Published : 09 Apr 2018 08:41 PM
Last Updated : 09 Apr 2018 08:41 PM

பேட்டிங் கவலைகளுடன் தோனியின் சிஎஸ்கே: தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தாவை முறியடிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

கடந்த ஞாயிறன்று பார்ட் டைம் ஸ்பின்னர், சுனில் நரைன் என்ற அதிரடி வீரரை வைத்து பயங்கர ஸ்டார்கள் நிறைந்த பெங்களூரு அணியை ஊதிய தினேஷ் கார்த்திக் தலைமை கொல்கத்தா அணியை தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செவ்வாயன்று சந்திக்கிறது.

காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டக்காரர்கள், அரசியல் சக்திகள் சென்னையில் போட்டிகளை நடத்தக் கூடாது என்று குரல் கொடுத்து வரும் நிலையில் போட்டிகளை மாற்ற வாய்ப்பில்லை என்று பிசிசிஐயின் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

அன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டிவைன் பிராவோ மட்டுமே பேட்டிங்கில் பார்மில் இருப்பது தெரிய வந்தது. மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை, சென்னை அணி இன்னமும் சரியாக ‘ஜெல்’ ஆகவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. பவுலிங்கில் தீபக் சாஹர், ஷேன் வாட்சன், பிராவோ தவிர மற்றவர்கள் சரியாக வீசவில்லை.

பெரிய கவலை ஹர்பஜன் சிங், மற்றும் ஜடேஜாவின் பந்து வீச்சு ஆகும். இம்ரான் தாஹிரையே அன்று மும்பை புரட்டி எடுத்தனர். மார்க் உட் பந்து வீச்சும் 40 ரன்களுக்கும் மேல் சென்றது.

மாறாக தன்னம்பிக்கையின் உச்சத்தில் தினேஷ் கார்த்திக் தலைமை கொல்கத்தா அணி களமிறங்குகிறது, ஒரு புறம் தமிழகத்தைச் சேர்ந்த 8 பந்து 23 ரன்கள் வெற்றி புகழ் தினேஷ் கார்த்திக் தன் சொந்த மைதானத்தில் வேறு அணிக்குக் களமிறங்குகையில், ரசிகர்களால் ‘தல’ என்று அழைக்கப்படும் தோனி தலைமையில் நாளை ஆட்டம் சேப்பாக்கம் ரசிகர்களினால் களைகட்டும் என்று கருத இடமுண்டு.

சென்னையில் ஆடிய போட்டிகளில் சிஎஸ்கே பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது மட்டுமே சிஎஸ்கேயின் வலுவாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே தங்கள் சொந்த மண்ணான சென்னை பிட்ச் நிலைமைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட அணி என்றே பலராலும் கருதப்படுகிறது. ஆனால் ஸ்பின் பந்து வீச்சில் சுனில் நரைன், தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, ராணா ஆகியோர் சிறந்து விளங்குகிறார்கள், குறிப்பாக தினேஷ் கார்த்திக்கை ஸ்பின்னில் வீழ்த்துவது கடினமானது.

சென்னை அணியின் பேட்டிங் கவலைகள்:

கேதார் ஜாதவ் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து காயம் காரணமாக விலகியதையடுத்து சென்னை மிடில் ஆர்டரில் ஒரு பெரிய துளை விழுந்துள்ளது, டுபிளெசிஸ் இன்னமும் விரல் காயத்திலிருந்து விடுபடாததால் மொஹாலியில் அடுத்து கிங்ஸ் லெவன் அணிக்கு எதிராகவே களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

முரளி விஜய்யும் வலைப்பயிற்சியின் போது விலா எலும்பில் அடி வாங்கியதால் முதல் போட்டியில் விளையாட முடியவில்லை என்று பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது அவர் விளையாடத் தயார் என்று கூறிய ஹஸ்ஸி, இருந்தாலும் கேப்டனின் உள்ளுணர்வு என்ன கூறுகிறதோ அதன்படியே தேர்வு நடக்கும் என்றும் கூறியுள்ளார்.

முரளி விஜய், ஷேன் வாட்சன் தொடக்கத்தில் களமிறங்க கேதார் ஜாதவ் இடத்தில் ராயுடு களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது. மிகப்பெரிய தொடர் என்பதால் ஒரு வெற்றியை அதுவும் பிராவோ அடித்ததை மட்டும் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னம்பிக்கையுடன் ஆடுவதாகக் கூற முடியவில்லை. சுரேஷ் ரெய்னா இன்னமும் கூட தன் ஷார்ட் பிட்ச் பந்து பலவீனத்தை சரி செய்து கொள்ளாமல் ஆடுவது அவரது முயற்சியின்மையையே காட்டுகிறது. அன்று கூட ஹர்திக் பாண்டியாவே அவரை சோதனைக்குள்ளாக்கியதைப் பார்த்தோம்.

ஹோம் கமிங் அல்லது தாய்வீடு திரும்புதல், தல தோனி, என்றெல்லாம் பில்ட் அப் கொடுத்தாலும் நாளை வெற்றி பெற்றால்தான் சென்னை அணியைப் பற்றி முழுதாக அறுதியிட முடியும். சென்னை அணியில் பெஞ்ச் ஸ்ட்ரெந்த் பற்றியும் உறுதியாக எதுவும் கூற முடியவில்லை. அதுவும் இளம் வீரர்கள் மேல் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்குக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லாத போது அவர்கள் எப்படி உத்வேகம் பெற முடியும்? எவ்வளவு இளம் வீரர்கள் அதிக ரன்கள் பட்டியலில் வந்துள்ளனர் என்று கேள்வியை அன்று அவர் முன் வைத்ததோடு, வயதான் வீரர்களுக்கு முன்னுரிமை அளித்தது உண்மைதான் என்று ஒப்பும் கொண்டுள்ளார். எனவே சென்னை அணிக்கு கவலைகள் அதிகம்.

மேலும் ஸ்பின் பிட்ச் என்றாலும் கொல்கத்தா அணியில் சுனில் நரைன், குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோர் உள்ளனர். இவர்களை அடித்து நொறுக்கும் சாத்தியம் அங்கு ஷேன் வாட்சன், பிராவோ ஆகியோருக்கு உள்ளது, தோனி தன் ஆட்டப்பாணியை மாற்றினால்தான் அணிக்கு உத்வேகம் பிறக்கும். அவர் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள 5-ம் நிலையில் களமிறங்குவதுதான் சரி.

மேலும் இங்கிலாந்தின் டாம் கரன் கொல்கத்தா அணியில் ஆடினால் அவரது யார்க்கர்கள், வேகம் குறைந்த பந்துகள் பெரும் சென்னைக்கு ஒரு தலைவலியாக அமையும். ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு, உள்ளூர் சாதகம் என்று சென்னைக்கு வெற்றி சூழ்நிலைகள் அதிகம் என்றாலும் சிங்கத்தை அதன் குகைக்குள் வந்து பிடரியைப் பிடித்து உலுக்கப்போவதும் இன்னொரு சிங்கம் தினேஷ் கார்த்திக்தான் என்பதை மறுதலிக்க முடியாது.

மார்க் உட்டுக்குப் பதில் ஒன்று லுங்கி இங்கிடி இறங்கலாம் அல்லது ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்றே தெரிகிறது.

கொல்கத்தா அணியில் யு-19 உலகக்கோப்பையில் கலக்கிய 2 அதிவேகப் பவுலர்களான நாகர்கோடி, மால்வி ஆகியோரும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது. எது எப்படியிருந்தாலும் இன்னொரு செம ரகளைப் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாகக் காத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x