Last Updated : 31 May, 2016 11:47 AM

 

Published : 31 May 2016 11:47 AM
Last Updated : 31 May 2016 11:47 AM

வெற்றிக்கு நான் மட்டும் காரணம் அல்ல; அணியின் கூட்டு முயற்சியாலேயே சாத்தியமானது- டேவிட் வார்னர்

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் சாம்பியன் பட்டம் வெல்ல நான் மட்டுமே காரணம் அல்ல. அணியின் கூட்டு முயற்சியாலேயே இது சாத்தியமானதாக அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன் தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. கேப்டன் டேவிட் வார்னர் 38 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார்.

ஷிகர் தவண் 28, யுவராஜ் சிங் 38 ரன்கள் சேர்த்தனர். ஹென்ரிக்ஸ் 4, நமன் ஓஜா 7, பிபுல் சர்மா 5 ரன்களில் நடையை கட்டினர். கடைசிக் கட்டத்தில் பென் கட்டிங் வெளுத்து வாங்கினார்.

வாட்சன் வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள் கிடைக்க வலுவான இலக்கை ஐதராபாத் அணி அமைத்தது. பென் கட்டிங் 15 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 3 ஓவர்களில் மட்டும் 52 ரன்கள் குவித்தது ஐதராபாத். பெங்களூரு அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் ஆடிய பெங்களூர் அணியில் கிறிஸ் கெயில்-விராட் கோலி ஜோடி அதிரடியாக விளையாடியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.3 ஓவர்களில் 114 ரன்கள் குவித்தது.

கெயில் 38 பந்துகளில் 8 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் குவித்த நிலையில் பென் கட்டிங் பந்தில் வீழ்ந்தார். கோலி 35 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து ஸரன் பந்தில் போல்டு ஆனார்.

பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 5, கே.எல்.ராகுல் 11, வாட்சன் 11, ஸ்டூவர்ட் பின்னி 9 ரன்களில் நடையை கட்டினர்.

கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த ஓவரை துல்லியமாக வீசிய புவனேஷ்வர் குமார் 9 ரன்களை மட்டுமே கொடுக்க பெங்களூர் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஐதராபாத் தரப்பில் பென் கட்டிங் 2 விக்கெட் கைப்பற்றினார்.

முதல் முறையாக பட்டம் வென்றது குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:

புவனேஷ்வர் குமார் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர். ஆனால் அவருக்கு இந்திய அணியில் நிரந்த இடம் இல்லாமல் உள்ளது. புதிய பந்தில் ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே சிறப்பாக வீசுகிறார்.

புவனேஷ்வர் குமார் பந்து வீசும் விதம் என்னை கவர்ந்தது. இதனால் அவர் மீது அதிகம் நம்பிக்கை உருவானது. கிரிக்கெட் மீது அளவில்லா பற்றுக் கொண்டவ அவர் அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடக்கூடியவர்.

இதேபோல் இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஸூர் ரஹ்மான் செயல்பாடும் சிறப்பாக இருந்தது. வளர்ந்து வரும் வங்கதேச வீரரான இவர் புவனேஷ்வருடன் இணைந்து பந்து வீசியது வேகப்பந்து வீச்சில் பலத்தை அதிகரித்தது. இவர் உடல் தகுதியில் கவனம் செலுத்தினால் நீண்ட நாட்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடலாம்.

கோப்பையை வெல்வதற்கு நான் மட்டுமே காரணம் அல்ல. அணியின் கூட்டு முயற்சியாலேயே கோப்பையை வென்றுள்ளோம். இது ஒரு குடும்பத்தின் முயற்சி, அதனாலேயே பட்டத்தை கைப்பற்றியுள்ளோம்.

பேட்டிங்கின் போது ஒரு கட்டத்தில் நாங்கள் 180 ரன்களை கூட எதிர்பார்க்க முடியாத நிலையில் இருந்தோம். ஆனால் பென் கட்டிங்கின் அதிரடி யால் 200 ரன்களுக்கு மேல் குவி த்தோம். அதிக ரன்கள் குவித்தால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டவன். 208 ரன்கள் என்பது அந்த தருணத்தில் 215 முதல் 220 ரன்களுக்கு சமமானது. பெங்களூரு அணி ஓவருக்கு 10 ரன்கள் சேர்த்த போதும் எங்களது பந்து வீச்சாளர்கள் அச்சமடையவில்லை. என்ன தேவையோ அதை சரியாக செயல்படுத்தினர்.

இவ்வாறு டேவிட் வார்னர் கூறினார்.

வெற்றிக்காக பிறந்தவர்

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கூறும்போது, "வார்னரின் தலைமைப் பண்பு இந்த தொடரில் நம்ப முடியாத வகையில் இருந்தது. பாதி ஆட்டங்களில் முக்கியமான வீரர்களான யுவராஜ்சிங், ஆஷிஸ் நெஹ்ரா விளையாடாத நிலையிலும் அணியை தொடர் முழுவதும் வார்னர் சிறப்பாக வழி நடத்தினார்.

அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். டி 20 வடிவில் மட்டுமல்ல அனைத்து வகையிலான ஆட்டத்திலும் தான். வார்னர் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வீரர். நான் அவருடன் மகிழ்ச்சியாக பணியாற்றினேன். வார்னர் வெற்றிக்காகவே பிறந்தவர். விளையாட்டு நெறிமுறைகள், ஒழுக்கம் ஆகியவற்றில் அவரது செயல்பாடுகள் நம்பமுடியாத வகையில் இருந்தது. இவை தலைமை பண்புகளுக்கு முக்கியமானவை" என்றார்.

தொடர் நாயகன்: விராட் கோலி

ஆட்டநாயகன்: பென் கட்டிங்

சிறந்த வளர்ந்து வரும் வீரர்: முஸ்தாபிஜுர்

அசத்திய டேவிட் வார்னர்

ஐதராபாத் அணி முதல்முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது. அந்த அணி பட்டம் வென்றதில் வார்னரின் பங்கு அதிகம் உள்ளது. கேப்டனாக அவர் அணியை எல்லா வகையிலும் முன்னின்று வழி நடத்தினார்.

பெரும்பாலான ஆட்டங்களில் அவர் தனிநபராகவே களத்தில் போராடி வெற்றி தேடிக்கொடுத்தார். இந்த தொடரில் அவர் 848 ரன்கள் குவித்தார். இதில் பாதிக்கு மேல் இலக்கை நோக்கி துரத்திய ஆட்டங்களில் வந்தவை. வார்னர் இல்லையென்றால் ஐதராபாத் அணி இறுதிப்போட்டியில் கால்பதித்திருக்காது. இறுதிப்போட்டியில் வார்னர் 38 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார்.

மற்ற அணிகள் சுழற்பந்து வீச்சை ஆயுதமாக பயன்டுத்திய நிலையில் புவனேஷ்வர் குமார், முஸ்தாபிஜுர் ரஹ்மான், ஆஷிஸ் நெஹ்ரா, பரிந்தர் ஸரன், ஹன்ரிக்ஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியே எதிரணிகளை துவம்சம் செய்தார் வார்னர். அவரின் அசாத்திய திறமையால் தான் ஐதராபாத் முதல் முறை பட்டம் வென்றுள்ளது.

அற்புதமான உணர்வு

ஐபிஎல் 9-வது தொடரை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வென்றது. இதுதொடர்பாக அந்த அணி வீரர் யுவராஜ் சிங் கூறும்போது, "ஐபிஎல் கோப்பையை வென்றது ஒரு அற்புதமான உணர்வு. இரு உலகக்கோப்பையை வென்ற அணிகளில் இருந்த போதும், ஐபிஎல் கோப்பை வென்ற அணியில் இதற்கு முன்பு இருந்ததில்லை. கடந்த 8 வருடங்களாக இந்த தொடரில் நான் விளையாடினாலும் தற்போது தான் கோப்பையை வெல்ல முடிந்துள்ளது. ஐபிஎல் கோப்பை ஆனது எனது உலகக்கோப்பைகளில் இணைந்து இருக்கும்" என்றார்.

இறுதிப் போட்டி துளிகள்...

* சன்ரைஸர்ஸ் ஐதராபாத் எடுத்த 208 ரன்களே, ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் முதலில் ஆடிய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் 2011-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் பேட் செய்து எடுத்த 205 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.

* ஐதராபாத் அணியின் பென் கட்டிங் கடைசி ஓவரில் அடித்த சிக்ஸர் மைதானத்தை தாண்டி 117 மீட்டர் உயர்ந்து வெளியே பறந்தது. இந்த ஐபிஎல் போட்டியில் இதுவே அதிகபட்ச உயரம் சென்ற சிக்ஸர் ஆகும். இதற்கு முன் 110 மீட்டர்களே சாதனையாக இருந்தது.

* ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 24 பந்துகளில் அரை சதம் எடுத்து ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் அதிவேக அரை சதம் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் 2010-ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில், சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா 24 பந்துகளில் அரை சதம் எடுத்திருந்தார்.

* பெங்களூரு அணியின் ஷேன் வாட்சன் 4 ஓவர்கள் வீசி 61 ரன்கள் கொடுத்திருந்தார். டி20 போட்டிகளில் இதுவரை அவர் கொடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

* ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்பது இது மூன்றாவது முறை. இதற்கு முன் 2009, 2011 ஆகிய இரண்டு சீஸன்களில் அந்த அணி இறுதிப் போட்டிக்கு வந்து தோல்வியடைந்துள்ளது.

* இறுதிப்போட்டியில் இரு அணிகளும் பவர் ப்ளேவின் முடிவில் 59 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது. இரண்டு அணிகளின் பவர்ப்ளே மொத்த ஸ்கோர் 119 ரன்கள். 2012-ம் ஆண்டு ஐபிஎல் இறுதியில், சென்னை - கொல்கத்தா அணிகள் குவித்த 110 ரன்களே இதற்கு முன் ஐபிஎல் இறுதியில் அதிகபட்ச மொத்த பவர்ப்ளே ஸ்கோராக இருந்தது.

* இதுவரை நடந்துள்ள 9 ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றுள்ளது

* உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபி, அண்டர் 19 உலகக் கோப்பை, ஐபிஎல் என கிரிக்கெட்டின் முக்கிய தொடர்களில் விளையாடி கோப்பை வென்ற அணிகளில் யுவராஜ் சிங் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* 2016-ம் ஆண்டு 28 டி20 போட்டிகளில் விராட் கோலி 18 முறை அரை சதம் கடந்துள்ளார். இதற்கு முன், கிறிஸ் கெயில் 38 டி20 போட்டிகளில் 16 முறை அரை சதம் கடந்ததே சாதனையாக இருந்தது. இந்த ஐபிஎல் சீஸனில் விராட் கோலி 973 ரன்கள் குவித்திருந்தார். இதுவே ஒரு சீஸனில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்திருக்கும் அதிகபட்ச ரன்கள் ஆகும். ஐதராபாத் அணியின் வார்னர் 848 ரன்களோடு இரண்டாவது இடத்தில் இருக் கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x