Published : 09 Apr 2018 08:41 AM
Last Updated : 09 Apr 2018 08:41 AM

காமன்வெல்த் விளையாட்டு போட்டி: பளு தூக்குதலில் இந்தியாவுக்கு 5-வது தங்கம்- துப்பாக்கி சுடுதலில் மனு பாகருக்கு தங்கம்; டேபிள் டென்னிஸில் இந்திய மகளிர் அணி சாதனை

காமன்வெல்த் விளையாட்டு பளு தூக்குதலில் இந்தியா 5-வது தங்கப் பதக்கம் வென்றது. துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாகர் தங்கம் வென்று அசத்தினார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் பளு தூக்குதலில் மகளிருக்கான 63 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பூனம் யாதவ் 222 கிலோ (100+122) எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். 2014-ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், தற்போது தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.

இங்கிலாந்தின் சாரா டேவிஸ் 217 கிலோ (95+122) எடையை தூக்கி வெள்ளிப் பதக்கமும், பிஜி நாட்டின் அபோலோனியா 216 கிலோ (100+116) எடையை தூக்கி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

இந்தத் தொடரில் பளு தூக்குதலில் மட்டும் இந்தியா 5 தங்கம் வென்றுள்ளது. மீராபாய் சானு, சஞ்ஜிதா சானு, சதீஷ் குமார், வெங்கட் ராகுல் ரகலா ஆகியோரும் தங்கப் பதக்கம் கைப்பற்றியுள்ளனர்.

ஆடவருக்கான பளு தூக்குதலில் 94 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் விகாஷ் தாக்குர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். அவர், 351 கிலோ (159+192) எடையை தூக்கினார். பப்புவா நியூ கினியாவின் ஸ்டீவன் கரி 370 கிலோ (154+216) எடையை தூக்கி தங்கப் பதக்கமும், கனடாவின் சான்டாவி 369 கிலோ (168+201) எடையை தூக்கி வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

துப்பாக்கி சுடுதல்

துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் 240.9 புள்ளிகள் குவித்து சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஹீனா சித்து 234 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், ஆஸ்திரேலியாவின் எலினா கலியாபோவிச் 214.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ரவி குமார் 224.1 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவின் டேன் சாம்சன் 245 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், வங்கதேசத்தின் அப்துல்லா பாகி 244.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

ஹாக்கியில் வெற்றி

மகளிர் ஹாக்கியில் இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தை அதிர்ச்சியளிக்கும் வகையில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. முதல் நிமிடத்திலேயே இங்கிலாந்து கேப்டன் அலெக்சான்ட்ரா கோல் அடித்தார். இதற்கு இந்திய அணியால் ஆட்டத்தின் 3-வது கால்பகுதியில் தான் பதிலடி கொடுக்க முடிந்தது. 42-வது நிமிடத்தில் நவ்னீத் கவுத் கவுர் அடித்த கோலால் ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது. அடுத்த 8-வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் அடித்த கோல் வெற்றி கோலாக அமைந்தது.

ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் எஸ்வி சுனில், தில்பிரீத் சிங், மன்தீப் சிங், ஹர்மான்பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் 59-வது நிமிடத்தில் எஸ்வி சுனில் அடித்த கோல்தான் வெற்றி கோலாக மாறியது. வேல்ஸ் அணி தரப்பில் கரேத் புர்லாங் ஹாட்ரிக் கோல் அடித்தார்.

டேபிள் டென்னிஸ்

மகளிருக்கான டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் இந்தியா இறுதிப் போட்டியில் 3-1 என்ற கணக்கில் 4 முறை சாம்பியனான சிங்கப்பூரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. ஒற்றையர் பிரிவில் 58-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் மனிகா பத்ரா, 4-ம் நிலை வீராங்கனையான சிங்கப்பூரின் பெங் தியான் வெயியை 11-8, 8-11, 7-11, 11-9, 11-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அடுத்த ஆட்டத்தில் சிங்கப்பூரின் மெங்யு யூ 13-11, 11-2, 11-6 என்ற நேர் செட்டில் இந்தியாவின் மதுரிகா பட்கரை வீழ்த்த ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் பிரிவில் மவுமா தாஸ், மதுரிகா பட்கர் ஜோடி 11-7, 11-6, 8-11, 11-7 என்ற செட் கணக்கில் யியான், மெங்யு யூ ஜோடியை வீழ்த்தியது. வெற்றியை தீர்மானிக்கும் அடுத்த ஆட்டத்தில் மனிகா பத்ரா 11-7, 11-4, 11-7 என்ற நேர் செட்டில் யியானை வீழ்த்த இந்திய அணி முதன்முறையாக காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. 2002-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பிரிவில் சிங்கப்பூர் அணியே ஆதிக்கம் செலுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்மிண்டன்

பாட்மிண்டன் கலப்பு அணிகள் பிரிவு அரை இறுதியில் இந்தியா 3-1 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. இதன் மூலம் இந்திய அணி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. ஒற்றையர் பிரிவில் சாய்னா நெவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோரும், கலப்பு இரட்டையரில் சாட்விக் ராங்கி ரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடியும் வெற்றியை பதிவு செய்தது. அதேவேளையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாட்விக் சாய்ராஜ், ஷிராக் ஷெட்டி ஜோடி தோல்வி கண்டது.

குத்துச்சண்டை

மகளிருக்கான குத்துச்சண்டையில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மேரி கோம் 5-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் மீகன் கோர்டனை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். ஆடவருக்கான 75 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் விகாஷ் கிருஷன் 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் கேம்பெல் சோமர்வில்லேவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தேஜேந்தர் சிங் 19.10 மீட்டர் தூரம் எறிந்து 12-வது வீரராக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x