Published : 11 Feb 2018 09:10 AM
Last Updated : 11 Feb 2018 09:10 AM

மத்திய அரசு வரி விலக்கு அளிக்க மறுப்பு: சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுவதில் சிக்கல்- மாற்று வழிகள் குறித்தும் ஆலோசிக்கிறது ஐசிசி

இந்திய அரசு வரிவிலக்கு அளிக்க மறுக்கும் பட்சத்தில் 2021-ம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் வாய்ப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இழக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வேறு நாட்டில் போட்டிகளை நடத்துவது தொடர்பாகவும் ஐசிசி ஆராய்ந்து வருகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டம் துபையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 2021-ம் ஆண்டு இந்தியாவில் நடத்த திட்டமிப்பட்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது இந்த தொடருக்கு இந்திய அரசாங்கம் வரிவிலக்கு அளிக்க முடியாது என்று தங்களது நிலைப்பாட்டில் தெளிவாக இருப்பது குறித்து கவலைகள் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ உதவியுடன் மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் ஐசிசி முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அந்நாட்டு அரசு வரிவிலக்கு அளிக்க மறுப்பது கவலை அளிக்கிறது. பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு வரி விலக்கு அளிப்பது என்பது நிலையான நடைமுறை வழக்கம்தான். பிசிசிஐ உடன் இணைந்து வரி விலக்கு பெறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். ஆனால் அதேவேளையில் இந்தியாவில் நிலவும் அதே கால நேரத்தையொட்டி உள்ள மற்ற நாடுகளில் போட்டிகளை நடத்துவது தொடர்பாகவும் ஆராயப்படும்” என கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுவில் 2021-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரையும், 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரையும் இந்தியா நடத்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு வரிவிலக்கு அளிக்காவிட்டால், தொடரின் வாயிலாக கிடைக்கும் வருமானத்தில் சுமார் ரூ.640 கோடியை இழக்க நேரிடும் என ஐசிசி அச்சம் கொள்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடருக்கும் மத்திய அரசு வரிவிலக்கு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x