Published : 06 Apr 2018 07:52 AM
Last Updated : 06 Apr 2018 07:52 AM

கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டு: பளு தூக்குதலில் தங்கம் வென்று சாதனை படைத்தார் மீராபாய் சானு- குருராஜா வெள்ளி பதக்கம் கைப்பற்றினார்; டேபிள் டென்னிஸ், பாட்மிண்டனில் இந்தியா அசத்தல்; மகளிர் ஹாக்கியில் ஏமாற்றம்

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான பளு தூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு சாதனை படைத்து தங்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நேற்று மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் பளு தூக்குதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு மொத்தம் 196 கிலோ (ஸ்னாட்ச் முறையில் 86 கிலோ, கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் 110 கிலோ) எடையை தூக்கி காமன்வெல்த் சாதனை படைத்ததோடு தங்கப் பதக்கம் வென்றார்.

11 வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் பிரிவில் ஸ்னாட்ச் முறையில் முதல் முறை 81 கிலோ தூக்கிய மீராபாய் சானு பின்னர் முறையே 84, 86 கிலோ எடையை தூக்கி அசத்தினார். தொடர்ந்து கிளீன் மன்றும் ஜெர்க் முறையில் முறையே 103, 107, 110 கிலோ எடையை தூக்கி சக போட்டியாளர்களை மிரளச் செய்தார். இதுவும் காமன்வெல்த் சாதனையாக அமைந்தது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மீராபாய் சானு தூக்கிய 6 எடைகளும் சாதனையாக அமைந்தன.

இதற்கு முன்னர் 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் நைஜீரிய வீராங்கனையான அகஸ்டினா 175 கிலோ எடையை தூக்கியதே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் மீராபாய் சானு 194 கிலோ எடையை தூக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

கடந்த முறை கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்த மீராபாய் சானு இம்முறை தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். மொரீஷியஸின் மேரி ரனைவோசோவா (76 கிலோ + 94 கிலோ) வெள்ளிப் பதக்கமும், இலங்கையினி தினுஷா கோம்ஸ் (70 கிலோ + 85 கிலோ) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

குருராஜா அசத்தல்

ஆடவருக்கான 56 கிலோ பளு தூக்குதலில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார். கோல்டு கோஸ்ட் தொடரில் இதுதான் இந்தியாவின் முதல் பதக்கமாக அமைந்தது. குருராஜா மொத்தம் 249 கிலோ (111+138) எடையை தூக்கினார். மலேசியாவின் முகமது இஷார் அகமது 261 கிலோ (117+144) எடையை தூக்கி சாதனை படைத்ததுடன் தங்கப் பதக்கம் வென்றார். இலங்கையின் லக்மல் சதுரங்கா 248 கிலோ (114+134) எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

ஸ்குவாஷ்

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 11-3, 11-7, 11-2 என்ற நேர் செட்டில் பப்புவா நியூ கினியாவின் லைனெட்டி வேயையும், தீபிகா பல்லிகல் 11-6, 11-5, 11-5 என்ற செட் கணக்கில் டிரினிடாட்டின் சார்லோட்டியையும் வீழ்த்தினர். ஆடவர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷல் முதல் சுற்றில் 11-5, 11-7, 8-11, 9-11, 10-12 என்ற செட் கணக்கில் ஜமைக்காவின் கிறிஸ்டோபரிடம் தோல்வியடைந்தார். அதேவேளையில் ஹரிந்தர் பால் சாந்து 8-11, 6-11, 1-11 என்ற செட் கணக்கில் மலேசியாவின் இவான் யுவானிடம் வீழ்ந்தார்.

டேபிள் டென்னிஸ்

மகளிருக்கான டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தியது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா 11-3, 11-5, 11-3 என்ற நேர் செட்டில் எரண்டி வாருசவிதனாவையும், சுதிர்தா முகர்ஜி 11-5, 11-8, 11-4 என்ற நேர் செட்டில் இஷாரா மனிக்கூ பாதுவையும் வீழ்த்தினர். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுதிர்தா, பூஜா ஜோடி 11-6, 11-7, 11-3 என்ற செட் கணக்கில் ஹன்சானி, இஷாரா ஜோடியை வீழ்த்தியது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் இந்தியா முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் டிரினிடாட்டையும், 2-வது ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தையும் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது.

பாட்மிண்டன்

பாட்மிண்டன் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா 5-0 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தியது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-16, 21-10 என்ற நேர் செட்டில் நிலுகா கருணாரத்னேவயும், சாய்னா நெவால் 21-8, 21-4 என்ற நேர் செட்டில் மதுஷிகா திலுருக் ஷியையும் எளிதாக வீழ்த்தினர். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ருத்விகா ஷிவானி காடே, பிரணவ் ஜெர்ரி சோப்ரா ஜோடி 21-15, 19-21, 22-20 என்ற செட் கணக்கில் சச்சின் தியாஸ், திலினி பிரமோடிகா ஜோடியை வென்றது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி 21-17, 21-14 என்ற நேர் செட்டில் தினுகா கருணாரத்னே, புவனேகா கோனேதிலகா ஜோடியை வீழ்த்தியது. மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி 21-12, 21-14 என்ற நேர் செட்டில் திலினி பிரமோடிகா, கவிதி சிரிமானேஜ் ஜோடியை தோற்கடித்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியது.

ஹாக்கியில் ஏமாற்றம்

மகளிர் ஹாக்கியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. 7-வது நிமிடத்தில் லிசா அடித்த பீல்டு கோலாலும், 26-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் சியான் பிரஞ்சு அடித்த கோலாலும் தொடக்கத்திலேயே வேல்ஸ் அணி 2-0 என முன்னிலை வகித்தது. 34-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலமும் கேப்டன் ராணி ராம்பாலும், அடுத்த சில நிமிடங்களில் நிக்கி பிராதான் அடித்த பீல்டு கோலாலும் இந்திய அணி ஆட்டத்தை 2-2 என சமநிலைக்கு கொண்டு வந்தது. ஆனால் ஆட்டம் முடிவடைய 3 நிமிடங்கள் இருந்த நிலையில் வேல்ஸ் வீராங்கனை மார்க் ஜோன்ஸ் பீல்டு கோல் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். பெரிய அளவிலான தொடரில் இந்திய அணி, வேல்ஸ் நாட்டிடம் தோல்வியடைவது இதுவே முதன்முறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x