Published : 06 Jan 2018 09:56 PM
Last Updated : 06 Jan 2018 09:56 PM

ஹர்திக் பாண்டியா தினம்: அதிரடி பேட்டிங்குக்குப் பிறகு பந்து வீச்சிலும் கலக்கல்

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 142 ரன்கள் முன்னிலை பெற்று சற்றே வலுவான நிலையில் இருந்தாலும் 2-வது நாள் ஆட்டம் ஹர்திக் பாண்டியாவுக்குச் சொந்தமாக அமைந்தது.

92/7 என்று தடுமாறிய இந்திய அணியின் நம்பிக்கையை தன் அதிரடி 93 ரன்களினால் மீட்ட ஹர்திக் பாண்டியா பிறகு தென் ஆப்பிரிக்காவின் 2-வது இன்னிங்ஸில் விழுந்த 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்த தினத்தை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்.

தென் ஆப்பிரிக்கா அணி ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் எடுத்துள்ளது. இரவுக்காவலன் ரபாடா கவலைதரும் சில பீட்டன் தருணங்களுடன் 2 ரன்கள் எடுத்தும், ஹஷிம் ஆம்லா 4 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி மீண்டும் முதல் இன்னிங்சில் செய்த அதே தவற்றைச் செய்து வருகிறது. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா எடுத்த 65 ரன்களில் 12 பவுண்டரிகள் என்பது குறிப்பிடத்தக்கது, ஷார்ட் பிட்ச், ஆஃப் வாலி, லெக் திசை பவுலிங் என்று சொதப்பலும் நிகழ்ந்தது. பவுண்டரி பந்துகளை கொடுப்பதுதான் தென் ஆப்பிரிக்காவின் நம்பிக்கையை வலுவாக்குகிறது. மேலும் டீன் எல்கருக்கு ஷமி ஒரு கேட்சை விட்டார்.

20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 45 ரன்கள்தான் எடுத்திருக்க வேண்டும், ஆனால் 65 ரன்கள் எடுத்தது. குறிப்பாக தொடக்க வீரர் மார்க்ரமுக்கு 34 ரன்களில் 7 பவுண்டரிகளை கொடுத்தது தவறு. அவர் கடைசியில் பாண்டியா வீசிய இடுப்புக்கு மேல் வந்த பந்தை லெக் திசையில் புல்லும் அல்லாமல், பிளிக்கும் அல்லாமல் ஒரு ஷாட்டை ஆட முன் விளிம்பில் பட்டு ஆஃப் திசையில் புவனேஷிடம் கேட்ச் ஆனது. டீன் எல்கருக்கும் எளிதான 4 பவுண்டரிகளைக் கொடுத்தனர், அவர் 25 ரன்கள் எடுத்து பாண்டியா பந்தை சஹாவிடம் எட்ஜ் செய்தார். புவனேஷ்வர் குமார் ஹஷிம் ஆம்லாவுக்கு 5 பந்துகள் நன்றாக வீசிவிட்டு ஒரு லெக் ஸ்டம்ப் புல் பந்தை வீச பவுண்டரி ஆனது. இதுதான் பலவீனம், பவுண்டரி பந்துகளை பீல்டிங்கில் பாதுகாப்புக் கொடுத்து கோலி தடுக்க வேண்டும்.

இந்த இன்னிங்ஸ் முழுதுமே எல்கர் திருப்திகரமாக ஆடவில்லை, நிறைய எட்ஜ்கள் ஆனது. பும்ரா மீண்டும் ஒருநாள் போட்டிகளில் வீசும் லெந்தில் வீசினார். தொடக்கத்தில் அவருக்குக் கொடுத்திருக்கக் கூடாது, தோனியாக இருந்தால் கொஞ்சம் உள்ளுணர்வுடன் அஸ்வினை வைத்து இன்னொரு முனையில் தொடங்கியிருப்பார், அவர் நம் வலுவுக்கு ஆடுபவர். கோலி அஸ்வினுக்கு 1 ஓவர்தான் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் 1 மெய்டன் 17 ரன்கள் 2 விக்கெட்டுகள். தென் ஆப்பிரிக்கா 65/2. மொத்தம் 142 ரன்கள் முன்னிலை, நாளை முதல் 2 மணி நேரம் முக்கியமானது, பந்துகள் முதல்நாள் அளவுக்கு ஸ்விங் ஆகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x