Published : 30 Apr 2018 10:04 AM
Last Updated : 30 Apr 2018 10:04 AM

முயற்சியற்ற பீல்டிங், உத்வேகமில்லா கேப்டன்சி: கொல்கத்தாவிடம் மீண்டும் தோற்றது கோலியின் ஆர்சிபி

பெங்களூருவில் நடைபெற்ற 29வது ஐபிஎல் போட்டியில் பெங்களூரு நிர்ணயித்த 176 ரன்கள் வெற்றி இலக்கை கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்தது. ஆர்சிபிக்கு மீண்டும் ஒரு தோல்வி.

ஏ.பி.டிவில்லியர்ஸ் ‘வைரல் காய்ச்சல்’ காரணமாக ஆட முடியவில்லை. மெக்கல்லம் ஆடினார். பீல்டிங்கில் தவறுகளைச் செய்த ஆர்சிபி கோலியின் உத்வேகமில்லா கேப்டன்சியினால் 7 வது போட்டியில் 5வது தோல்வியைச் சந்தித்தது.

கேப்டன் கோலியின் களவியூகப் பிரச்சினைகள்: கற்பனை வளமற்ற கேப்டன்சி!

முதலிலேயே நரைன், சவுதியின் ஒரு ஷார்ட் பிட்ச் எகிறு பந்தை தாறுமாறாக தடுத்தாட கோலி இடது புறம் ஓடி பிறகு முன்னால் ஓடி வந்து கேட்சைப் பிடிக்க முடியவில்லை.

பீல்டர்கள் சரியான இடத்தில் நிறுத்தப்படாததால் நரைன் உமேஷ் யாதவ் பந்தை ஸ்லைஸ் செய்ய ஷார்ட் மிட்விக்கெட்டில் ஒருவருமே இல்லை. உமேஷே பிடித்திருக்கலாம் ஆனால் அவருக்கு காலில் ஏதோ சிக்கல் ஏற்பட்டது.

நரைனுக்கு களவியூகம் சரியாக அமைக்கப்படவில்லை, இதனால் சவுதி ஓவரில் மீண்டும் 2 ரிஸ்க் பவுண்டரிகள் அடித்தார், இரண்டிலுமே அவரை வீழ்த்தியிருக்கலாம் ஆனால் களவியூகம் சரியாக இல்லை. ஒன்றில் பைன் லெக் இல்லை இன்னொன்றில் மிட் ஆன் டீப்பில் இல்லை. அதே ஒவரில் மீண்டும் ஒரு பவுன்சர், தடுத்தாடினார் ஷார்ட் லெக்கில் ஆளில்லை.

இன்பீல்டுக்கு மேல் தூக்கி அடித்த அவரது முயற்சிகளில் சில கேட்ச்கள்தான். ஒழுங்காகத் திட்டமிட்டிருந்தால் ஷார்ட் பிட் ச் உத்தியில் அவரை சடுதியில் பெவிலியன் அனுப்பியிருக்கலாம், ஷார்ட் பிட்ச் போடும் திட்டமிருந்தால் அதற்கான களவியூகம் கோலியிடம் இல்லை.

கிறிஸ் லின் 7 ரன்களில் இருந்த போது சாஹல் பந்தை ஆட முற்பட்டார் ஆனால் முன் விளிம்பில் பட்டு எக்ஸ்ட்ரா கவருக்குச் சென்றது அங்கு முருகன் அஸ்வின் கைக்கு வந்த கேட்சை விட்டார்.

கொலின் டி கிராண்ட்ஹோமுக்கு மீண்டும் பவுலிங் தரவில்லை. அது ஏன் என்பதையும் அவர் கூறுவதில்லை, அவரிடம் இது பற்றி கேள்வி எழுப்புவோரும் இல்லை.

மொத்தத்தில் பதற்றமாகவே இருக்கும் விராட் கோலி ஆட்டம் முழுதிலுமே களவியூகத்தை அமைப்பதில் திணறினார். சும்மா பவுண்டரி போகும்போதெல்லாம் பாடிலாங்குவேஜில் உதார் காட்டுகிறார் அவ்வளவுதான்!

பேட்டிங்கில் கோலி பிரமாதம்!

டிவில்லியர்ஸ் இல்லாததால் 200 ரன்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆடாமல் 175 ரன்களையே எடுத்தது, பெங்களூருவில் இவ்வளவு வருடங்கள் ஆடிய கோலியோ இது 10 ரன்கள் அதிகம் என்று கூறினார், இவருடைய புரிதலே நமக்கு தோல்வியின் காரணத்தைப் புரிய வைக்கிறது.

மெக்கல்லம், டி காக் இறங்கினர், டி காக் சரளமாக ஆடவில்லை, மெக்கல்லமும் இவரும் இணைந்து பவர் பிளேயில் 40 ரன்களையே எடுத்தனர். பவர் பிளேவுக்குப் பிறகுதான் மெக்கல்லம் 2 ஓவர்களில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசி ரன் ரேட்டை 8க்கு உயர்த்தினார். 27பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்த டி காக், குல்தீப் யாதவ்வின் (1/20) பந்தை சரியாக அடிக்க முடியாமல் டீப் கவரில் இளம் வீரரின் ஷுப்மன் கில் கேட்சுக்கு இரையானார்.

4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த மெக்கல்லம், ரஸல் பந்தை புல் ஷாட் ஆடும் முயற்சியில் மட்டையின் அடியில் பட்டு கார்த்திக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்த பந்திலேயே மனன் வோரா இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆக 67/0 என்பதிலிருந்து 75/3 என்று சரிந்தது பெங்களூரு.

டிவில்லியர்ஸ் இல்லாததால் கடைசி வரை நிற்பதை உறுதி செய்த விராட் கோலி முதலில் எச்சரிக்கையுடன் ஆடியதால் ரன் விகிதம் உயரவில்லை அவரே 18 பந்துகளில் 20 ரன்களையே எடுத்தார். இதனால் 10வது ஓவரில் 75/3 என்ற நிலையிலிருந்து 14வது ஓவரில் சொதப்பலான 100/3 என்று இருந்தது.

இந்நிலையில்தான் பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்று எழுந்தார் கோலி, 15வது ஓவரில் நரைனை எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியுடன் தொடங்கினார். பிறகு ஷிவம் மாவியை ஒரு கட், பாயிண்டின் மேல் ஒரு ஷாட் என்று கோலி மேலும் 2 பவுண்டரிகளைக் கூட்டினார். அடுத்த நரைன் ஓவரில் மந்தீப் சிங் மிட்விக்கெட்டில் ஒரு அருமையான சிக்சையும் லாங் ஆனில் ஒரு சிக்சையும் அடித்தார், அதிகம் ஸ்ட்ரைக் கிடைக்காவிட்டாலும் கிடைக்கும் ஸ்ட்ரைக்கை பவுண்டரிகளாக மாற்றுவதில் மந்தீப் வல்லவர் என்பதை இந்த ஐபிஎல் தொடரில் நாம் பார்த்து வருகிறோம், இவரை இன்னும் கொஞ்சம் முன்னால் களமிறக்கலாம். இவர் 14 பந்துகளில் 19 ரன்களுடன் ரஸலிடம் ஆட்டமிழந்தார்

மந்தீப் ஆட்டமிழந்த ஓவரில்தான் கோலி 2 சிக்ஸ்களை ரஸலை விளாசினார். அதில் ஒரு பாட்டம் ஹேண்ட் சிக்ஸ் அடித்தாரே கோலி, அது அற்புதமான சிக்ஸ், கொசு அடிப்பது போல் மட்டையை சுழற்றினார். 38 பந்துகளில் 57 என்று இருந்தார் கோலி. ஜான்சனை கொலின் டி கிராண்ட்ஹோம் கவரில் ஒரு சிக்சரையும் கடைசி பந்தில் கோலி ஜான்சனை ஸ்கொயர்லெக்கில் ஒரு சிக்சரையும் அடிக்க ஸ்கோர் ஒருவழியாக 175 ரன்களை எட்டியது. கோலி 44 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். கிராண்ட் ஹோம் 6 பந்துகளில் 11 ரன்கள். கொல்கத்தா தரப்பில் சாவ்லா, மாவி, குல்தீப் டைட்டாக வீச ரஸல் 3 ஓவர்களில் 31 ரன்களை விட்டுக் கொடுத்தாலும் 3 விக்கெடுகளைக் கைப்பற்றினார்.

கிறிஸ் லின், நரைன், உத்தப்பா அதிரடியில் வெற்றி!

வழக்கம் போல் கிறிஸ் லின், நரைன் தர்பாரைத் தொடங்கினர். மழை வந்து 30 நிமிடங்கள் நீடித்தது. கிறிஸ் லின் பேட்டிங்கில் மாற்றம் தெரிந்தது. பொறுப்புடனும் யோசித்தும் நிதானித்தும் ஷாட்களை தேர்வு செய்தார். ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் உதவிகரமான பிட்சில் கிறிஸ் லின் ஸ்வீப் ஷாட்டை தன் ஆயுதமாக்கி ஆர்சிபியின் 2 ஸ்பின்னர்கள் பந்து வீச்சில் 30 ரன்களை அடித்தார்.

வேகப்பந்து வீச்சில்தான் கிறிஸ் லின் ஆதிக்கம் செலுத்தினார் ஏனெனில் அப்போதுதான் அவர் கட், புல், டிரைவ் என்று சரளமாக ஆடினார். 14வது ஒவரில் தன் 42வது பந்தில் கிறிஸ் லின் அரைசதம் கண்டார். பொறுப்புடன் ஆடியதால் டி20-யில் இது அவரது மெதுவான அரைசதமானது.

கிறிஸ் லின் 7 ரன்களில் இருந்த போது முருகன் அஸ்வின் கேட்சைக் கோட்டை விட்டார், அதனை முழுதும் பயன்படுத்திய கிறிஸ் லின் 52 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

நரைன் 19 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். களவியூகம் சரியில்லாததால் பீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்தாததால் நரைன் ஆடிய சில ஷாட்கள் பீல்டருக்கு அருகில் கேட்ச்களாக சில வேளைகளில் சென்றன.

உத்தப்பா இறங்கி அனாயசமாக 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். ஆனால் லாங் ஆனில் டிம் சவுதி எம்பிப் பிடித்த கேட்சுக்கு வெளியேறினார். ராணா 15 ரன்களில் முதுகு வலியால் ஆட முடியாமல் வெளியேற, அதே ஓவரில் ரஸல் தன் 30வது பிறந்த நாளில் முதல் பந்திலேயே சிராஜிடம் அவுட் ஆனார். புல் ஷாட் டாப் எட்ஜ் ஆகி டி காக் கேட்ச் எடுத்தார். 17 ஓவர்கள் முடிவில் 147/3 என்று இருந்த போது 3 ஓவர்களில் 29 ரன்கள் என்று ஆர்சிபி ரசிகர்கள் தரப்பில் கொஞ்சம் வெற்றி நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால் தினேஷ் கார்த்திக் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 10 பந்துகளில் 23 விளாசி வெற்றியை உறுதி செய்த பிறகு 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். உமேஷ் யாதவ் ஓவரில் கடைசியில் ஷுப்மன் கில் பவுண்டரி அடித்து வெற்றி ரன்களை எடுத்தார். ஆட்ட நாயகன் கிறிஸ் லின். கொல்கத்தா தரப்பில் முருகன் அஸ்வின், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x