Published : 20 Mar 2018 02:27 PM
Last Updated : 20 Mar 2018 02:27 PM

தினேஷ் கார்த்திக் மட்டுமல்ல இவர்களும்தான்: கடைசிப் பந்தில் ஆட்டத்தின் முடிவை மாற்றிய வீரர்கள்

 

பேஸ்புக், ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இப்போது பரபரப்பாக பேசப்படும் வார்த்தை தினேஷ் கார்த்திக்.அதிலும் அவர் வங்கதேசத்துக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் அடித்த சிக்ஸர் தான்… ஆட்டத்தின் போக்கை மாற்றி இந்திய அணிக்கு வெற்றித் தேடித்தந்தது.

8 பந்துகளை மட்டும் சந்தித்த தினேஷ் கார்த்திக் 360 டிகிரி கோணத்திலும் தனது பேட்டை சுழற்றி 29 ரன்கள் சேர்த்தார். அதிலும் ரூபெல் ஹூசைன் வீசிய 19-வது ஓவரில் 6,4,6,0,2,4 ரன்களை தினேஷ் ஸ்கோர் செய்தார்.

கடைசி நேரத்தில் இவரைக் களமிறக்காமல் சற்று முன்னதாகவே களம் இறக்கி இருந்தால், ஒருசில ஓவர்களுக்கு முன்பே ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக முடிந்திருக்கும் என்று ரசிகர்கள் அங்கலாய்க்கிறார்கள்.

கொழும்பு நகரில் நடந்த நிடாஹஸ் கோப்பைக்கான டி20 முத்தரப்பு தொடரில் வங்கதேசத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. கடைசிப் பந்தில் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸர் எப்படி ஆட்டத்தின் போக்கை தீர்மானித்ததோ அதேபோல கிரிக்கெட் வரலாற்றில சில போட்டிகளும் ஆட்டத்தின் முடிவையே புரட்டிப்போட்டுள்ளன. அந்தப் போட்டிகள் குறித்து பார்க்கலாம்.

இந்தியா-பாகிஸ்தான்(1986-ஷார்ஜா) மறக்கமுடியாத மியான்தத் ஆட்டம்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே களத்தில் மட்டுமல்ல, ரசிகர்கள் மத்தியிலும் அனல் பறக்கும். அதுபோலத்தான் இந்த ஆட்டமும் அமைந்தது.

கடந்த 1986-ம் ஆண்டு ஷார்ஜாவில் ஆஸ்திரேலியா ஆசியக் கோப்பைப் போட்டி நடந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 245 ரன்கள் சேர்த்தது. 246 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் சதம் அடித்த மியான்தத் அசுர பார்ஃமில் இருந்தார். விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தாலும் சளைக்காமல் களத்தில் இருந்தார். கடைசி வீரர் தவுசீப் அகமது, மியான்தத்துடன் விளையாடி வந்தார்.

கடைசி ஓவர் கடைசி பந்தில்வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டன. இந்திய வீரர் சேட்டன் சர்மா பந்து வீசினார். கடைசிப் பந்தை சேட்டன் சர்மா பந்தை புல்டாஸாக வீச, சரியான வாய்ப்பை எதிர்நோக்கி இருந்த மியான்தத் அதை ‘ஸ்கொயர் லெக்’ திசையில் அருமையான சிக்ஸராக மாற்றினார். யாருமே எதிர்பார்க்காத நிலையில், பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் முடிவு பல ஆண்டுகளுக்கு இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத வடுவாக அமைந்தது.

தெ.ஆப்பிரிக்கா-நியூசி.(1999, நேப்பியர்) ஆட்டத்தை மாற்றிய அதிரடி குளூஸ்னர்

klusnerjpgதெ. ஆப்பிரிக்க வீரர் லேன்ஸ் குளுஸ்னர் : படம் ஏபி100 

 

நியூசிலாந்தின் நேப்பியர் நகரில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்துக்கும் இடையிலான ஒருநாள் போட்டி நடந்தது. மழை காரணமாக போட்டி 40 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு தென் ஆப்பிரிக்காவுக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடைசி ஓவரில் 11 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. லேன்ஸ் குளூஸ்னர், மார்க் பவுச்சர் களத்தில் இருந்தனர்.

2-வது பந்தில் பவுச்சர் ஆட்டமிழந்ததால், ஆட்டம் பரபரப்பை எட்டியது. கடைசிப் பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. நியூசிலாந்து வீரர் நாஷ் வீசிய அந்த பந்தை லாங்-ஆன் திசையில் குளூஸ்னர் தூக்கி அடிக்க அது சிக்ஸராக மாறியது தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டில் த்ரில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே-வங்கதேசம்(2006,ஹராரே) ஹூரோவான டெய்லர்

taylorjpgஜிம்பாவ்வே வீரர் டெய்லர்: படம் ஏபி100 

 

ஹராரே நகரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேசம் மோதியது. கடைசி இரு ஓவர்களில் 28 ரன்கள் ஜிம்பாப்வே அணி வெற்றிக்கு தேவைப்பட்டது. பிரன்டன் டெய்லரும், டவான்டா முபாரிவா இருவரும்சேர்ந்து கடைசி ஓவருக்கு முதல் ஓவரில் 11 ரன்கள் சேர்த்துவிட்டனர்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டன. வங்கதேச வீரர் மஸ்ரபி மோர்தசா பந்து வீசினார். கடைசி ஓவரின் 2-வது பந்தில் டெய்லர் அருமையான சிக்ஸர் அடித்தார், 5-வது பந்தில் முபாரிவா ரன் அவுட் ஆனார். இதனால், ஆட்டம் பரபரப்பின் உச்சத்துக்குச் சென்றது. கடைசி பந்தில்,வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. அதிரடியாக பேட்டை சுழற்றிய டெய்லர் ‘மிட்விக்கெட்’ திசையில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

மே.இ.தீவுகள்-இலங்கை(2008,டிரினிடாட்) தூணாக மாறிய சந்தர்பால்

chandarpauljpgமேற்கிந்தியதீவுகள் வீரர் சந்தர்பால் : படம் ஏஎப்ஃபி100 

 

டிரினிடாட் நகரில் இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையே நடந்த சுவரஸ்யமான போட்டியாகும். கடைசி ஓவரில் மே.இ.தீவுகள் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை. இலங்கையின் அனுபவ வீரர் சாமிந்தா வாஸ் பந்து வீசினார்.

சந்தர்பாலும், சுலைமான் பென்னும் களத்தில் இருந்தனர். சந்தர்பால் மட்டும் அடித்து ஆடக்கூடியவர் என்பதால் அனைவரின் எதிர்பார்ப்பும் அவர் மீதே இருந்தது. சாமிந்தா தனது வேகப்பந்து வீச்சில் ஒவ்வொரு பந்திலும் ரன்களை இறுக்கினார்.

கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டன. 5-வது பந்தில் ‘மிட்-ஆப்’ திசையில் சந்தர்பால் ஒரு பவுண்டரி அடித்து பரபரப்பை சற்று குறைத்தார், கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. சிக்ஸர் அடித்தால் மட்டுமே வெற்றி என்கிற கட்டாய நிலை இருந்தது. சமாந்தா வாஸ் புல்டாஸாக பந்தை வீச அதை ‘டீப்மிட் விக்கெட்டில்’ அற்புதமாக சிக்ஸர் அடித்து ஆட்டத்தைவெற்றிகரமாக சந்தர்பால் முடித்துவைத்தார்.

தெ.ஆப்பிரிக்கா-நியூசி.(2013,போட்செப்ஸ்ட்ரூம்) ஆபத்பாந்தவன் ரேயன் மெக்லாரன்

Ryan-McLaren-jpgதெ. ஆப்பிரிக்க வீரர் மெக்லாரன்: படம் கெட்டி இமேஜஸ்100 

 

தென் ஆப்பிரிக்கா பயணம் வந்த நியூசிலாந்து அணி 3-0 என்று ஒருநாள் தொடரில் தோற்று வெளியேறிய போட்டியாகும். தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை, கைவசம் 2 விக்கெட்டுகள் இருக்கின்றன. களத்தில் டேல் ஸ்டெயின், மெக்லாரன் இருந்தனர். நியூசிலாந்து வீரர் பிராங்க்ளின் பந்து வீசினார்.

3 பந்துகளைச் சந்தித்த ஸ்டெயின் அதை வீணாக்கி, 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் அனைவரும் போட்டியின் முடிவை தீவிரமாக கவனித்துக்கொண்டு இருந்தனர். பிரங்க்ளின் வீசிய கடைசி பந்தை ஸ்டிரைட் திசையில் தூக்கி சிக்ஸர் அடித்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார் மெக்லாரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x