Published : 23 May 2015 11:31 AM
Last Updated : 23 May 2015 11:31 AM

வழக்கமான தனித்துவ பாணியில் இறுதிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று ராஞ்சியில் நடைந்த ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

முதல் பிளே ஆஃப்போட்டியில் மும்பையிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இரண்டாவது பிளே ஆஃப் ஆட்டத்தில் சென்னை அணி நேற்று பெங்களூரு அணியை சந்தித்தது. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த சென்னை அணி பெங்களூரு அணியை 20 ஓவர்களில் 139 ரன்களுக்குக் கட்டுப்படுத்தியது.

140 ரன்கள் இலக்கை விரட்ட முதலில் களமிறங்கிய சென்னை வீரர்கள் ஸ்மித் மற்றும் மைக்கேல் ஹஸ்ஸி 3 ஓவர்களில் 21 ரன்களைக் குவித்தனர். 4-வது ஓவரில் ஸ்மித் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜோடி சேர்ந்த டூ ப்ளெஸ்ஸி, ஹஸ்ஸி ஜோடி நிலையாக ரன் சேர்த்தது.

சிறப்பாக ஆடி வந்த ப்ளெஸ்ஸி, பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹலின் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று ஸ்டம்பைப் பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய ரெய்னா தான் சந்தித்த 2-வது பந்தை தூக்கி அடிக்க முயல அது லாங்க்-ஆஃப் பகுதியில் இருந்த வீஸின் கைகளில் தஞ்சமடைந்தது. ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது சென்னைக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

10 ஓவர்களில் 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் தோனியும் ஹஸ்ஸியும் இணைந்தனர். இருவரும் தங்களது அதிரடியைக் குறைத்து சற்று நிதானமாகவே ஆடினர். பார்ட்னர்ஷிப்பில் 47 ரன்களை இருவரும் குவிக்க சென்னை வெற்றியை நெருங்கியது. ஹஸ்ஸி 43 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

22 பந்துகளில் 32 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஹஸ்ஸி 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய நெகி கேப்டன் தோனிக்கு ஈடுகொடுக்க, வெற்றி இலக்கு கைக்கு எட்டும் தூரத்தில் வந்தது. குறிப்பாக படேல் வீசிய 18-வது ஓவரில் நெகி அடித்த சிக்ஸர் சென்னையின் மேல் இருந்த அழுத்தத்தை வெகுவாகக் குறைத்தது.

2 ஓவர்களில் 13 ரன்கள் தேவை என்ற நிலை வர, 19-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரில் நெகி எதிர்பாராத விதத்தில் ரன் அவுட் ஆக, அடுத்து ஆட வந்த பிராவோ, முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் 3 பந்துகளில் 4 ரன்களை தோனி சேர்த்து 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆட வந்த அஸ்வின், பரபரப்பை மேற்கொண்டு நீட்டிக்காமல் தான் சந்தித்த முதல் பந்தில் 1 ரன் எடுத்து சென்னையை வெற்றி இலக்கை தாண்டச் செய்தார்.

இதுவரை நடந்த 8 ஐபில் தொடர்களில் (இந்த தொடரையும் சேர்த்து) சென்னை அணி இறுதிக்குத் தகுதி பெறுவது இது 6-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகனாக ஆஷிஷ் நேரா (28 ரன்களுக்கு 3 விக்கெட்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக முதலில் ஆடிய பெங்களூரு அணி அதிரடி வீரர்களை அணியின் கொண்டிருந்தும், சென்னை அணியின் பந்துவீச்சில் கட்டுப்பட்டது. ஒரு பக்கம் கெயில் அதிரடியாக ஆட முயற்சித்து வந்தாலும், மறுபக்கம் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.

4-வது ஓவரில் ஆஷிஷ் நேர, முதல் பந்தில் கோலியையும், கடைசி பந்தில் டி வில்லியர்ஸியம் வீழ்த்தினார். அந்த சூழலிலிருந்து சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். கெயில் வழக்கத்துக்கு மாறாக 43 பந்துகளில் 41 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரெய்னாவின் சுழலில் அவர் ஆட்டமிழந்தார்.

சற்று நம்பிக்கையளித்த தினேஷ் கார்த்திக்கும் 28 ரன்களில் வெளியேற, 107 ரன்களுக்கு 5 விக்கெட் என பெங்களூரு தத்தளித்தது. கடைசியில் ஆடிய சர்பராஸ் கான் அடித்த 31 ரன்களே பெங்களூரு அணி ஓரளவு சுமாரான இலக்கை நிர்ணயிக்க வழிவகுத்தது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x