Published : 13 Feb 2018 10:07 AM
Last Updated : 13 Feb 2018 10:07 AM

இன்று 5-வது ஒருநாள் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை: தொடரை கைப்பற்றுவதில் இந்தியா தீவிர முனைப்பு

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. புத்துணர்ச்சி அடைந்துள்ள தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி முதன்முறையாக இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை கைப்பற்றும் கனவை தொடர்ந்தபடி இன்றைய ஆட்டத்தை அணுகிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.

‘மேன் இன் புளூ’ என வர்ணிக்கப்படும் இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் 3-1 என முன்னிலை வகிக்கிறது. டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், செஞ்சுரியனில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்திலும், கேப்டவுனில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் 124 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி மீண்டு வந்தது.

மழை மற்றும் மின்னலால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் பிங்க் நிற உடையில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரானது இந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கும், தென் ஆப்பிக்க அணியின் பேட்டிங் வரிசைக்குமான நேரடி மோதலாக இருந்து வருகிறது. இது இன்றைய ஆட்டத்திலும் தொடரும் என்றே கருதப்படுகிறது. ஜோகன்னஸ்பர்க் போட்டியில் இருமுறை மழை குறுக்கிட்டதால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணியின் உத்வேகம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

கணிசமான அளவில் இலக்கு குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் விரைவாக ஆட்டமிழக்கச் செய்யப்பட்ட போதிலும் அதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய பந்து வீச்சாளர்களிடம் இருந்து எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் போனது. கிட்டத்தட்ட டி 20 வடிவில் அமைந்த இந்த இன்னிங்ஸில், ஆடுகளத்தின் தன்மையை சரியாக பயன்படுத்திக் கொண்டு டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென் ஜோடி ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு எதிராக தாக்குதல் பேட்டிங்கை கையாண்டு வெற்றியின் தருணங்களை இந்திய அணியிடம் இருந்து பறித்தனர்.

டேவிட் மில்லருக்கு கேட்ச்சை தவற விட்டது, நோபாலில் அவரை போல்டாக்கியது என இரண்டு முக்கிய காரணிகள் இந்திய அணி ஆட்டத்தின் முடிவை தாரை வார்த்தது போன்று அமைந்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டிருந்தாலும் ரிஸ்ட் ஸ்பின்னர்களான யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு எதிராக எந்த வகையில் ரன் குவிக்க வேண்டும் என்ற யுத்தியை தென் ஆப்பிரிக்க வீரர்கள் கண்டறிந்து கொண்டதாகவே கருதப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் தாக்குதல் ஆட்டம் தொடுத்த போதிலும் விராட் கோலி பந்து வீச்சில் மாற்றம் செய்யாமல் தவறிழைத்தார்.

டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படும் திறன் கொண்ட புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை சரியாக பயன்படுத்தத் தவறினார். ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ரன்களை வாரி வழங்கிய போதும் தொடர்ந்து அவர்கள் மீது அதிக நம்பிக்கையை செலுத்தினார் கோலி. ஆனால் அவர்களால் தாக்குதல் பேட்டிங்குக்கு எதிராக சரியான பதிலடி கொடுக்க முடியாமல் போனது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்துக்கான அணித் தேர்வில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொடை பகுதியில் காயம் அடைந்துள்ள கேதார் ஜாதவின் உடல் தகுதி இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான அவர், ஜோகன்னஸ்பர்க் ஆட்டத்தில் விளையாடாதது அணியின் சமநிலையை பாதிப்புக்குள்ளாக்கியது. ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்ட நிலையில் கூடுதல் யுத்தியாக மாற்று பந்து வீச்சாளர் இல்லாததால் இந்திய அணி சற்று அழுத்தத்துக்கு உள்ளானது. ஏனெனில் சில ஆட்டங்களில் முதன்மை சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படாத நிலையில் கேதார் ஜாதவ் விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதனால் அவரது இடத்தை நிரப்பும் வகையிலான வீரரை பயன்படுத்த வேண்டிய நிலை இந்திய அணி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

எனினும் அதற்கான போதிய தேர்வுகளை அணி கொண்டிருக்கவில்லை. ரோஹித் சர்மா, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்களாக செயல்படக்கூடியவர்கள்தான். ஸ்ரேயஸ் ஐயர் தனது அறிமுக தொடரான இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஒரு ஓவர் வீசியுள்ளார். மாறாக ரோஹித் சர்மா கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீசியிருந்தார். எனினும் கேதார் ஜாதவ் போன்று இவர்கள் இருவரும் நம்பகத்தன்மையுடன் செயல்படக்கூடியவர்கள் இல்லை.

இவர்களுடன் விராட் கோலியும் மற்றொரு போட்டியாளராக உள்ளார். ஆனால் அவர் பந்து வீச்சின் தையல் பகுதியை பயன்படுத்தி பந்து வீசக்கூடியவர். சுருக்கமாகக் கூறினால் பேட்டிங்கை காட்டிலும் பந்து வீச்சில் சற்று கூடுதல் திறனை வெளிப்படுத்தும் கேதார் ஜாதவ் இல்லலாதது அணியின் சமநிலை உகந்ததாக இல்லை என்பதையே காட்டுகிறது. இது ஒருபுறம் இருக்க இந்தத் தொடரின் 4 ஆட்டங்களிலும் இந்திய அணி மிடில் ஆர்டர் பேட்டிங் சரியாக சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. 4-வது இடத்தில் களமிறக்கப்பட்டுள்ள அஜிங்க்ய ரஹானே முதல் ஆட்டத்தில் 79 ரன்கள் சேர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ஆனால் அதன் பின்னர் அவர், இரு ஆட்டங்களில் முறையே 11 மற்றும் 8 ரன்களே சேர்த்தார். ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்ததோடு சரி, அதன் பின்னர் அவரது பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. கடைசியாக நடைபெற்ற இரு ஒருநாள் போட்டிகளிலும் அவர் சேர்த்த ரன்கள் 14 மற்றும் 9 மட்டுமே. இந்த தடுமாற்றமான மிடில் ஆர்டர் பேட்டிங்கின் ஊடாக ஜோகன்னஸ்பர்க் ஆட்டத்தில் தோனி சிறப்பாக பேட் செய்து 43 பந்துகளில், 42 ரன்கள் சேர்த்தார். அந்த ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் இந்திய அணி ரன்கள் சேர்க்க தடுமாற்றம் அடைந்த நிலையில் தோனியின் ஆட்டம் அணியை பாதுகாக்கும் வகையில் இருந்தது.

தற்போதைய தொடரில் இந்திய அணியின் ரன்குவிப்பு வலுவான டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையிடம் இருந்தே வெளிப்பட்டுள்ளது. இதில் ரோஹித் சர்மா விதிவிலக்காக உள்ளார். தொடர்ச்சியாக மோசமான திறனை வெளிப்படுத்தி வரும் அவர், 4 இன்னிங்ஸில் சேர்த்த மொத்த ரன்கள் 40 மட்டுமே. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க மண்ணில் அவரது சராசரி மேலும் குறைந்துள்ளது. இதுவரை 12 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவில் விளையாடி உள்ள ரோஹித் சர்மா 11.45 சராசரியையே கொண்டுள்ளார். மாறாக இந்தத் தொடரில் விராட் கோலி 393 ரன்களும், ஷிகர் தவண் 239 ரன்களும் வேட்டையாடி உள்ளனர். இது இந்திய அணியில் உள்ள மற்ற பேட்ஸ்மேன்கள் சேர்த்த ரன்களை விட (239) ஏறக்குறைய 3 மடங்கு அதிகமானதாகும்.

இதுவும் தற்போது இந்திய அணிக்கு பெரிதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையை சிதைக்கும் விதமாக ஷிகர் தவண், விராட் கோலி ஆகியோரை குறைந்த ரன்களில் விரைவாக ஆட்டமிழக்கக் செய்வதற்கான வழிகளை கண்டறிவதற்கான முயற்சிகளில் தென் ஆப்பிரிக்க அணி கவனம் செலுத்தக்கூடும் என கருதப்படுகிறது. இந்த வழியை அவர்கள் கண்டறிந்தால், நிச்சயம் ஆதாயம் பெறக்கூடிய வழியில் பயணிக்க நேரிடும். இதற்கிடையே அந்த அணியின் பந்து வீச்சு சேர்க்கையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜோகன்னஸ்பர்க் ஆட்டத்தில் பிரதான சுழற்பந்து வீச்சாளரான இம்ரன் தகிர் சேர்க்கப்படவில்லை. மாறாக பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான ஜேபி டுமினி தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருந்தார். ஆனால் இன்றைய ஆட்டம் நடைபெறும் போர்ட்எலிசபெத் செயின்ட் ஜார்க் பார்க் மைதானமானது கடந்த காலங்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு கைகொடுத்துள்ளது. கடைசியாக இங்கு விளையாடப்பட்ட இரு ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் சிறந்த திறனை வெளிப்படுத்தி உள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இம்ரன் தகிர் 26 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் கைப்பற்றினார். இதேபோல் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தபராசி ஷம்சி 36 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான ஆரோன் பாங்கிசோ 2 விக்கெட் கைப்பற்றினார்.

செயின்ட் ஜார்க் பார்க் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி 32 ஆட்டங்களில் விளையாடிய 11 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. இதில் 6 தோல்விகள் கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டவையாகும். அதேவேளையில் இந்திய அணியின் சாதனைகளும் இந்த மைதானத் தில் சிறப்பானதாக இல்லை. 1992-ம் ஆண்டுக்கு பிறகு இங்கு 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையடிய இந்திய அணி ஒன் றில் கூட வெற்றி பெறவில்லை. இதில் 4 தோல்விகள் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரானது. ஒரு ஆட்டத்தில் கென்யா அணியிடம் இந்தியா தோல்வி கண்டிருந்தது.

இந்த 5 ஆட்டங்களிலும் இந்திய அணி 200 ரன்களை கூட எட்டியது இல்லை. அதிகபட்சமாக 2001-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 176 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் வரலாற்றை திருத்தி எழுதும் முயற்சியாக இந்திய அணி மீண்டும் ஒரு முறை போராட வேண்டிய நிலையில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஒருநாள் போட்டித் தொடரை வென்று சாதனை படைக்கும். அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணி தொடரை இழந்துவிடக்கூடாது என்பதில் தீவிர முனைப்பு காட்டக்கூடும்.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ்பாண்டே, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாக்குர்.

தென் ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, ஏபி டி வில்லியர்ஸ், ஜேபி டுமினி, இம்ரன் தகிர், டேவிட் மில்லர், மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், லுங்கி நிகிடி, பெலுக்வயோ, ரபாடா, தப ராஸ் ஷம்சி, கயா ஸோண்டோ, பெகார்தின், ஹென் ரிச் கிளாசென்.- பிடிஐ

நேரம்: மாலை 4.30

நேரடி ஒளிபரப்பு: சோனி டென் 1

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x