Published : 09 Jul 2017 11:55 AM
Last Updated : 09 Jul 2017 11:55 AM

ரபாடாவுக்கு விதிக்கப்பட்ட தடை முட்டாள்தனமானது: கிரேம் ஸ்மித் கடும் சாடல்

இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் நடத்தை விதிகளை மீறியதாக ரபாடா மீது புகார் எழ அவர் ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.

ஏற்கெனவே இலங்கைக்கு எதிராக அவர் நடத்தை விதிகளை மீறியதாக அவருக்கு எதிராக புள்ளிகள் சேர, அன்று பென் ஸ்டோக்ஸை வீழ்த்திய ரபாடா ‘ஃபக் ஆஃப்’ என்று வசைபாடியதால் ஒரு போட்டியில் விளையாடத் தடை விதித்தது ஐசிசி.

இந்தத் தடை உத்தரவு முட்டாள்தனமானது என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் சாடியுள்ளார்.

“இந்த விஷயத்தை ஐசிசி இன்னமும் நன்றாகக் கையாண்டிருக்கலாம், அவர் வெறுப்பில் அப்படிக் கூறினாரே தவிர ஸ்டோக்ஸை நோக்கிக் கூறியதாகத் தெரியவில்லை, மேலும் ஸ்டம்ப் மைக்கிலும் ரபாடா கூறியது சரியாகப் பதிவாகவில்லை, ஏற்கெனவே உள்ள எதிர்மறைப் புள்ளிகளுடன் மைதானத்தில் அந்தக்கணத்தின் சூடில் தன்னை நோக்கியே அவர் வெறுப்படைந்து உதிர்த்த ஒரு எதிர்பாராத சொல்லுக்காக இன்னொரு எதிர்மறைப்புள்ளியைச் சேர்த்து தடை விதித்தது முட்டாள் தனமானது” என்று கடுமையாக சாடினார் ஸ்மித்.

இதற்கிடையே, நேற்று மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து தன் 2-வது இன்னிங்ஸில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 119 ரன்கள் எடுத்து மொத்தம் 216 ரன்கள் முன்னிலையுடன் வலுவாக திகழ்கிறது.

ஆட்ட முடிவில் அலிஸ்டைர் குக் 59 ரன்களுடனும், கேரி பாலன்ஸ் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஜெனிங்ஸ் 33 ரன்களில் மோர்கெலிடம் வீழ்ந்தார்.

முன்னதாக இங்கிலாந்தின் 458 ரன்கள் முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்சில் 361 ரன்கள் எடுத்தது. தெம்பா பவுமா சிறப்பாக ஆடி 59 ரன்கள் எடுத்து மொயின் அலியிடம் வீழ்ந்தார், கேப்டன் எல்கர் 54 ரன்களை எடுக்க, குவிண்டன் டி காக் அதிரடி முறையில் 37 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 51 ரன்களையும் பிலாண்டர் 52 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, டாஸன், பிராட், ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x