Published : 06 Jan 2018 10:21 AM
Last Updated : 06 Jan 2018 10:21 AM

இங்கிலாந்து அணி 346 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: விரைவாக 6 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார் ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 346 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுதத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.

சிட்னியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 81.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. ஸ்டோன்மேன் 24, ஜேம்ஸ் வின்ஸ் 25, அலாஸ்டர் குக் 39, ஜோ ரூட் 83, ஜானி பேர்ஸ்டோவ் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். டேவிட் மலான் 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது.

டேவிட் மலான் 180 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்தை பின்னங்கால் நகர்வின்றி டேவிட் மலான் அடிக்க முயன்ற போது மட்டையின் தடிமனான விளிம்பில் பட்டு 2-வது சிலிப்பில் நின்ற ஸ்மித்திடம் கேட்ச் ஆனது. இடது பக்கமாக மிகவும் தாழ்வாக வந்த இந்த பந்தை ஸ்மித் ஒற்றை கையால் அற்புதமாக கேட்ச் செய்தார். அடுத்து களமிறங்கிய மொயின் அலி 30, டாம் குரன் 39 ரன்களில் பாட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து ஸ்டூவர்ட் பிராடு 31 ரன்களில் நாதன் லயன் பந்திலும், கடைசி வீரராக மேசன் கிரேன் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகியும் வெளியேறினர். முடிவில் இங்கிலாந்து அணி 112.3 ஓவர்களில் 346 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கடைசி 6 விக்கெட்களை அந்த அணி 113 ரன்களுக்கு தாரை வார்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்களும் மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசல்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரரான கேமரூன் பான்கிராஃப்ட் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் போல்டானார்.

இதையடுத்து களமிறங்கிய உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னருடன் இணைந்து நேர்த்தியாக பேட் செய்தார். வார்னர் 88 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் தனது 27-வது அரை சதத்தை அடித்தார். சிறப்பாக விளையாடிய அவர் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில், விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

2-வது விக்கெட்டுக்கு கவாஜாவுடன் இணைந்து வார்னர் 85 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட் சரியாமல் பார்த்துக் கொண்டது. கவாஜா 107 பந்துகளில், 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் அரை சதம் கடந்தார். இது அவரது 11-வது அரை சதமாக அமைந்தது. ஸ்மித் 26 ரன்களை கடந்த போது சர்வதேச டெஸ்ட்டில் 6 ஆயிரம் ரன்கள்என்ற மைல் கல் சாதனையை எட்டினார். இதன் மூலம் விரைவாக 6 ஆயிரம் ரன்களை எட்டிய பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள கேரி சோபர்ஸூடன் சாதனையை பகிர்ந்து கொண்டார் ஸ்மித்.

இருவரும் 111-வது இன்னிங்ஸில் 6 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளனர். இந்த வகையில் டான் பிராட்மேன் 68 இன்னிங்ஸில் 6 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 67 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. கவாஜா 204 பந்துகளில், 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 91 ரன்களும், ஸ்மித் 88 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 153 ரன்கள் பின்தங்கிய நிலையில் கைவசம் 8 விக்கெட்கள் இருக்க இன்று 3-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது. - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x