Published : 05 Feb 2018 05:35 PM
Last Updated : 05 Feb 2018 05:35 PM

சாஹல், குல்தீப் யாதவ்விடம் தென் ஆப்பிரிக்கா சரணடைவது ஏன்?

தென் ஆப்பிரிக்க அணி 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரிடம் சரணடைந்தது. இதற்கான காரணங்களை தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் உள்ளிட்ட கிரிக்கெட் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

கிரிக்கெட் உலகில் அனைத்து அணிகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாக இந்த இருவரும் மாறியுள்ளனர். உலகிலேயே அபாயகரமான இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் என்ற பெயர் இருவருக்கும் ஏற்கெனவே கிடைத்து விட்டது.

ஏன் தென் ஆப்பிரிக்க அணியினர் இவர்களை ஆட முடியவில்லை என்பதில் டெகினிக்கலாக சில விஷயங்கள் உள்ளன.

இருவருமே பந்துகளை மிக மெதுவாக வீசுகின்றனர், மணிக்கு அதிகபட்சமாக இருவரும் வீசும் வேகம் 55 கிமீ வேகத்தைத் தாண்டவில்லை. இது ஸ்பின் பந்து வீச்சில் மிக மிக மெதுவான பந்து வீச்சாகும், இதனால் பேட்டிங் பெரிய சவாலாக அமையும், பொதுவாக காற்றில் பந்தைப் பார்த்தவுடனேயே வீரர்கள் ஸ்வீப் ஷாட்டா, மேலேறி வந்து ஆடுவதா, தடுத்தாடுவதா, முன் காலில் சென்று ஆடுவதா, பின் காலில் சென்று ஆடுவதா என்பதை விநாடிகளில் முடிவு செய்ய வேண்டும். இப்படியிருக்கையில் இவர்கள் பந்தின் வேகம் எதிர்பார்ப்பதை விட குறைவாக இருப்பதால் பிட்ச் ஆகும் இடம், லெந்த் உட்பட பேட்ஸ்மெனின் எதிர்பார்ப்புக்குக் கணிப்புக்கு மாறாகவே நிகழ்கிறது.

இந்தக் கால கிரிக்கெட்டில் அதிக எடைகொண்ட மட்டைகள், மட்டை விளிம்புகளின் அதி அடர்த்தி, எல்லைக்கோடு குறைக்கப்பட்ட மைதானங்கள் என்று வணிகரீதியாக கிரிக்கெட்டைக் கவர்ச்சியாக்க, பண எந்திரமாக மாற்ற பேட்டிங்குக்குச் சாதகமாக அனைத்தும் அமைந்த நிலையில் திடீரென இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் வந்து மிகவும் மெதுவாக வீசி மட்டையாளர்களின் ரிதம் கெடுமாறு செய்து வருவது பேட்ஸ்மென் ஆதிக்க வடிவத்தில் ஒரு பெரிய விஷயமே.

தென் ஆப்பிரிக்க பேட்டிங் பயிற்சியாளர் டேல் பென்கன்ஸ்டைன் கூறும்போது, “இவ்வளவு மெதுவாக வீசுவதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் மெதுவாக வீசும்போது ரன் எடுப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதற்குத்தான் பார்க்க வேண்டுமே தவிர சும்மா அவர்கள் ஓவர்களைக் கடத்துவதில் நேரம் செலவிடக்கூடாது.

அவர்கள் மெதுவாக வீசுவது பெரிய சவால், எங்கள் ஸ்பின்னர்கள் வேகமாக வீசுகின்றனர். ஸ்பின் தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு பிரச்சினைதான், தினசரிப் பயிற்சியில் ஸ்பின் பந்து வீச்சை அடிக்கடி ஆடிப்பழக வேண்டும். ஆனால் இதற்கு காலம்பிடிக்கும்” என்றார்.

ஸ்பின்னர்கள் ஓவர்களை டைட்டாக வீசி முடிக்க ஆர்வம் காட்டும் இந்நாளில் கோலியின் விருப்பத்துக்கேற்றவாறும் கிரிக்கெட்டின் தாரகமந்திரமான ‘ரன் விகிதத்தைக் குறைக்க விக்கெட்டுகளே முக்கியம்’ என்பதையும் ஏற்று பந்துகளை பேட்ஸ்மென்கள் அடிக்கலாம் என்பது போல் வீசுகின்றனர், ஆனால் இதுதான் பொறி. இதில் சிக்கினர் தென் ஆப்பிரிக்க வீரர்கள். ஏனெனில் மிஸ் ஹிட் என்பதை சாஹல், குல்தீப், கோலி ஆகியோர் பெரிதும் நம்புகின்றனர்.

சாஹல் இது குறித்து கிரிக் இன்போ இணையதளத்துக்குக் கூறும்போது, “மட்டைப் பிட்சில் ஆடும்போது பந்தின் வேகத்தை மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். ஒரே வேகத்தில் வீசக்கூடாது. இந்தப் பிட்ச்களில் பவுன்ஸ் இருக்கிறது எனவே இங்கு வேகமாக வீசினால் பந்து திரும்பாது. அதனால்தான் நானும் குல்தீப்பும் வேகத்தை கூட்டியும் குறைத்தும் வீசுகிறோம்.

குறிப்பாக இங்கு மைதானங்கள் சற்றே சிறியது. பெரிய ஹிட்டர்கள் உள்ளனனர் எனவே மெதுவாகவே வீச வேண்டும். ஆனால் நாங்களும் வேகமாக வீசும் சூழல் ஏற்படும், சூழ்நிலையைப் பொறுத்தது. நானும் குல்தீப்பும் விக்கெட்டுகளை வீழ்த்தவே வீசுகிறோம், நடு ஓவர்களில் 65-70 ரன்கள் போனாலும் 2-3 விக்கெட்டுகளை வீழ்த்தினோம் என்றால் நெருக்கடி பேட்டிங் அணிக்கு ஏற்படும்.

விராட் கோலியும் அணி நிர்வாகமும் எங்களிடம், ‘சிக்ஸ் அடித்தால் கவலை வேண்டாம், நம் பலத்துக்குத்தான் வீச வேண்டும், உன் பலம் பந்தை தூக்கி வீசுவது என்றால் அதைச்செய்’ என்று கூறுகின்றனர், கேப்டன் இப்படிக் கூறும்போது நமக்கு என்ன கவலை?” என்கிறார் சாஹல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x