Published : 11 Feb 2018 09:06 AM
Last Updated : 11 Feb 2018 09:06 AM

வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி: டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது

வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 215 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 1-0 கைப்பற்றியது.

டாக்காவில் நடைபெற்ற இந்த டெஸ்ட்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 68, ரோஷன் சில்வா 56 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் அப்தூர் ரசாக், தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச 45.4 ஓவர்களில் 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக மெகதி ஹசன் 38, லிட்டன் தாஸ் 25 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் லக்மல், அகிலா தனஞ்ஜெயா ஆகியோர் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.

112 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 62 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. கருணாரத்னே 32, மெண்டிஸ் 7, தனஞ்ஜெயா டி சில்வா 28, குணதிலகா 17, சந்திமால் 30, திக்வெலா 10, அகிலா தனஞ்ஜெயா 0, பெரேரா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ரோஷன் சில்வா 58, லக்மல் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 73.5 ஓவர்களில் 226 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. லக்மல் 21 ரன்களிலும், ரங்கனா ஹெராத் ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் ஆட்டமிழந்தனர். ரோஷன் சில்வா 145 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கேதச அணி தரப்பில் தைஜூல் இஸ்லாம் 4, முஸ்டாபிஸூர் ரஹ்மான் 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.

339 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி அகிலா தனஞ்ஜெயா, ரங்கனா ஹெராத் ஆகியோர சுழற்பந்து வீச்சில் 29.3 ஓவர்களில் 123 ரன்களுக்கு சுருண்டது. அதிபட்சமாக மொமினுல் ஹக் 33, முஸ்பிஹூர் ரகிம் 25, இம்ருல் கெய்ஸ் 17 லிட்டன் தாஸ் 12 ரன்கள் எடுத்தனர். தமிம் இக்பால் 2, கேப்டன் மஹ்மதுல்லா 6, சபிர் ரஹ்மான் 1, மெகதி ஹசன் 7, அப்தூர் ரசாக் 2, தைஜூல் இஸ்லாம் 6 ரன்கள் சேர்த்தனர்.

இலங்கை அணி தரப்பில் அகிலா தனஞ்ஜெயா 5 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 24 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 5 விக்கெட்களை வீழ்த்தினார். ரங்கனா ஹெராத் 4 விக்கெட்கள் கைப்பற்றினார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக ரோஷன் சில்வா தேர்வானார். 215 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது. சிட்டாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்திருந்தது. - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x