Last Updated : 31 Jan, 2017 10:17 AM

 

Published : 31 Jan 2017 10:17 AM
Last Updated : 31 Jan 2017 10:17 AM

ஸ்டோனிஸ் அதிரடி வீணானது: பரபரப்பான ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூஸி லாந்து அணி 6 ரன்கள் வித்தியா சத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஆக்லாந்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. நெய்ல் புரூம் 75 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 73 ரன்களும், மார்ட்டின் கப்தில் 61, நீஷாம் 48 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி உதிரிகள் மூலமாக 29 ரன்கள் விட்டுக்கொடுத் திருந்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் 3, பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து 287 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட் செய்தது.

தொடக்க வீரர்களான ஆரோன் பின்ச் 4, டிரெவிஸ் ஹெட் 5, பீட்டர் ஹென்ட்ஸ் கோம்ப் 7, ஷான் மார்ஷ் 16, மேக்ஸ்வெல் 20 ரன்களில் நடையை கட்ட ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்களில் 54 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் தனியொருவனாக போராடினார்.

எனினும் அடுத்த 13 ரன்களை சேர்ப்பதற்குள் ஆஸ்திரேலியா மேலும் ஒருவிக்கெட்டை இழந்தது. ஹீஸ்லெட் 4 ரன்களில் பெர்குசன் பந்தில் வெளியேறினார். இதை யடுத்து இணைந்து ஜேம்ஸ்பாக்னர் உதவியுடன் சீராக ரன் குவித்தார் ஸ்டோனிஸ். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில் பாக்னர் (25) ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கம்மின்ஸ் 36, மிட்செல் ஸ்டார்க் 3 ரன்களில் நடையை கட்டினர். 43 ஓவர்களில் 9 விக்கெட்களுக்கு 226 ரன்கள் என்ற நிலையிலும் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடினார். 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் தனது முதல் சதத்தை அடித்தார்.

கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜோஸ் ஹசல்வுட், ஒரு பந்தைகூட சந்திக்காத நிலையில் இந்த கூட்டணி 10-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. இதில் ஸ்டோனிஸ் பங்கு மட்டும் 48 ரன்களாக இருந்தது.

அனைத்து பந்து வீச்சாளர்களுக் கும் எதிராக ஸ்டோனிஸ் ரன்வேட்டை நிகழ்த்தியதால் நியூஸி லாந்து கேப்டன் வில்லியம்சன் அதிர்ச்சியில் உறைந்தார். 47-வது ஓவரில் அவர் பீல்டிங்கில் சிறிய மாற்றம் செய்தார். ஷார்ட் மிட் ஆன் திசையில் தானே பீல்டு செய்தார்.

24 பந்துகளில் வெற்றிக்கு 19 ரன்களே தேவைப்பட்ட நிலையில் டிம் சவுத்தி வீசிய அந்த ஓவரில் முதல் 3 பந்துகளில் ரன்சேர்க்காத ஸ்டோனிஸ் அடுத்த இரு பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். கடைசி பந்தை யார்க்கராக வீச ஸ்டோனிஸ் தடுப்பாட்டம் மேற்கொண்டார்.

பந்தானது வில்லியம்சன் கைக்கு வந்தது. கடைசி பந்து என்பதால் நான் ஸ்டிரைக்கர் திசையில் இருந்த ஹசல்வுட் ரன் எடுப்பதற்காக ஆயத்தமாக கீரிஸை விட்டு ஓடுவதற்காக வெளியே தயாராக இருந்தார். இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட வில்லியம்சன் நொடிப்பொழுதில் ரன் அவுட் செய்து அசத்தினார்.

முடிவில் ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 280 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 26 நிமிடங்கள் களத்தில் நின்ற போதும் ஒருபந்து கூட சந்திக்காத ஹசல்வுட் ரன்கள் எதும் எடுக்காத நிலையில் வெளியேறினார். ஸ்டோனிஸ் 117 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 146 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூஸிலாந்து அணி தரப்பில் மிட்செல் சான்ட்னர் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். ஆட்ட நாயகனான ஸ்டோனிஸ் தேர்வானார். 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி வரும் 2-ம் தேதி நேப்பியரில் நடைபெறுகிறது.

பலே மார்கஸ் ஸ்டோனிஸ்

ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்களான வார்னர், உஸ்மான் கவாஜா ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஸ்டீவ் ஸ்மித்தும் இந்த தொடரில் விளையாடவில்லை. மாற்று கேப்டனாக அறிவிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் மேத்யூவ் வேட் முதுகுவலி காரணமாக நேற்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச் தலைமைவகித்தார். முன்னணி வீரர்கள் பலர் இல்லாத நிலையில் 54 ரன்களுக்கு எல்லாம் 5 விக்கெட்களை இழந்த போதிலும் மார்கஸ் ஸ்டோனிஸ் விளையாடிய விதம் அனைவருக்கும் வியப்பாகவே இருந்தது. இத்தனைக்கும் அவர் பங்கேற்ற 2-வது ஒருநாள் போட்டிதான் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x