Published : 13 Feb 2018 05:06 PM
Last Updated : 13 Feb 2018 05:06 PM

34 ரன்களில் 8 பவுண்டரிகள்-தவண் விளாசல்; சிக்சருக்குப் பிறகு ரபாடாவின் பந்தில் அடிவாங்கிய ரோஹித் சர்மா

5-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட் செய்து வருகிறது, இதில் இந்திய அணி தவண் விக்கெட்டை இழந்து 11 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்துள்ளது.

இதில் பிட்சில் கொஞ்சம் புற்கள் இருப்பதாலும் வானிலையும் சற்றே மேகமூட்டமாக இருப்பதாலும் பந்துகள் ஓரளவுக்கு ஸ்விங் ஆகி எழும்புகின்றன.

ஷிகர் தவண் இதில் அதிரடி ஆட்டம் காட்டினார், 23 பந்துகளைச் சந்தித்த ஷிகர் தவண் அதில் 8 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ரபாடாவிடம் ஆட்டமிழந்தார்.

முதலில் ரபாடாவின் 143 கிமீ வேகப்பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் பளார் என்று பவுண்டரி அடித்தார். அடுத்து ரபாடா ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை நெஞ்சுயரம் வீச மிக அருமையாக அதனை ஸ்கொயர் லெக் பவுண்டரிக்கு புல் செய்தார். அதே ஓவரில் ரபாடா வீசிய ஆஃப் திசை எழும்பிய பந்தை கட் செய்ய 2-வது ஸ்லிப்பில் மார்க்ரம் எழும்பியும் விரலில் பட்டு பவுண்டரிக்குப் பறந்தது .

பிறகு ரபாடா ரவுண்ட் த விக்கெட்டில் வீச நேராக மிக அருமையான டைமிங்கில் அடுத்த பவுண்டரி. பிறகு மோர்கெல் ஓவரில் முதலில் அருமையான நேர் பவுண்டரி, பிறகு ஹுக் ஷாட் மிஸ் ஹிட் ஆக விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் ஒரு பவுண்டரி, பிறகு ஷார்ட் வைடு பந்தை பாயிண்டுக்கு மேல் தூக்கி அடித்து 3 பவுண்டரிகளை மோர்கெலின் ஒரே ஓவரில் சாத்தினார்.

ரபாடா விடவில்லை கல்லியை நிறுத்தி வைத்து பொறி வைக்கும் முயற்சியில் ரவுண்ட் த விக்கெட்டில் தவணுக்கு வீசினார். கிட்டத்தட்ட பொறியில் சிக்கியிருப்பார், ஆனால் பந்து பவுண்டரியானது. அடுத்த பந்து தவணின் உடலைக் குறிவைக்கும் பவுன்சர் எகிறியது தவண் இதனை புல் ஆடினார் டீப் ஸ்கொயர்லெக்கில் பெலுக்வயோ காத்திருந்தார், பிடித்தார். ஷிகர் தவணின் ஜனரஞ்சக அதிரடி இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 23 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் என்று அதிரடி தொடக்கம் கொடுத்தார்.

ரோஹித் சர்மா ஆக்ரோஷம்!

மறுமுனையில் பல சோதனைகளை எதிர்கொண்டு ஆடி வருகிறார் ரோஹித் சர்மா. ஏற்கெனவே 8 இன்னிங்ஸ்களில் ரபாடா இவரை 6 முறை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் 6வது ஓவரில் ரபாடாவை ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உறுத்தல் இருந்திருக்கும் போலும். ரபாடாவின் எக்ஸ்பிரஸ் வேகமாவது ஒண்ணாவது என்று மேலேறி வந்து லாங் ஆனில் ஒரே தூக்குத் தூக்கினார், சிக்ஸ்!

கடுப்பான ரபாடா அடுத்த பந்தை ஒரு அருமையான லெந்தில் அதிவேகத்துடன் வீச ரோஹித் சர்மா ஆஃப் ஸ்டம்புக்கு மிகச்சற்று வெளியே வந்த பந்தை அடிக்கலாம் என்று நினைத்தபோது உடலில் அடிவாங்கினார்.

முன்னதாக...

5-வது ஒருநாள்: டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா பீல்டிங்

போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெறும் 5-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பீல்டிங்கைத்த் தேர்வு செய்தது.

இந்திய அணியில் மாற்றமில்லை. தென் ஆப்பிரிக்க அணியில் கிறிஸ் மோரிசுக்கு சிறு காயம் காரணமாக தப்ரைஸ் ஷம்சி என்ற ஸ்பின்னர் வந்துள்ளார்.

டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் கூறியதாவது:

என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். விளக்கொளியில் பந்துகள் சறுக்கும் என்று கருதுகிறேன் அதனால் இலக்கை துரத்துவது சரியெனப் பட்டது. தற்போது வானிலை மேகமூட்டமாக இருப்பதால் பவுலிங் எடுக்கும். நன்றாகத் தொடங்கி, இந்திய மிடில் ஆர்டரைக் காலி செய்ய வேண்டும். தன்னம்பிக்கை, ஆற்றல், உற்சாகமட்டம் அதிகமாக உள்ளது, யாரும் களைப்படைந்ததாகக் கருதவில்லை, என்றார்.

விராட் கோலி: நாங்களும் முதலில் பவுலிங் தான் தேர்ந்தெடுத்திருப்போம். விரட்ட முடியக்கூடிய இலக்குக்கு அவர்களை மட்டுப்படுத்துவோம். ரிஸ்ட் ஸ்பின்னர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் வீசுவார்கள். ஆனால் பிட்ச் முழுதும் பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும் போல்தான் தெரிகிறது. அவர்களுக்கு வெற்றிபெற்றேயாக வேண்டிய ஆட்டம். நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம், ஒரளவுக்கு நல்ல ரன்களை எடுத்து அவர்களை மட்டுப்படுத்த வேண்டும். ரிஸ்ட் ஸ்பின்னர்கள் அடிவாங்கினாலும் பரவாயில்லை. அவரக்ள் எதிர்பார்ப்புகளுக்கு மேல் செயல்பட்டுள்ளனர்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x