Published : 03 Mar 2018 05:18 PM
Last Updated : 03 Mar 2018 05:18 PM

வோக்ஸ் விரல் பெற்றுத் தந்த இங்கிலாந்தின் வெற்றி: கடினமான பிட்சில் வில்லியம்சனின் அபார சதம் வீண்

வெலிங்டனில் ‘ட்ராப் இன்’ கடினமான பிட்சில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் வில்லியம்சனின் அதி அற்புத போராட்ட சதம் வீணாக இங்கிலாந்து அணி நியூஸிலாந்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியும் பந்து எகிறியும், தாழ்ந்தும் வந்த கடினமான பிட்சில் தட்டுத்தடுமாறி 234 ரன்களை எடுக்க, தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி 80/1 என்பதிலிருந்து 103/6 என்ற சரிவடைந்து பிறகு வில்லியம்சன் (112 நாட் அவுட்), மீண்டும் சாண்ட்னர் (41) ஆகியோரால் இலக்குக்கு அருகில் வந்து 230/8 என்று தோல்வி தழுவியது.

நியூஸிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 80 ரன்களிலிருந்து அடில் ரஷீத் (2/34), மொயின் அலி (3/36) ஆகியோரது சுழலுக்கு 23 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 103/6 என்று தோல்வியின் மையத்தை வந்தடைந்தது. ஆனால் அதன் பிறகு கடினமான பிட்சில் மீண்டுமொருமுறை சாண்ட்னர் இங்கிலாந்தைப் பதம் பார்க்க இவரும் வில்லியம்சனும் இணைந்து 21 ஓவர்களில் 96 ரன்களைச் சேர்த்து இங்கிலாந்தை அச்சுறுத்தினர்.

கடைசி 5 ஓவர்களில் 36 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில், கேன் வில்லியம்சன் நேர் டிரைவ் ஒன்றை அடிக்க அது பவுலர் கிறிஸ் வோக்ஸ் விரலில் பட்டு ரன்னர் முனை ஸ்டம்பைத் தாக்க 54 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 41 எடுத்து எப்படியாவது வெற்றிபெறாமல் நகர மாட்டேன் என்று ஆடிவந்த சாண்ட்னரை ரன் அவுட் ஆக்கியது.

கடினமான பிட்ச் என்பதால் புதிய பேட்ஸ்மென்கள் நெருக்கடி சூழ்நிலையில் ஆட முடியாது, அதனால்தான் டிம் சவுதி நிற்க முடியவில்லை. வில்லியம்சன் தன் சதத்தை 133 பந்துகளில் எடுத்தும் கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது வோக்ஸை லெக் திசையில் புல் ஷாட்டில் சிக்ஸ் அடித்தார் வில்லியம்சன். ஆனால் சற்றும் அயராத வோக்ஸ் தன் லெந்த்தை மாற்றி கொஞ்சம் ஃபுல் லெந்த்தில் வீசி பவுண்டரியை மறுத்தார்.

48வது ஓவரை கிறிஸ் வோக்ஸ் அருமையாக வீசி சவுதி விக்கெட்டுடன் 3 ரன்களையே கொடுத்ததும் 49வது ஓவரை டாம் கரன் டைட்டாக வீசி 7 ரன்களையே கொடுத்ததும் நெருக்கடியை அதிகரித்தது.

முதலில் வோக்ஸ், மார்டின் கப்திலை (3) மிட் ஆனில் கேட்ச் கொடுக்கச் செய்து வீழ்த்தினார். அதன் பிறகு வில்லியம்சன், கொலின் மன்ரோ (49) ஸ்கோரை 18வது ஓவரில் 80 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.

அடில் ரஷீத், மொயின் அலியிடம் அனாவசிய விக்கெட்டுகள்:

மன்ரோ நன்றாக ஆடி வந்த நிலையில் ரஷீத்தின் கூக்ளியை கவரில் காற்றில் தூக்க அங்கு பென் ஸ்டோக்ஸ் ஒருகட்டத்தில் காற்றில் மிதந்தார்., அபாரமான கேட்ச். மொயின் அலி வந்தவுடன் புல்டாஸை வில்லியம்சன் மிட்விக்கெட்டில் பெரிய சிக்சர் விளாசினார். ஆனால் மொயின் அலி, மார்க் சாப்மேன் ஒரு மோசமான ஷாட்டில் பாயிண்டில் கேட்ச் ஆகி வெளியேறச் செய்தார். டாம் லேதம் எல்.பி. ஆனார். ரிவியூ செய்து தீர்ப்பைப் பெற்றது இங்கிலாந்து. டாம் லாதம் டக்.

அடுத்து ஹென்றி நிகோல்ஸ், இவரது மோசமான ஆட்டம் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது ரன் எடுக்காமல் ரஷீத்தின் பெரிய லெக் பிரேக் பந்து ஒன்று எதிலோ பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆக நடுவர் விரலை உயர்த்தினார். நிகோல்ஸ் ரிவியூ செய்தார், அதில் பந்து மட்டையில் படவில்லை என்பது உறுதியானாலும் எல்.பி. என்று தீர்ப்பானது.

கொலின் டிகிராண்ட்ஹோம் சூழ்நிலை தெரியாமல் மொயின் அலியை நேராகத் தூக்கி அடித்து லாங் ஆனில் கேட்ச் ஆகி வெளியேற நியூஸிலாந்து படபடவென சரிந்து 103/6 என்று ஆனது.

இது நடந்த பிறகு சாண்ட்னர் ஒரு தாழ்வான புல்டாஸை அடிக்க அதனை ஜேசன் ராய் பிடிக்க அது தரையில் பட்டு வந்ததா என்று நீண்ட ரிவியூவில் சரிபார்க்கப்பட சாண்ட்னர் தப்பினார். இதனையடுத்து வில்லியம்சன், சாண்ட்னர் கூட்டணி 21 ஓவர்களில் 96 ரன்களைச் சேர்த்தனர். கடைசியில் இயான் மோர்கன் வெற்றிக்கான விக்கெட்டை வீழ்த்த ரஷீத்தை மீண்டும் கொண்டு வந்தார், ஆனால் வோக்ஸ் விரல்தான் காப்பாற்றியது, வில்லியம்சனின் நேர் டிரைவ் இவர் கையில் பட்டு ஸ்டம்பைத் தாக்க முக்கியக் கட்டத்தில் சாண்ட்னர் ரன் அவுட் ஆனார். இது பெரிய திருப்பு முனையாக அமைய, வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் இருந்தும் நியூஸிலாந்தால் வெற்றி பெற முடியவில்லை.

இங்கிலாந்து போராடி 234 ரன்கள்!

2015 உலகக்கோப்பையில் இங்கிலாந்தை தன் 7/33 மூலம் சாய்த்த டிம் சவுதி அருமையாக தொடக்க ஓவர்களை வீசினார், 3 ஸ்லிப்கள் என்ற தாக்குதல் பந்து வீச்சை வீசினார். ஜேசன் ராயை டிரெண்ட் போல்ட் சற்றே எழும்பிய பந்தில் எட்ஜ் ஆக வைத்து வீழ்த்தினார். ஜோ ரூட் இறங்கி சாண்ட்னரின் 2 பந்தை ஸ்வீப் பவுண்டரி விளாசினார், ஆனால் 20 ரன்கள் எடுத்த நிலையில் கொலின் டிகிராண்ட் ஹோம் பந்தை மிட் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜானி பேர்ஸ்டோ 19 ரன்களில் இஷ் சோதியின் கூக்ளியில் முற்றிலும் ஏமாந்தார். பவுல்டு ஆகி வெளியேறினார். 68/3, 17வது ஓவர். கொலின் டி கிராண்ட் ஹோம் தனது மித வேகப்பந்து வீச்சில் ரன்களைக் கொடுக்கவில்லை. 10 ஓவர்களில் 24 ரன்களையே விட்டுக் கொடுத்து அவர் நன்றாக ஆடிய ஜோரூட்டை வீழ்த்தினார்.

ரன்களே வராத நிலையில் மோர்கன், சோதி பந்தை ஸ்லாக் ஸ்வீப்பில் சிக்ஸ் அடித்தார், ஆனால் ஸ்டோக்ஸ் எந்த ஒரு வடிவத்திலும் பார்க்க முடியாத அளவுக்குத் திக்கித் திணறினார். 73 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 39 ரன்களையே அவர் எடுக்க முடிந்தது. தனது 53வது பந்தில்தான் முதல் பவுண்டரியையே அவர் கண்டார். மோர்கன் இங்கிலாந்தின் அதிகபட்ச தனிஸ்கோரான 48 ரன்களை எட்டிய போது சவுதி பந்தை ஒதுங்கிக் கொண்டு தேர்ட்மேனில் ஆட நினைத்தார். ஆனால் பவுல்டுதான் ஆனார். ஸ்டோக்ஸ் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த போது சோதியிடம் டீப்பில் கேட்ச் ஆனார்.

ஜோஸ் பட்லர், சோதியை அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்தார், பிறகு கவருக்கு மேல் ஒரு சிக்ஸ் என்று அச்சுறுத்தி 23 பந்துகளில் 29 என்ற நிலையில் சோதி பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். மொயின் அலி 23 ரன்கள் எடுத்து பங்களிப்பு செய்தார். வோக்ஸ் 16, ரஷீத் 11 ஆகியோரும் சிறிய ஆனால் முக்கிய பங்களிப்பு செய்ய இங்கிலாந்து 50 ஓவர்களில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெடுகளையும் இழந்தது. நியூஸிலாந்து தரப்பில் சோதி 3 விக்கெட்டுகளையும், போல்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

கடைசியில் வில்லியம்சன் சதம் வீணாக இங்கிலாந்து 4 ரன்களில் வென்றது. ஆட்ட நாயகனாக மொயீன் அலி தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x