கின்றனர். ஐபிஎல் இதற்கான ஒரு வகைமாதிரியை வழங்கியுள்ளது, அதன் கால(டி) சுவட்டில்தான் மற்றவர்கள் செல்கின்றனர்.

போட்டிகளை நடத்த பெரிய அளவில் பணம் தேவைப்படுகிறது என்பது உண்மைதான், ஆனால் வீரர்கள் திருப்திக்கும் பொழுதுபோக்கு அம்சத்திற்கும் இடையே ஒரு பேலன்ஸ் வேண்டும் என்று கருதுகிறேன். 100 பந்து கிரிக்கெட் இப்படித்தான் வீரர்களின் விருப்பத்தை அறியாமலேயே திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே கேள்வி எழுகிறது: “இன்னும் எவ்வளவு கீழே செல்வீர்கள்?” ஒரு இன்னிங்ஸுக்கு இவ்வளவு ஓவர்கள் போதும் என்பதை 11 வீரர்களும் விரும்பும் முடிவாக எந்தப் புள்ளியில் அமையும்? எங்கு கிரிக்கெட்டின் இயற்கையான பரிணாமம் பலி கொடுக்கப்பட்டு அதி கிரிக்கெட்டும் பேராசையும் ஆதிக்கம் செலுத்தும்?

நூற்றாண்டு காலமாக டெஸ்ட் கிரிக்கெட் 11 வீரர்களின் திருப்தியை மையமாகக் கொண்டிருந்தது. டெஸ்ட் போட்டிகள் போதிய பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டிருந்தது. டெஸ்ட் போட்டிகள் பொழுதுபோக்கு அம்சம் குறையக்குறைய ஒருநாள் போட்டிகள் வந்தன. இதில் கூட 11 வீரர்களுக்குமான இடம் இருந்தது. டெஸ்ட், ஒருநாள் என்று கிரிக்கெட்டுக்கு ஒரு லட்சிய சமச்சீர் தன்மை கிடைத்தது.

ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் முதல் 15 ஓவர்களைப் பார்க்கலாம் பிறகு கடைசி 10 ஓவர்களைப் பார்க்கலாம் என்று வந்தது. நடுஓவர்கள் பொழுதுபோக்காக இல்லை என்ற பார்வை எழுந்தது. இதனையடுத்து டி20 தோன்றியது, ஆனால் 20 கிரிக்கெட் மீதும் ஆர்வம் குறையும்போது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

இதற்குத்தான் 60 பந்து அல்லது 100 பந்து கிரிக்கெட் பற்றி யோசிக்கப்படுகிறது, பொறுமையற்ற ரசிகர்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் இது இனிப்பு வழங்குவதாக இருக்கலாம் ஆனால் வீரர்களுக்கு?

50 ஒவர் கிரிக்கெட்டில் 30 பந்துக்கு ஒருவிக்கெட் என்பது டி20யில் 12 பந்துக்கு ஒரு விக்கெட் ஆனது. இதனால் டி20 கிரிகெட்டில் தொடக்க வீரர்களுக்குத்தான் சாதகமாக அமைந்தது. மற்றவர்களுக்கு மேலதிகமான தியாக் இன்னிங்ஸ்கள்தான் கிடைத்ததே தவிர திருப்தி தரவில்லை...

எனவே அடுத்த கட்ட குறைப்புக்குச் செல்லும் முன் வீரரக்ள், நிர்வாகிகள் ஆலோசிக்க வேண்டிய தேவை உள்ளது.

இவ்வாறு அந்தப் பத்தியில் எழுதியுள்ளார் இயன் சாப்பல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x