Published : 23 May 2015 03:38 PM
Last Updated : 23 May 2015 03:38 PM

6 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் முதல் வெற்றி: ஜிம்பாப்வேயை வீழ்த்திய பாகிஸ்தான்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் முதன் முதலாக சர்வதேச கிரிக்கெட் நடைபெற்றது.

லாகூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி சிறப்பாக பேட் செய்து சவாலான 173 ரன்கள் வெற்றி இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முக்தர் அகமதுவின் 45 பந்தில் 83 ரன்கள் என்ற அதிரடி இன்னிங்ஸினால் 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆனால் ஜிம்பாப்வே பந்து வீச்சில் எந்த வித தாக்கமும் இல்லை என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும், பாகிஸ்தான் அணியும் எந்த நிலையிலிருந்தும் சடசடவென சரியும் போக்கு கொண்டது. அதனால் முக்தரின் இன்னிங்ஸ் நேற்று முக்கியத்துவம் பெற்றது.

முக்தர் அடித்த 12 பவுண்டரிகளில் 9 பவுண்டரிகள் ஃபைன் லெக் திசையில் வந்தது என்றால் ஜிம்பாப்பே பந்துவீச்சின் அளவு மற்றும் திசை எப்படி இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த அதிரடியின் 34 பந்துகளில் அரைசதம் கண்டார் முக்தர்.

அகமது ஷெசாத்தும் சில முரட்டு ஷாட்களை ஆடி 39 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்தார். முக்தர் அகமது 45 பந்துகளில் 12 பவுண்டரி 3 சிச்கர்களுடன் 83 ரன்கள் எடுத்தார். இருவரும் 14 மற்றும் 15-வது ஓவர்களில் வெளியேறினாலும் ஸ்கோர் 144/2 என்று வலுவான நிலையில் இருந்தது.

ஆனால் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தவுடன் பாகிஸ்தான் மொகமது ஹபீஸ், உமர் அக்மல், ஷோயப் மாலிக் ஆகியோர் விக்கெட்டுகளை அடுத்த 25 ரன்களில் இழந்தது. 20-வது ஓவரின் 3-வது பந்தில் கேப்டன் ஷாகித் அப்ரீடி பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

நேற்று 6 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் திரும்பியதால் ரசிகர்களின் ஆதரவு நிறைய இருந்தது. முழு ஸ்டேடியமும் 2 மணி நேரங்களுக்கு முன்னதாக நிரம்பியது.

மஸகாட்சா 27 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். பிலாவல் பட்டியை ஸ்கொயர் லெக்கில் ஒரு அபார சிக்ஸ் அடித்தார். பாயிண்ட், மிட்விக்கெட் ஆகிய திசைகளில் பவுண்டரி விளாசினார்.

மாறாக மறுமுனையில் சிபந்தா 13 ரன்களை மட்டுமே எடுத்து 7-வது ஓவரில் மொகமது சமி பந்தில் டாப் எட்ஜ் எடுத்து அவுட் ஆனார். ஆனால் இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்காக 58 ரன்களைச் சேர்த்தனர். மசகாட்சாவும் மட்டையின் உள்விளிம்பில் பட்டு சமியிடம் பவுல்டு ஆனார்.

கேப்டன் எல்டன் சிகும்பரா 2 லைஃப்களுடன் 8 பவுண்டரி 1 சிக்சர் அடித்து 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவர்தான் இவர் ஆட்டமிழந்தார். வில்லியம்ஸ் 16 ரன்களையும், சிகந்தர் ராஸா 17 ரன்களையும் எடுக்க ஜிம்பாப்வே 172/6 என்று முடிந்தது. சமி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மாலிக் 3 ஓவர்களில் 12 ரன்களுக்கு 1 விக்கெட் கைப்பற்றி சிக்கனம் காட்டினார். வஹாப் ரியாஸ் 4 ஓவர்களில் 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்

ஆட்ட நாயகனாக முக்தர் அகமது தேர்வு செய்யப்பட, 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என்று வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x