Last Updated : 18 Jan, 2017 10:10 AM

 

Published : 18 Jan 2017 10:10 AM
Last Updated : 18 Jan 2017 10:10 AM

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பாண்டேவை களமிறக்க கோலி விருப்பம்- யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இந்தியா - இங்கிலாந்து அணி களுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நாளை நடக்கிறது. இப்போட்டியில் விளையாடும் இந்திய அணியில் மணிஷ் பாண்டேவை களம் இறக்க கேப்டன் விராட் கோலி விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியில் யுவராஜ் சிங் நீடிப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் ஆடுவதற்காக இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே புனேயில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றபோதிலும் இந்திய அணியின் சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது அணியின் கேப்டன் விராட் கோலியை கவலை யடையச் செய்துள்ளது. குறிப்பாக மூத்த வீரர்களான தோனி, யுவராஜ் சிங், ஷிகர் தவண் ஆகியோர் அவுட் ஆன விதம் அவரை அதிருப்தி யடைய வைத்துள்ளதாக கூறப்படு கிறது. இதுகுறித்து புனேயில் நிருபர்களிடம் கூறிய கோலி, “புனே ஒருநாள் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக அவுட் ஆகவில்லை. மோசமான ஷாட்களை ஆடியதாலேயே அவுட் ஆனார்கள்” என்றார்.

மூத்த வீரர்கள் சறுக்கிய நிலை யில் கடந்த காலங்களில் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் சிறப்பாக ஆடிய மணிஷ் பாண்டே, ரஹானே ஆகியோரில் ஒருவருக்காவது கட்டாக் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து புனே போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் கூறிய கேப்டன் விராட் கோலி, “6-வது வரிசையில் கேதார் ஜாதவ் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், 4 அல்லது 5-வது இடத்தில் சிறப்பாக பேட்டிங் செய்ய மணிஷ் பாண்டே தயார் நிலையில் இருக்கிறார்” என்று குறிப்பிட்டார். 12 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள மணிஷ் பாண்டே, சராசரியாக 43 ரன்களை அடித்துள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியில் மூத்த வீரர்கள் கைவிட்ட நிலையில் தனியாக போராடி 104 ரன்களைக் குவித்து அணியை வெற்றிபெற வைத்தார். அவரைப் போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு தேவை என்று விராட் கோலி கருதுவதால் கட்டாக்கில் மணிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் மணிஷ் பாண்டேவை அணியில் சேர்க்கவேண்டும் என்றால் யுவராஜ் சிங்கை நீக்கவேண்டிய இக்கட்டான நிலையில் விராட் கோலி இருக்கிறார். எதிர்காலத்துக்கான இந்திய அணியை உருவாக்க தனது கனவு நாயகனான யுவராஜ் சிங்கை கோலி கழற்றி விடுவாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க தொடக்க வீரராக தொடர்ந்து சொதப்பிவரும் ஷிகர் தவணுக்கு பதிலாக கட்டாக்கில் ரஹானே களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x