Published : 10 Dec 2017 06:18 PM
Last Updated : 10 Dec 2017 06:18 PM

தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி: இந்திய அணியை முழு ஆதிக்கம் செலுத்தி இலங்கை வெற்றி

தரம்சலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பந்து வீச்சுக்குச் சாதகமான பிட்சில் இந்திய அணியை முழு ஆதிக்கம் செலுத்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது, இதன் மூலம் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இதனால் ஒருநாள் அணிகள் தரவரிசையில் முதலிடம் செல்லும் வாய்ப்பை இந்திய அணி இப்போதைக்கு இழந்தது.

சுரங்க லக்மலின் அபாரமான தொடர் 10 ஓவர்கள் ஸ்பெல்லில் இந்திய அணி 112 ரன்களுக்குச் சுருண்டது. 29/7 என்ற நிலையில் தோனியின் அருமையான 65 ரன்களினால் 112 ரன்களை எட்டியது. ஆனால் இந்தப் பிட்சில் இது போதுமானதல்ல.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், பும்ராவுக்கும் பந்துகள் இருபுறமும் ஸ்விங் ஆயின. தனுஷ்கா குணதிலகா மட்டை விளிம்பைக் கடந்து நிறைய பந்துகள் சென்றன. இதில் வெறுப்படைந்து பும்ராவை ஏதாவது செய்ய வேண்டும் என்று நேராக ஒரு தூக்குத் தூக்க வேண்டும் என்று எண்ணினார். எட்ஜ் ஆகி வெளியேறினார். 11 பந்துகளில் 1 ரன்.

பும்ராவும் தனது பந்து வீச்சில் உபுல் தரங்காவை கிட்டத்தட்ட வீழ்த்தினார், கல்லியில் கேட்ச் ஆனது, ஆனால் அது நோ-பால் என்று தெரியவர ஏமாற்றமே மிஞ்சியது. லாஹிரு திரிமானே ஸ்கோரர்களை தொந்தரவு செய்யும் முன்னரே புவனேஷ்வர் குமார் பந்து ஒன்றை முன்னாலும் செல்லாமல் பின்னாலும் செல்லாமல் ஆட முற்பட்டு பந்தை ஸ்டம்பில் வாங்கி விட்டுக் கொண்டார். இதுவும் நோ-பாலா என்று சோதிக்கப்பட்டது, ரீப்ளேயில் எதுவும் முடிவாகத் தெரியாத நிலையில் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மெனுக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அம்மாதிரியான கிரிக்கெட் காலத்தில் நாம் இல்லை என்பதால் திரிமானே வெளியேறினார்.

ஆனால் தரங்கா அதன் பிறகு மிக அழகான டைமிங்கில் சில அபார பவுண்டரிகளை அடித்து ஆட்டத்தில் இலங்கை ஆதிக்கத்தை உறுதி செய்தார். பல கவர் டிரைவ்கள் ஆடி 10 பவுண்டரிகளுடன் 46 பந்துகளில் 49 ரன்கள் விளாசி பாண்டியா பந்தை எட்ஜ் செய்து தவணிடம் கேட்ச் ஆனார்.

112 ரன்களை வைத்துக் கொண்டு இந்திய அணி நெருக்கமான களவியூகத்தையே அமைக்க முடியும் இதனால் ஏற்பட்ட இடைவெளிகளை தரங்கா அருமையாகப் பயன்படுத்தி விளாசினார். மேத்யூஸ், டிக்வெல்லா சேர்ந்து அதன் பிறகு 10 பவுண்டரிகலை விளாசி, மேத்யூஸ் 25 ரன்களையும் டிக்வெல்லா 26 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாக 20.4 ஓவர்களில் வெற்றி பெறச் செய்தனர். குல்தீப் யாதவ், சாஹல் பந்து வீசவேயில்லை. இது தவறானது, இருவரையும் முயற்சித்துப் பார்த்திருக்க வேண்டும். இம்மாதிரியான பிட்ச்களில் ஷமி, யாதவ் போன்றவர்கள் அபாயகரமாகத் திகழ்வார்கள்.

வருடங்கள் கணக்காக மட்டைப் பிட்சிலேயே ஆடி வந்த இந்திய அணிக்கு இந்தத் தோல்வி ஒரு பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

சுரங்க லக்மல் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x