Last Updated : 06 Apr, 2018 08:10 PM

 

Published : 06 Apr 2018 08:10 PM
Last Updated : 06 Apr 2018 08:10 PM

மிகப்பெரிய திரையில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்கலாம்: நெல்லை உள்பட 36 நகரங்களில் ஃபேன் பார்க்

 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக மைதானத்தில் பாரக்க முடியாத ரசிகர்களுக்காக, திறந்தவெளி மைதானத்தில் மிகப்பெரிய திரையில் போட்டிகளை ஒளிபரப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு ‘ஃபேன் பார்க்’ என்ற அடிப்படையில் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் இந்த வசதியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது. இந்த முறை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இந்த மிகப்பெரிய வெண்திரை மூலம் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை அருகே இருந்து பார்த்த உணர்வைப் பெற முடியும்.

இந்தத் திட்டத்தின்படி நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் மிகப்பெரிய வெண்திரை அமைக்கப்படும். அதில் ஐபிஎல் போட்டிகளின் நேரடி ஒளிபரபப்பு செய்யப்படும். இந்தப் போட்டிகளை பார்க்க ரசிகர்களுக்கு எந்தவிதமன கட்டணமும் கிடையாது. இலவசமாகக் கண்டு ரசிக்கலாம்.

மேலும், பெண்கள், குழந்தைகள் வந்து பார்ப்பதற்கு இந்த ஆண்டு சிறப்பு வசதிகளும், அவர்களுக்கென தனியாக இடமும் ஒதுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த ‘ஃபேன்பார்க்’ இந்த ஆண்டு முதல் 19 மாநிலங்களில் 31 நகரங்களுக்கு விரிவுபடுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ ஃபேன்பார்க் அமைப்பின் பிரதிநிதி ஆனந்த் தாதர் கூறியதாவது:

''குஜராத் மாநிலத்தில், சூரத், நதியாத் ஆகிய நகரங்களும், தமிழகத்தில் நெல்லை, மத்தியப் பிரதேசம் போபால், ராய்பூர், ராஜ்கோட் உள்ளிட்ட 36 நகரங்களில் இந்த முறை 'ஃபேன்பார்க்' வசதி செய்யப்பட உள்ளது.

பிசிசிஐ அமைப்பின் பிரதான நோக்கமே, ரசிகர்கள் உற்சாகமாகப் போட்டியைக் காண வேண்டும், அதிகமான பகுதிகளுக்கு போட்டி சென்று சேர வேண்டும் என்பதுதான். ஆதலால், ஐபிஎல் போட்டி நடக்காத நகரங்கள், மாநிலங்களின் மக்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்காக அந்த நகரங்களில் 'ஃபேன்பார்க்' வசதி செய்யப்படும்.

பிசிசிஐ செய்யும் இந்த 'ஃபேன்பார்க்' வசதிக்கு மக்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அடுத்த ஆண்டும் இன்னும் கூடுதல் நகரங்களுக்கு இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.''

இவ்வாறு ஆனந்த் தாதர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x