Published : 01 Feb 2018 08:31 AM
Last Updated : 01 Feb 2018 08:31 AM

டர்பன் கிங்ஸ்மேட் மைதானத்தில் இன்று முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவில் வரலாறு படைக்குமா விராட் கோலி குழு - இதுவரை இருதரப்பு தொடரை இந்தியா வென்றது இல்லை

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மேட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்ற இந்திய அணி புத்தெழுச்சியுடன், 6 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரை சந்திக்கிறது. இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 14 மாதங்களே உள்ளதால், தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைபெறும் இந்தத் தொடர் அதி முக்கியவத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் உலகக் கோப்பை தொடருக்கு சிறந்த அணியை உருவாக்குவதற்கான முன் தயாரிப்பாக இந்தத் தொடரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்திய அணி இந்த ஆண்டில் பெரிய அளவிலான அடுத்த டெஸ்ட் தொடரை அணுகுவதற்கு முன்னர் அதிக அளவிலான குறுகிய வடிவிலான போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 6 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி 20 ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி, அதன் பின்னர் இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு டி 20 தொடரில் கலந்து கொள்கிறது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து, அயர்லாந்தில் 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 ஆட்டங்களிலும் பங்கேற்கிறது. இந்தத் தொடர்களுடன் இந்திய வீரர்கள் சுமார் 2 மாதம் ஐபிஎல் போட்டிகளிலும் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இதன் பின்னரே ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டி தொடரை இந்திய அணி எதிர்கொள்கிறது.

குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டியில் குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மண்ணில் விளையாடுவது என்பது ஒட்டுமொத்த குழுவாக ஒரு சிறந்த அணியை உருவாக்க இந்திய அணி நிர்வாகத்துக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும். மேலும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அணிக்சேர்க்கை உள்ளிட்ட சில விஷயங்களை சரிசெய்ய வேண்டிய சூழ்நிலையும் இந்திய அணிக்கு உள்ளது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்க மண்ணில் இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரை இதுவரை இந்திய அணி வென்றது இல்லை என்பதும் ஒரு நிதர்சனமான உண்மை.

இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்க மண்ணில் கடந்த 1992-93ம் ஆண்டு நடைபெற்ற தொடரை 5-2 எனவும், 2006-07ம் ஆண்டு தொடரை 4-0 எனவும், 2010-11ம் ஆண்டு தொடரை 3-2 எனவும், 2013-14ம் ஆண்டு தொடரை 2-0 எனவும் இந்திய அணி இழந்துள்ளது. இதுதவிர தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இரு முறை முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரிலும் கலந்து கொண்டு விளையாடி உள்ளது. 1996-97 மற்றும் 2001-02ம் ஆண்டு நடைபெற்ற இந்த இரு தொடர்களிலும் தென் ஆப்பிரிக்க அணியே கோப்பையை வென்றது. இந்த இரு தொடர்களிலும் 3-வது நாடாக முறையே ஜிம்பாப்வே, கென்யா அணிகள் பங்கேற்றிருந்தன.

1992-93ம் ஆண்டுக்கு பிறகு தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்திய அணி 28 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. மாறாக தென் ஆப்பிரிக்க அணி 21 ஆட்டங்களில் வாகை சூடியது. 2 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. இத்தகைய மோசமான சாதனைகளுடன் தான் தற்போது இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை அணுகுகிறது. அயல்நாட்டு மண்ணில் ஒருநாள் போட்டிகளிலும் முன்னேற்றம் காண வேண்டிய தீவிர நோக்கத்துக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

முதல் போட்டி நடைபெறும் டர்பன் கிங்ஸ்மேட் மைதானத்தில் இந்திய அணி இதுவரை சிறந்த வெற்றிகளை பதிவு செய்தது இல்லை. இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி 7 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 6 தோல்விகளை பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. அதேவேளையில் இந்த மைதானத்தில் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, கென்யா அணிகளை இந்திய அணி வீழ்த்தி உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த மைதானத்தில் இந்திய அணி 9 ஆட்டங்களில் இரு வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது.

இது ஒருபுறம் இருக்க தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 4-2 என்ற கணக்கில் கைப்பற்றினால் ஐசிசி தரவரிசையில் இந்திய அணி அணி முதலிடம் பிடிக்க வாய்ப்பு உருவாகக்கூடும் என்ற நிலை உள்ளது. தற்போது தென் ஆப்பிக்க அணி 120 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி 119 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. விராட் கோலி குழுவினருக்கு இது போதுமான ஊக்கமாக இருக்கக்கூடும். மேலும் வாண்டரர்ஸ் ஆடுகளத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்று நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துக் கொண்ட நிலையிலேயே விராட் கோலி குழுவினர் ஒருநாள் போட்டித் தொடரை எதிர்கொள்கிறது.

டெஸ்ட் தொடரை தென் ஆப்பிக்கா 2-1 என வென்றாலும், வாண்டரர்ஸ் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தை ஐசிசி மோசமான ஆடுகளமாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. வாண்டரர்ஸ் டெஸ்ட் வெற்றியால் இந்திய அணிக்கு புதிய உற்சாகம் கிடைத்துள்ளது. இந்த உற்சாக தருணங்களை ஒருநாள் போட்டித் தொடருக்கும் வியாபிக்க செய்யும் முயற்சிகளில் இந்திய அணி தீவிரம் காட்டக்கூடும். இந்திய அணி கடந்த 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 4-1 என இழந்தது. ஆனால் அதன் பின்னர் உள்நாடு மற்றும் அயல் நாட்டு மண்ணில் நடைபெற்ற இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடர்களில் ஒன்றை கூட இந்திய அணி இழக்கவில்லை.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஜிம்பாப்வே, நியூஸிலாந்து, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்றுள்ளது இந்திய அணி. இதில் நியூஸிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக மட்டும் இருமுறை இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. ஒட்டுமொத்தமாக நடைபெற்ற இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் 32 ஆட்டங்களில் இந்திய அணி 24 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை மட்டுமே இந்திய அணி இழந்தது. மற்றபடி அனைத்து தொடர்களிலும் கோப்பையை கைப்பற்றியது.

கேப்டன் விராட் கோலி, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் டி 20 தொடரில் கலந்து கொள்ளாத நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்குகிறார். அவர், களமிறங்குவதால் தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, இளம் வீரரான ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரது இடங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மட்டுமே அணியில் இடம்பெறக்கூடும். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் , 3 ஆட்டங்களில் இரண்டு அரை சதங்கள் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். எனினும் தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே ஆகியோர் அனுபவமிக்கவர்கள் என்பதால் அணித் தேர்வின் போது இவர்களது பெயரும் பரிசீலனையில் இருக்கக்கூடும்.

அதேவேளையில் இந்திய அணி ஒரே ஒரு பிரதான சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்க முடிவு செய்தால் கோலியின் முதன்மை தேர்வாக யுவேந்திரா சாஹல், அக்சர் படேலைவிட குல்தீப் யாதவ் இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தென் ஆப்பிக்க அணியில் அதிரடியாக விளையாடக்கூடிய ஜேபி டுமினி, டேவிட் மில்லர் ஆகியோர் இடது பேட்ஸ்மேன்களான உள்ளனர். அபாயகரமான வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய இவர்களை தொழில்நுட்ப ரீதியாக அணுகுவது குறித்தும் இந்திய அணி ஆலோசிக்கக்கூடும். ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டும் அணியில் இடம் பிடித்தால் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான கேதார் ஜாதவ் விளையாடும் லெவனில் இடம் பெற வாய்ப்புள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியும் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதத்திலேயே ஒருநாள் போட்டித் தொடரை எதிர்கொள்கிறது. கை விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக டி வில்லியர்ஸ் முதல் 3 ஆட்டங்களில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான். இதனால் தென் ஆப்பிக்க அணி நிர்வாகம் வித்தியாசமான அணிச் சேர்க்கையை தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. டிவில்லியர்ஸ் விளையாடாததால் அந்த இடத்தில் அறிமுக வீரரான கைல் ஸோண்டோ களமிறங்கக்கூடும். தொடக்க வீரர்களாக ஹசிம் ஆம்லா, குயிண்டன் டி காக் களமிறங்குவார்கள். மிடில் ஆர்டரில் எய்டன் மார்க்ரமுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடும். சுழற்பந்து வீச்சாளராக இம்ரன் தகிர் இடம் பெறலாம்.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ்பாண்டே, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாக்குர்.

தென் ஆப்பிரிக்கா: டு பிளெஸ்ஸிஸ், ஹசிம் ஆம்லா, குயிண்டன் டி காக், ஜேபி டுமினி, இம்ரன் தகிர், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், லுங்கி நிகிடி, பெலுக்வயோ, ரபாடா, தபராஸ் ஷம்சி, கயா ஸோண்டோ.

நேரம்: மாலை 4.30

நேரடி ஒளிபரப்பு: சோனி டென் 1

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x