Published : 30 Apr 2018 08:07 AM
Last Updated : 30 Apr 2018 08:07 AM

கேன் வில்லியம்ஸன் அதிரடி ஆட்டம்: ஹைதராபாத் அபார வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றது.

இந்த ஆட்டம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. டாஸில் வென்று முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

ராஜஸ்தான் அணியில் புதிதாக மஹிபால் லோம்ரார் இணைந்திருந்தார். அதே நேரத்தில் ஹைதராபாத் அணியில் நபிக்குப் பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸ் இணைந்தார்.

ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெக்ஸ் ஹேல்ஸும், ஷிகர் தவணும் களமிறங்கினர். இந்தத் தொடரில் பார்மின்றி தவித்து வரும் ஷிகர் தவண் இந்த ஆட்டத்திலும் விரைவாக வெளியேறினார். அவர் 6 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து கேப்டன் கேன் வில்லியம்ஸன், ஹேல்ஸுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானத்துடன் ஆடினர். பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 12-வது ஓவரை உனத்கட் வீசினார். இதில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் கேன் வில்லியம்ஸன். இதனால் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது. இந்த நிலையில் அபாரமாக ஆடிக் கொண்டிருந்த அலெக்ஸ் ஹேல்ஸை, கவுதம் வீழ்த்தினார். ஹேல்ஸ் 39 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார்.

இதன் பின்னர் மணீஷ் பாண்டே, வில்லியம்ஸனுடன் இணைந்தார். ஒரு முனையில் வில்லியம்ஸன் வேகம் காட்டி அரை சதத்தைக் கடந்தார். அவர் 43 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்தபோது, இஷ் சோதி பந்தில் வீழ்ந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். இதைத் தொடர்ந்து விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்தன. மணீஷ் பாண்டே 16, ஷகிப் அல் ஹசன் 6, யூசுப் பதான் 2, ரஷீத் கான் 1 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 7 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. விருத்திமான் சஹா 11 ரன்களும், பசில் தம்பி ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்களைச் சாய்த்தார். கிருஷ்ணப்பா கவுதம் 2 விக்கெட்கள், இஷ் சோதி, ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியினர் விளையாடத் தொடங்கினர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரகானேவும், ராகுல் திரிபாதியும் களமிறங்கினர். திரிபாதி 4 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். சாம்சன் அதிரடியாக ஆடி 30 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும்.

இதைத் தொடர்ந்து ரகானேவுடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். ஆனால் அவர் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். ரன் எடுக்காத நிலையில் அவர் யூசுப் பதான் பந்தில் வீழ்ந்தார். அதன் பின்னர் வந்த ஜோஸ் பட்லரும் அடித்து ஆட முற்பட விரைவாக தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். தொடர்ந்து ரகானேவுடன், மஹிபால் ரோம்ரார் இணைந்தார்.

இந்த நிலையில் கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டன. 18-வது ஓவரில் ஒரு சிக்ஸர் உட்பட 9 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதையடுத்து கடைசி 12 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை கவுல் வீசினார். இந்த ஓவரில் அவர், மஹிபாலை, வீழ்த்தினார். இதையடுத்து கிருஷ்ணப்பா கவுதம் களமிறங்கினார்.

19-வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டும் கிடைத்தன. வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. ஓவரை பசில் தம்பி வீசினார். இந்த ஓவரை சிறப்பாக வீசி, ராஜஸ்தானைக் கட்டுப்படுத்தினார் பசில் தம்பி. மேலும், கவுதமையும் அவர் ஆட்டமிழக்கச்ச செய்தார்.

இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 6 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. ரஹானே 65 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம் 6-வது வெற்றியைப் பெற்ற ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் இந்தத் தொடரில் தனது 4-வது தோல்வியைப் பதிவு செய்தது. ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்ஸன் தேர்வானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x