Published : 03 Mar 2018 09:33 AM
Last Updated : 03 Mar 2018 09:33 AM

டர்பன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 189 ரன்கள் முன்னிலை: தென் ஆப்பிரிக்கா 162 ரன்களுக்கு ஆட்டமிழப்பு- மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 189 ரன்கள் முன்னிலை பெற்றது.

கிங்ஸ்மீட் நகரில் உள்ள டர்பன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 76 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. பான்கிராப்ஃட் 5, உஸ்மான் கவாஜா 14, டேவிட் வார்னர் 51,ஸ்மித் 56, ஷான் மார்ஷ் 40 ரன்களில் ஆட்டமிழந்தனர். மிட்செல் மார்ஷ் 32, டிம் பெயின் 21 ரன்களுடன் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார்கள். 83-வது ஓவரில் புதிய பந்து எடுக்கப்பட்ட நிலையில் ரபாடா வீசிய சரியான நீளம், சீரான வேகம் கொண்ட பந்தில் டிம் பெயின், விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 72 பந்துகளை சந்தித்த டிம் பெயின் 25 ரன்கள் சேர்த்தார்.

6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 60 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய பாட் கம்மின்ஸ் 3 ரன்கள் சேர்த்தத நிலையில் கேசவ் மகாராஜ் பந்தில் போல்டானார். அப்போது ஸ்கோர் 251 ஆக இருந்தது. எஞ்சிய விக்கெட்களை தென் ஆப்பிரிக்க அணி விரைவாக வீழ்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிட்செல் மார்ஷூடன் இணைந்த மிட்செல் ஸ்டார்க் அதிரடியாக விளையாடினார். அவர், கேசவ் மகாராஜ் வீசிய 97 மற்றும் 99-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸர் விளாசினார்.

இந்த இரு சிக்ஸர்களும் மிட்விக்கெட் திசையை நோக்கி ஸ்டார்க் அடித்திருந்தார். மறுமுனையில் நிதானமாக பேட் செய்த மிட்செல் மார்ஷ் 125 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் தனது 3-வது அரை சதத்தை அடித்தார். உணவு இடைவேளைக்கு 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஸ்டார்க் ஆட்டமிழந்தார். கேசவ் மகாராஜின் பந்தை தவறாக கணித்து விளையாடிய போது ஆஃப் ஸ்டெம்பை பறிகொடுத்தார். இதனால் ஸ்டார்க் 25 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 101.4 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது. மிட்செல் மார்ஷ் 60 ரன்களுடன் ஆட்மிழக்காமல் இருந்தார். உணவு இடைவேளைக்கு பிறகு அவருடன் இணைந்து நாதன் லயன் களமிறங்கினார். கைவசம் விக்கெட்கள் அதிகம் இல்லாததால் மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடினார். கேசவ் மகாராஜ் வீசிய 107-வது ஓவரில் லெக் திசையில் அற்புதமாக சிக்ஸர் ஒன்றை விளாசினார். ரன் குவிக்கும் திறனை வேகப்படுத்திய அவர், 173 பந்துகளில், ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்த நிலையில் பிலாண்டர் பந்தில், மிட் ஆன் திசையில் நின்ற மோர்னே மோர்கலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி வீரராக நாதன் லயன் 24 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகாராஜ் பந்தில் வெளியேறினார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 110.4 ஓவர்களில் 351 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மகாராஜ் 5, பிலாண்டர் 3, ரபாடா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. நாதன் லயன் தனது முதல் ஓவரிலேயே டீன் எல்கர் (7), ஹசிம் ஆம்லா (0) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். மார்க்ரம் 32 ரன்களில் பாட் கம்மின்ஸ் பந்திலும், கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 15 ரன்களில் மிட்செல் ஸ்டார்க் பந்திலும் ஆட்டமிழந்தனர். 92 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய தியூனிஸ் 6 ரன்களில் தனது விக்கெட்டை ஸ்டார்க்கிடம் பறிகொடுத்தார்.

இதையடுத்து டி காக் 20 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்தில் போல்டானார். அவரைத் தொடர்ந்து பிலாண்டர் 8, கேசவ் மகாராஜ் 0, ரபாடா 3, மோர்னே மோர்கல் 0 ரன்களில் நடையை கட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 51.4 ஓவர்களில் 162 ரன்களுக்கு சுருண்டது. தனியொருவனாக போராடிய டி வில்லியர்ஸ் 127 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி கடைசி 5 விக்கெட்களை 12 ரன்களுக்கு தாரை வார்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5, நாதன் லயன் 3 விக்கெட்கள் கைப்பற்றினர். 189 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸை இன்று விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x