Published : 13 Oct 2017 10:09 AM
Last Updated : 13 Oct 2017 10:09 AM

டி 20 தொடரை வெல்வது யார்? இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டி 20 ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி டி 20 தொடரின் முதல் ஆட்டத்திலும் அந்த ஆதிக்கத்தை தொடர்ந்தது. ஆனால் குவாஹாட்டியில் நடைபெற்ற 2-வது டி 20 ஆட்டத்தில் இந்திய அணிக்கு முரட்டுத்தனமாக அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது டேவிட் வார்னர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளது.

ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு சிறந்த விருந்ததாக அமையக்கூடும். 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. இந்த ஆட்டத்தில் அனைத்து துறைகளிலும் சோபிக்க தவறிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து தொடரை வெல்ல முயற்சிக்கும்.

குவாஹாட்டி ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங்கை, இடது கை வேகப்பந்து வீச்சளாரான ஜேசன் பெஹ்ரென்டார்ப் தொடக்கத்திலேயே கடுமையாக சேதப்படுத்தியிருந்தார். இதனால் அவரது பந்து வீச்சில் இந்திய டாப் ஆர்டர் வீரர்கள் கவனமுடன் எதிர்கொள்ளக்கூடும். சர்வதேச டி 20-ல் முதன் முறையாக டக் அவுட் ஆன விராட் கோலியிடம் இருந்து இன்று சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தொடக்கத்திலேயே விக்கெட் கைப்பற்றி அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆனால் ரிஸ்ட் ஸ்பின்னர்களான யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்த தவறினார்கள். இவர்களது பந்து வீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களான ஹென்ட்ரிக்ஸ், டிரெவிஸ் ஹெட் ஆகியோர் சரளமாக ரன்கள் குவித்து மிரட்டினர். 3-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்கு வகித்த இந்த ஜோடி இன்றும் சவால் அளிக்கக்கூடும்.

குல்தீப் யாதவ் இந்த ஆட்டத்தில் பந்துகளை ஷார்ட் ஆகவும், முழு நீளமாகவும் வீசியதால் ஆஸ்திரேலிய வீரர்கள் எந்தவித சிரமமும் இன்றி ரன்வேட்டையாடினர்.

மேலும் பனிப்பொழிவின் காரணமாக ஆஸ்திரேலிய பேட்டிங்கின் போது பந்துகள் அதிக அளவில் சுழலவும் இல்லை. இதுவும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க முடியாததற்கு ஒரு காரணியாக அமைந்தது.

அதிக ரன்கள் வாரி கொடுத்ததால் சுழற்பந்து வீச்சு கூட்டணியை கோலி மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளது. இது நிகழ்ந்தால் குல்தீப் யாதவுக்கு பதிலாக அக்சர் படேல் இடம் பெறக்கூடும்.

குவாஹாட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடிய விதம், நோக்கம் ஆகியவற்றில் முந்தைய ஆட்டங்களின் உடல் மொழியில் இருந்து பெரிய வித்தியாசத்தை காண முடிந்தது. இதனால் தொடரை வெல்வதற்கு அந்த அணி நிச்சயம் கடுமையாக போராடும்.

தனது 2-வது ஆட்டத்திலேயே ஸ்விங் பந்து வீச்சால் முத்திரை பதித்த ஜேசன் பெஹ்ரென்டார்ப் மீண்டும் நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளார். குவாஹாட்டி ஆட்டத்தில் 2 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய ஆடம் ஸம்பாவும் பந்து வீச்சில் பலம் சேர்க்கக்கூடும்.

போட்டி நடைபெறும் ராஜீவ்காந்தி மைதானம் வழக்கமாக ரன்குவிப்புக்கு சாதகமாகவே இருக்கும். இதனால் முதலில் பேட் செய்யும் அணி தாராளமாக ரன்கள் குவிக்க முடியும். ஐபிஎல் போட்டிகளுக்கு பழக்கப்பட்ட இந்த மைதானத்தில் சர்வதேச டி 20 போட்டி நடைபெற உள்ளது இதுவே முதன்முறை. இங்கு டேவிட் வார்னர், ஐபிஎல் போட்டிகளில் அதிக அளவு ஆட்டங்களில் விளையாடி உள்ளார். இதனால் அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். இதற்கிடையே வரும் 20-ம் தேதி வரை ஹைதராபாத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, மணீஷ் பாண்டே, மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆசிஷ் நெஹ்ரா.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர் (கேப்டன்), ஆரோன் பின்ச், டிரெவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், ஜேசன் பெஹ்ரென்டார்ப், டேன் கிறிஸ்டியன், ஹென்ட்ரிக்ஸ், டிம் பெயின், கேன் ரிட்சர்ட்சன், ஆடம் ஸம்பா, மார்க்கஸ் ஸ்டாயினிஸ், ஆன்ட்ரு டை, நாதன் கோல்டர் நைல். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x