Last Updated : 05 Feb, 2018 07:09 PM

 

Published : 05 Feb 2018 07:09 PM
Last Updated : 05 Feb 2018 07:09 PM

தோனி அமைதியானவர், கோலி அவருக்கு நேர் எதிரானவர்: முன்னாள் பயிற்சியாளர் ரே ஜெனிங்ஸ் கருத்து

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரே ஜெனிங்ஸ், விராட் கோலியை அவரது யு-19 காலத்திலிருந்து ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக இருந்தது வரை பார்த்துள்ளார்.

அவரது பார்வையின்படி, ‘விராட் கோலி ஓய்வறையில் ஒரு அச்சுறுத்தலாக இருப்பவர். எனவே அவருக்கு ஒரு நல்ல வழிகாட்டி அமைந்து தலைவராக கோலியின் ஆற்றலை அதிகப்படுத்த வேண்டும்’ என்கிறார் ஜெனிங்ஸ்.

“ஒரு கேப்டனாக கோலி இன்னும் சிறப்பாக திகழவில்லை என்றே நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட் அமைப்பு கோலியிடம் இன்னும் சில விஷயங்களை வளர்த்தெடுக்க வேண்டும். தோனியிடமிருந்து கோலிக்கு தலைமை மாறியிருப்பது மிகப்பெரிய மாற்றம். தோனி அமைதியானவர் கோலி அதற்கு நேர் எதிரானவர்.

ஓய்வறையில் கோலி ஒரு அச்சுறுத்தாலாக இருக்கலாம், சில சமயங்களில் சக வீரர்களே கோலி என்பவர் உண்மையில் யார் என்று ஆச்சரியம் மேலிட பார்க்க நேரிடும்.

ஓய்வறையில் பயம் ஒரு காரணமாக இருக்கலாம், அணிக்குள் ஏகப்பட்ட இளம் வீர்ர்கள் வரும்போது இது ஒரு தேவையில்லாத அம்சம்மாகும். எனவே கோலி மீது செல்வாக்குச் செலுத்தி அவரை நல்வழிப்படுத்தி இன்னும் சிறந்த தலைவராக உதவ ஒரு நபர் தேவை.

ஆனால் வயதாக வயதாக கோலி மாறிவிடுவார், அப்போது முகத்துக்கு எதிரே ஆக்ரோஷம் காட்டுபவராக அவர் இருக்க மாட்டார். கோலிக்குள் இருக்கும் அவரிடமே உள்ள வித்தியாசமான ஒரு மனிதரை ஒருவர் அடையாளம் காணச்செய்ய வேண்டும்.

அவரிடம் திறமை உள்ளது, அனைத்திலும் சிறப்பாக வேண்டும் என்ற அவா உள்ளது. உலகின் சிறந்த வீரராக வேண்டும் என்ற ஆர்வம் மேலிடுகிறது எனவே அவருக்கு உதவி தேவை.

விராட் கோலி யு-19 உலகக்கோப்பையை வெல்லும் போது நான் தென் ஆப்பிரிக்கா யு-19 அணியின் பயிற்சியாளராக இருந்தேன். அவர் வயதையொத்தவர்களில் மிகச்சிறந்த தனித்துவமான பேட்ஸ்மென் என்பதை நான் அப்போது கவனித்தேன்.

அவரது வெளிநாட்டு பேட்டிங் பற்றி பலரும் பேசுகின்றனர், ஆனால் தென் ஆப்பிரிக்காவில் டுபிளெசிஸ், ஆம்லா, டிவில்லியர்ஸை பின்னுக்குத் தள்ளி அதிக ரன்களை எடுத்துள்ளார்.

நடப்பு ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்ற ஆக்ரோஷ கேப்டன் விராட் கோலி இந்நிலையிலிருந்து பின்னடைய அனுமதிக்க மாட்டார். ஒரு போட்டி மழையால் கைவிடப்படலாம், இன்னுமொரு போட்டியை தென் ஆப்பிரிக்கா வெல்லலாம், எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் தொடரை ஏற்கெனவே தென் ஆப்பிரிக்கா இழந்து விட்டது என்றே நான் கருதுகிறேன்” என்றார் ரே ஜெனிங்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x