Last Updated : 11 Feb, 2018 12:12 PM

 

Published : 11 Feb 2018 12:12 PM
Last Updated : 11 Feb 2018 12:12 PM

தேசியக் கொடியை சரியாகப் பிடிக்க வைத்து, இந்திய ரசிகர்களின் மனங்களை வென்ற பாகிஸ்தான் வீரர் அப்ரிடி

ரசிகர் ஒருவரை இந்திய தேசியக் கொடியை சரியாகப் பிடிக்க வைத்து, இந்தியர்களின் மனங்களை பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி வென்றுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் செயின்ட் மோர்டிஸ் நகரில் இந்திய வீரர் சேவாக்கின் டைமன்ட் லெவன் அணிக்கும், ஷாஹித் அப்ரிடியின் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான ஐஸ் கிரிக்கெட் போட்டி நடந்தது. பனி உறைந்த ஏரியில் இந்த கிரிக்கெட் போட்டி நடந்தது.

இந்தப் போட்டியில் சேவாக், அப்ரிடி தவிர்த்து சோயிப் அக்தர், ஜாகீர்கான், கிரேம் ஸ்மித், ஆன்ட்ரூ சைமன்ட்ஸ், லசித் மலிங்கா, மகிலா ஜெயவர்த்தனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியின் இடையே ஏராளமான ரசிகர்கள், ரசிகைகளை இந்திய வீரர்களிடமும், மற்ற ரசிர்களிடமும் ஆட்டோகிராப் வாங்கினர்.

பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு பாகிஸ்தானில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க இந்திய ரசிகர்கள் ஆர்வமாக நேற்று இருந்தனர்.

அப்போது, ஒரு ரசிகை அப்ரிடியிடம் அணுகி தங்களுடன் செல்ஃபி எடுக்க வேண்டுகோள் விடுத்தார். அதற்கு சம்மதம் தெரிவித்த அப்ரிடி செல்ஃபிக்கு தயாரானார். அப்போது, அந்த ரசிகை தனது கையில் இந்திய தேசியக் கொடியை சுருட்டிப்பிடித்து வைத்து இருந்தார்.

இதைப் பார்த்த அப்ரிடி அந்த ரசிகையை லேசாக கடிந்து கொண்டார்.  ''இந்திய தேசியக் கொடியை எப்போதும் மதிப்புடன் வைத்து இருக்க வேண்டும். அதை சுருட்டிப் பிடிக்க கூடாது. தேசியக் கொடியை நேராக விரித்துப் பிடியுங்கள், அதோடு சேர்த்து செல்ஃபி எடுக்கலாம்'' என்று அந்த ரசிகையிடம் அப்ரிடி கூறினார். அதன்பின் இந்திய தேசியக் கொடியை அப்ரிடி ஒருபுறம் பிடித்துக்கொண்ட நிலையில் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இந்திய தேசியக் கொடியை அப்ரிடி கையில் பிடித்து செல்ஃபி எடுத்ததை அங்கிருந்த ரசிகர்கள் கைதட்டி பாராட்டி ஆரவாரம் செய்தனர்.

பாகிஸ்தான் வீரரான அப்ரிடி இந்திய தேசியக் கொடியை கையில் பிடித்து இருந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஷாஹித் அப்ரிடி நிருபர்களிடம் கூறுகையில், ''நாடுகளுக்கு இடையே நட்புறவை வளர்ப்பதற்கும், தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையே நட்புறவை கொண்டு வருவதற்கும் கிரிக்கெட் போட்டி மிகச் சிறந்தது என நம்புகிறேன். பாகிஸ்தான் தவிர்த்து, இந்தியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் உள்ள ரசிகர்கள் என் மீது மிகுந்த மதிப்பும், அன்பும் வைத்து இருக்கிறார்கள்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x