Published : 03 Mar 2018 09:34 AM
Last Updated : 03 Mar 2018 09:34 AM

தூத்துக்குடி கடற்கரையில் சாகச விளையாட்டு: மணப்பாடு கடற்கரையில் இளைஞர்கள் உற்சாகம்

நிலம், வான், கடல் சாகச விளையாட்டுகள் தூத்துக்குடி மற்றும் மணப்பாடு கடற்கரைகளில் நேற்று தொடங்கின.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மாவட்ட நலக்குழு, கோவையைச் சேர்ந்த வான் விளையாட்டு அறிவியல் மையம் ஆகியவை இணைந்து, ஸ்பிக் நிறுவன உதவியுடன் இந்த சாகச விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதன் தொடக்க விழா நேற்று தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தலைமை வகித்தார். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.

முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், ஸ்பிக் நிறுவன உதவி தலைவர் வெங்கட்ராமன், பொது மேலாளர் ரவிச்சந்திரன், மேலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாரா சைலிங், அக்வா சைலிங், ஜோர்பிங், கமாண்டே நெட், ரிவர் கிராசிங் ஆகிய 5 சாகச விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் பாரா சைலிங், ஜோர்பிங், கமாண்டே நெட் ஆகிய மூன்று விளையாட்டுகள் தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரையில் நடைபெற்றன. அதேவேளையில் மணப்பாடு கடற்கரையில் 5 விளையாட்டுகளும் நடைபெற்றன.

இவற்றில் பங்கேற்கவும், பார்வையிடவும் கட்டணம் இல்லை என்பதால் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்த சாகச விளையாட்டு இன்றும், நாளையும் நடைபெறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x