Published : 09 Apr 2018 10:57 AM
Last Updated : 09 Apr 2018 10:57 AM

என் கடன் மட்டை சுழற்றுவதே; முதல் பந்தில் அவுட் ஆனாலும் ஓகே: சுனில் நரைன்

சுனில் நரைன் சில காலங்களாக திடீரென ஒரு அதிரடி தொடக்க வீரராக மாறிவிட்டார், அதுவும் பவுலிங்கில் அவர் பந்து வீச்சு மீது த்ரோ குற்றச்சாட்டு எழுந்து அச்சுறுத்தும் பவுலர் என்ற நிலை கைதவற பேட்டிங்கில் அவர் கவனம் திரும்பியது.

அவர் தன் கவனத்தை பேட்டிங்கில் திருப்பியதோடு ரசிகர்களின் கவனத்தையும் தன் பேட்டிங் மீது திருப்பியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் இவரும் கிறிஸ் லின்னும் ஆர்சிபி அணிக்கு கொடுத்த அதிர்ச்சி அதிரடியை கோலி உட்பட ஒருவரும் மறக்க முடியாது.

டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு ஆட வாய்ப்பு கிடைப்பதில்லை, அவர் ஒருபவுலராக ஆடிய போது 48 டி20 சர்வதேச போட்டிகளில் மொத்தம் 147 ரன்கள்தான் ஆனால் ஸ்ட்ரைக் ரேட் 126 என்று வைத்திருந்தார்.

ஆனால் பேட்டிங் சரவெடிக்குத் திரும்பிய பிறகு மொத்தம் 272 டி20 போட்டிகளில் 1321 ரன்களை 143.58 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளதோடு 5 அரைசதங்கள், 114 பவுண்டரிகள் 78 சிக்சர்கள் என்று வெளுத்துக் கட்டி வருகிறார்.

இந்நிலையில் மீண்டுமொருமுறை நேற்று ஆர்சிபி அணியை புரட்டி எடுத்த சுனில் நரைன் 17 பந்துகளில் 4 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ்விடம் பவுல்டு ஆனார்.

ப்ளே என்றவுடனேயே சாஹலை ஒரு நேராக ஒரு பவுண்டரி பிறகு ஒரு அரக்க ஸ்வீப்பில் சிக்ஸ் என்று தொடங்கினார்

பிறகு வோக்ஸ் ஓவரை சற்றும் எதிர்பாராத விதமாக புரட்டி எடுத்தார் முதலில் ஒரு லாங் ஆன் சிக்ஸ். பிறகு ஒதுங்கி கொண்டு கவரில் ஒரு நான்கு. அடுத்த பந்தும் கோலியின் கணிப்பைப் பொய்யாக்கி கவரில் ஒரு பவுண்டரி. அடுத்த ஷார்ட் பிட்ச் பந்தை ஈ அடிப்பது போல் மிட்விக்கெட் மேல் சிக்ஸ், மொத்தம் 20 ரன்கள்.

அடுத்து வாஷிங்டன் சுந்தர் வந்தார், ஆக்ரோஷ சக்தியுடன் மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி, அடுத்து மிட் ஆஃபுக்கு மேல் ஒரு தூக்கி விட்டார் சிக்ஸ்.

அடுத்த ஷாட் டீப் மிட்விக்கெடில் சிக்ஸ் ஆனது, ஆனால் இதனை மந்தீப் கேட்ச் பிடிக்காமல் தட்டி விட்டிருந்தால் 2 ரன்கள்.. ஏன் 1 ரன்னாகக் கூட ஆகியிருக்கும். பவுண்டரிக்குள் கேட்ச் எடுத்தார் மந்தீப் ஆனால் பேலன்ஸ் தவறி எல்லைக்கோட்டின் மேல் விழுந்தார். இதனை நடுவர் ஷம்சுதின் அவுட் என்றார் பலருக்கும், நமக்கும் வர்ணனையாளர்களுக்குமே அதிர்ச்சிதான். ஆனால் 3வது நடுவர் நாட் அவுட் என்றார். கள நடுவர்கள் சூப்பர்ஸ்டார்கள் அணிக்குச் சார்பாக இந்தத் தொடரில் செயல்படலாம் என்பதற்கான 3வது உதாரணம்.

முதலில் தோனிக்கு பிளம்ப் எல்.பியைத் தராதது, 2-வது சுனில் நரைனுக்கு நாட் அவுட்டை அவுட் என்றது, 3வது ராணா பேட் செய்த போது கிறிஸ் வோக்ஸுக்கு நோ-பால் கொடுக்காதது. இந்தத் தொடரில், தோனி, கோலி, ரோஹித் சர்மா அணிகள் ஆடும்போது நடுவர்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

சரி. சுனில் நரைன்.19 ரன்களை வாஷிங்டன் சுந்தர் ஓவரில் சேகரித்து 17 பந்துகளில் அரைசதம் கண்டார்.

இந்நிலையில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட சுனில் நரைன் கூறியதாவது:

எடுத்த எடுப்பிலிருந்தே பந்துகளை அடித்து ஆடுவது நல்லதே. நான் என்னை தொடக்க வீரராகக் கருதவில்லை. ஆனால் பந்துகளை அடித்து நொறுக்க வேண்டும் என்பதே எனக்கு இட்டபணி, இதனால் முதல் பந்தில் அவுட் ஆனாலும் ஓகேதான் கவலையில்லை.

என்று கூறியுள்ளார் சுனில் நரைன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x