Published : 13 Feb 2018 10:11 AM
Last Updated : 13 Feb 2018 10:11 AM

குளிர்கால ஒலிம்பிக் போட்டி: ஸ்னோபோர்டில் அமெரிக்காவின் ஜெமி ஆண்டர்சனுக்கு தங்கப் பதக்கம்

குளிர்கால ஒலிம்பிக்கில் ஸ்னோபோர்டு போட்டியில் அமெரிக்காவின் ஜெமி ஆண்டர்சன் தங்கப் பதக்கம் வென்றார்.

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென் கொரியாவின் பியாங்சங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 12.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பையத்லான் போட்டியில் பிரான்ஸ் வீரர் மார்ட்டின் போர்கேட் தங்கப் பதக்கம் வென்றார். சுவீடனின் செபஸ்டியன் சாமுவேல்சன் வெள்ளிப் பதக்கமும், ஜெர்மனியின் பெனடிக்ட் டோல் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

மகளிருக்கான 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பையத்லானில் ஜெர்மனியின் லாரா மேஹல்மியர் தங்கப் பதக்கம் கைப்பற்றினார். சுலோவேக்கியாவின் அனஸ்டசியா குஸ்மினா வெள்ளிப் பதக்கமும், பிரான்சின் அனய்ஸ் பெசண்ட் வெண்கலப் பதக்கமும் வென்றனர். பிகர் ஸ்கேட்டிங் அணிகள் பிரிவில் கனடா தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்த பிரிவில் ரஷ்யாவுக்கு வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவுக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது.

ஆடவருக்கான ப்ரீஸ்டைல் ஸ்கேட்டிங் பிரிவில் கனடாவின் மைக்கேல் கிங்ஸ்பிரி தங்கப் பதக்கமும், ஆஸ்திரேலியாவின் மேட் கிரகாம் வெள்ளிப் பதக்கமும், ஜப்பானின் தய்ச்சி ஹரா வெண்கலப் பதக்கமும் வென்றனர். மகளிருக்கான ஸ்னோபோர்டு ஸ்லோப் ஸ்டைல் பிரிவில் அமெரிக்காவின் ஜெமி ஆண்டர்சன் தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் பிரிவில் கனடாவின் லாரி புளூயின் வெள்ளிப் பதக்கமும், பின்லாந்தின் ருகாஜார்வி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

மகளிருக்கான 1,500 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங் பிரிவில் நெதர்லாந்தின் ஐரின் வுஸ்ட் தங்கப் பதக்கமும், ஜப்பானின் மிகோ தகாஜி வெள்ளிப் பதக்கமும், நெதர்லாந்தின் மாரிட் லீன்ஸ்டிரா வெண்கலப் பதக்கமும் வென்றனர். 4-வது நாள் முடிவில் பதக்கப் பட்டியலில் ஜெர்மனி 4 தங்கம், 2 வெண்கலத்துடன் மொத்தம் 6 பதக்கங்கங்கள் பெற்று முதலிடத்தில் இருந்தது. நெதர்லாந்து 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலத்துடன் 2-வது இடத்திலும், கனடா 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 3-வது இடம் வகித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x