Published : 06 Jan 2018 10:21 AM
Last Updated : 06 Jan 2018 10:21 AM

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட்: 2-வது கட்ட போட்டிகள் திருநெல்வேலியில் நாளை தொடக்கம்

பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 சாம்பியன்ஷிப் போட்டிகளின் நான்காவது பதிப்பின் 2-ம் கட்ட போட்டிகள் முத்தூட் குழுமத்தின் ஆதரவுடன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவியுடன் திருநெல்வேலியில் நாளை தொடங்குகின்றன.

இதுகுறித்து இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன இணைத் தலைவர் (உற்பத்தி) எஸ்.சண்முகம், பொதுமேலாளர் தட்சிணாமூர்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் துணை மேலாளர் லூயிஸ் மரியானோ, முத்தூட் குழும திருநெல்வேலி மண்டல மேலாளர் முஸ்தாக் அலி, கிரிக்கெட் சங்க மாவட்ட கவுரவச் செயலாளர்கள் ராம்குமார், எம்.ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜூனியர் கிங்ஸ் டி20 முதல் கட்டப் போட்டிகள் 8 மாவட்டங்களில் நடைபெற்று முடிந்தன. இதில் சென்னையில் நடைபெற்ற போட்டிகளில் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகளும், மற்ற மாவட்டங்களில் முதலிடம் பிடித்த அணிகள் என மொத்தம் 8 அணிகள் 2-வது கட்ட தொடரில் மோதுகின்றன. திருநெல்வேலி சங்கர்நகர் ஐசிஎல் மைதானத்தில் நாளை தொடங்கும் இந்தத் தொடர் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் டான் போஸ்கோ, ஸ்ரீரங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, லே சாட்லியர், ஜவஹர் சிபிஎஸ்இ, ஏவிஎம் ராஜேஷ்வரி, நீலாம்பாள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக்குலேசன் பள்ளி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் 3 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும். 12 லீக் போட்டிகள், 3 நாக் அவுட் போட்டிகள் என்று மொத்தம் 15 போட்டிகள் நடைபெறும். இருபிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் 11-ம் தேதியும், இறுதிப் போட்டி 12-ம் தேதியும் நடைபெறும். அரை இறுதி ஆட்டங்கள் வரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சானலில் 1 மணிநேர தொகுப்பாக ஒளிபரப்பு செய்யப்படும். அதேவேளையில் இறுதிப் போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். போட்டிகள் காலை 9 மணிக்கும், மாலை போட்டிகள் மதியம் 1 மணிக்கும் தொடங்கும். ஒவ்வொரு போட்டிக்கும் சிறந்த ஆட்டக்காரர், சிறந்த மட்டையாளர், சிறந்த பந்துவீச்சாளர், இறுதிப் போட்டிக்கான சிறந்த வீரர் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும்.தற்போதைய டி 20 போட்டிகளின் விதிமுறைகள் இந்த போட்டிகளுக்கும் பொருந்தும். இந்த போட்டிகளின் வெள்ளை நிற பந்து பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x