Last Updated : 05 Dec, 2015 04:45 PM

 

Published : 05 Dec 2015 04:45 PM
Last Updated : 05 Dec 2015 04:45 PM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்: அஸ்வின், விஜய்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வோம் என்று இந்திய அணி வீரர்களான அஸ்வின் மற்றும் முரளி விஜய் தெரிவித்தனர்.

பிசிசிஐ.டிவி இணையதளத்தில் இது குறித்த செய்திப் பதிவில் அஸ்வின் கூறியிருப்பதாவது: இந்த பேரிடரிலும் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டியிருப்பது குறித்து பெருமையாக உள்ளது. மக்களில் பலர் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டியிருப்பது நல்ல விஷயம். களப்பணியில் ஈடுபட்ட எனது நண்பர்கள் நடிகர் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருக்கு எனது நன்றி. அவர்கள் மக்களுக்கு உதவ களமிறங்கியுள்ளனர். சென்னையின் உணர்வு இப்போது நல்ல முறையில் வெளிப்பட்டுள்ளது.

இந்த அழிவில் அனைத்தையும் இழந்த குடும்பங்களுக்காக நான் ஆழ்ந்து வருந்துகிறேன். இந்தத் தொடர் முடிந்தவுடன் நிச்சயம் மக்களுக்காக உதவி புரிய களத்தில் இறங்குவேன்” என்றார்.

முரளி விஜய் கூறும்போது, “மக்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது உண்மையில் நம்பமுடியாத அளவுக்கு உள்ளது. இது என்னுள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது. அனைவரும் மனவலிமையுடன் இந்நிலைமைகளை எதிர்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்தத் தருணத்தில் எனது குடும்பத்தினருடன் சென்னையில் இருக்க விரும்புகிறேன். ஒரு விதத்தில் அவர்கள் மனவலிமையுடன் இருப்பதால்தான் நான் இங்கு விளையாடிக் கொண்டிருக்க முடிகிறது” என்றார்.

டெல்லி டெஸ்ட் சதநாயகன் அஜிங்கிய ரஹானே கூறும்போது, “சென்னை மக்களுக்காக பிரார்த்திக்கிறோம். வீரர்களில் சிலரது குடும்பங்கள் சென்னையில் உள்ளன. எனவே எங்களால் சென்னை மக்களின் வலியை உணர முடிகிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ளோர் பாதுகாப்புக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x