Published : 30 Jan 2017 05:13 PM
Last Updated : 30 Jan 2017 05:13 PM

2-வது டி20: வெற்றி தோல்வியைத் தீர்மானித்த சர்ச்சைக்குரிய நடுவர் தீர்ப்புகள்

நாக்பூரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா 5 ரன்களில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி, தோல்வியை 2 நடுவர் தீர்ப்புகள் தீர்மானித்தன.

ஆட்டம் தொடங்கி 3-வது ஓவரில் ஜோர்டான் வீசிய 2-வது பந்தில் இந்திய கேப்டன் விராட் கோலி ‘பிளம்ப்’ எல்.பி. ஆனார். ஆன் திசையில் கோலி ஷாட் ஒன்றை முயற்சி செய்ய பந்து தாழ்வாக வந்து கோலியின் பேடைத் தாக்கியது. நடுவர் நாட் அவுட் என்றார். சந்தேகத்தின் பலனை அவர் கோலிக்கு சார்பாக அளித்தார், ஆனால் ரீப்ளேயில் பந்து நேராக மிடில் ஸ்டம்பை தாக்குவது தெரிந்தது.

கோலி அப்போது 7 ரன்களில் இருந்தார். நாட் அவுட் தீர்ப்புக்குப் பிறகு கோலி 1 பவுண்டரி 1 சிக்சருடன் மேலும் 14 ரன்களைச் சேர்த்து 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இம்முறை ஜோர்டானே கோலியின் விக்கெட்டைக் கைப்பற்றினார். வேகம் குறைந்த பந்து லாங் ஆனில் டாசனிடம் கேட்ச் ஆனது.

அவுட் கொடுக்க வேண்டியதை நாட் அவுட் என்ற பிறகு 14 ரன்கள் என்பது டி20 போன்ற குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதே. அதுவும் குறைந்த ரன்கள் போட்டியில் இத்தகைய தீர்ப்புகள் எதிரணிக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்துபவை.

2-வதாக நடுவர் மேலும் மோசமான தவறிழைத்தது, கடைசி ஓவரில். பும்ரா வீசுகிறார், இங்கிலாந்து வெற்றிக்குத் தேவை 8 ரன்கள், ஜோ ரூட், பும்ரா பந்தை ஷாட் ஆடும் போது ஜோ ரூட் மட்டையின் உள்விளிம்பில் பட்டது. ஆனால் இந்திய அணியினர் முறையீடு செய்தவுடன் சற்றும் யோசிக்காமல் அவுட் கொடுத்தார் நடுவர். ஜோ ரூட் 38 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த நிலையில் தொடரை இங்கிலாந்து நிச்சயம் வெல்லும் என்ற தருணத்தில் இந்த மோசமான தீர்ப்பு இங்கிலாந்தின் தோல்வியை தீர்மானித்தது.

ஆனால் மீதமுள்ள 5 பந்துகளில் 8 ரன்கள் பெரிய டீல் இல்லையே என்று நமக்கு தோன்றலாம், ஆனால் இத்தகைய பிட்சில், இரவு வெளிச்சத்தில் புதிய பேட்ஸ்மென் வந்து அழுத்தத்தில் ஆடுவது சாதாரண விஷயமல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஓவரில் பட்லரை பவுல்டு செய்தார் பும்ரா, கடைசி ஓவரில் 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றினார், இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-1 என்று சமனிலை எய்தியது.

இது குறித்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் இயன் மோர்கன் வெளிப்படையாகவே குறிப்பிட்டு விட்டார், “ஒரு தீர்ப்பு எங்களுக்கு எதிராகச் சென்றது” என்றார். பும்ராவின் கடைசி ஓவருக்கு முதல் ஓவரில் நெஹ்ரா 16 ரன்கள் விளாசப்பட்டார். நெஹ்ரான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் பும்ரா 4 ஓவர்களில் 20 ரனக்ளுக்கு வெற்றிகரமான 2 விக்கெட்டுகளை கைப்பற்றி ‘வெற்றி’க்கு இட்டுச் சென்றதால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த ஆட்டத்தின் ஒரே அரைசதத்தை எடுத்தவர் ராகுல் மட்டுமே. அவர் 47 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 71 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்ததாக இந்திய அணியில் மணிஷ் பாண்டே 1 சிக்சருடன் 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோர்டான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்திய அணியின் பெரிய பெயர்களான ரெய்னா, யுவராஜ் சிங், தோனி ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினர், இந்தியா 144 ரன்களையே எடுக்க முடிந்தது.

இங்கிலாந்து இலக்கைத் துரத்திய போது ஆஷிஷ் நெஹ்ரா ராய், பில்லிங்ஸ் இருவரையும் 4 ஓவர்களுக்குள் வீழ்த்தினார், 22/2 என்ற நிலையில் மோர்கன் (17), ரூட் (38) சேர்ந்து ஸ்கோரை 10 வது ஓவரில் 65 ரன்களுக்கு உயர்த்திய போது அமித் மிஸ்ராவிடம் மோர்கன் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இங்கிலாந்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் கூட்டணியாக ஸ்டோக்ஸ், ரூட் இணைந்து 40 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஸ்கோரை 117க்கு உயர்த்தினர். 27 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் ஸ்டோக்ஸ் 38 ரன்கள் எடுத்து நெஹ்ராவிடம் எல்.பி.ஆனார். இது பிளம்ப் எல்.பி.ஆகும்.

இதன் பிறகு பும்ரா 18-வது ஓவரில் தனது வேகம் குறைந்த பந்துகள் மூலம் கட்டுப்படுத்தி 3 ரன்களையே கொடுத்தார். நெஹ்ராவின் இறுதி ஓவர் 16 ரன்கள் விளாசப்பட்டது, பட்லர், கோலியின் கையைத் தள்ளிக் கொண்டு செல்லுமாறு ஒரு சிக்ஸ் அடித்தார். அதன் பிறகே கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது, அப்போதுதான் மட்டையில் பட்டுச் சென்ற பந்துக்கு நடுவர் ரூட்டிற்கு எல்.பி. தீர்ப்பளித்தார். இது இங்கிலாந்தை முடித்தது.

பந்தின் திசையை தீர்மானிப்பதில் நடுவர் தீர்ப்பு தவறாக முடிவதை புரிந்து கொள்ளலாம், ஆனால் மட்டையின் உள்விளிம்பில் பட்டதை நடுவர் கவனிக்காமல் இருந்தார் என்றால் அது நடுவரின் கடமை தவறலே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x