Last Updated : 01 Jan, 2017 12:35 PM

 

Published : 01 Jan 2017 12:35 PM
Last Updated : 01 Jan 2017 12:35 PM

ரஞ்சி கோப்பை அரை இறுதியில் தமிழகம்-மும்பை இன்று மோதல்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதியில் நடப்பு சாம்பியனான மும்பையை தமிழக அணி எதிர்த்து விளையாடு கிறது. 5 நாட்கள் கொண்ட இந்த போட்டி ராஜ்கோட்டில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

41 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை அணியை தமிழக அணி அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. இரு அணிகளுமே கால் இறுதி ஆட்டங்களில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருந்தது.

தமிழக அணி கால் இறுதியில் கர்நாடகா அணியை வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தை தமிழக அணி 2 நாட்களில் முடிவுக்கு கொண்டுவந்திருந்தது. அதேவேளையில் மும்பை அணி தனது கால் இறுதியில் கடைசி நாள் ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியிருந்தது.

தமிழக அணி, புதிய தலைமை பயிற்சியாளரான ரிஷிகேஷ் கனிட்கரின் மேற்பார்வையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கருண் நாயர், கே.எல்.ராகுல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் நிறைந்த கர்நாடக அணியை எளிதாக பந்தாடிய தமிழக வீரர்கள், அணியை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து சென்றுள்ளனர்.

ரஞ்சி கோப்பையில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள தமிழக அணி கடைசியாக கோப்பையை 28 ஆண்டுகளுக்கு முன்னர் கைகளில் ஏந்தியிருந்தனர். இம்முறை நட்சத்திர வீரர்களான அஸ்வின், முரளி விஜய் ஆகியோரது பங்களிப்பு இல்லாமலேயே அரை இறுதி வரை முன்னேறி உள்ளது.

மும்பை அணியின் சாதனைகள் அந்த அணிக்கு சாதகமாக இருந்தாலும் இம்முறை தமிழக அணி கடும் சவால் அளிக்கும் என்றே கருதப்படுகிறது. இந்த இரு அணிகளும் கடந்த அக்டோபர் மாதம் லீக் ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதியிருந்தன. 3 நாட்களில் முடிவடைந்த இந்த ஆட்டத்தில் மும்பை அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ஆனால் அப்போது விளையாடிய நிலையில் இருந்து மும்பை அணி தற்போது பெருமளவில் மாற்றம் கண்டுள்ளது. அந்த ஆட்டத்தில் 10 விக்கெட்கள் வீழ்த்திய தவால் குல்கர்னி காயம் அடைந்துள்ளார். இதேபோல் தொடக்க வீரர்களான அகில் ஹெர்வாத்கர், சுபம் ரன்ஜானி ஆகியோரும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.

அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா ஆகியோரும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் 17 வயதான இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் பிரித்வி ஷா 330 பந்துகளில் 546 ரன்கள் விளாசியிருந்தார்.

தற்போதைய மும்பை அணியில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் ஷ்ரேயாஷ் ஐயர் முதலிடத்தில் உள்ளார். அவர் 42.53 சராசரியுடன் 553 ரன்கள் எடுத்துள்ளார். அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சளாராக விஜய் கோஹில் உள்ளார். அவர் இந்த சீசனில் 24 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.

ஐதராபாத் அணிக்கு எதிராக 5 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகித்த ஆல்ரவுண்டரான அபிஷேக் நாயரும், தமிழக அணிக்கு நெருக்கடி தரக்கூடும்.

தமிழக அணியின் கேப்டனான அபிநவ் முகுந்த், பயிற்சியாளர் கனிட்கர் ஆகியோர் இம்முறை பட்டம் வெல்வதில் முனைப்புடன் உள்ளனர். 2012-ல் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக கனிட்கர், தனது அணிக்கு ரஞ்சி கோப்பையை வென்று கொடுத்திருந்தார். தற்போது பயிற்சியாளராகவும் அவர் சாதிக்க தமிழக அணியை சிறந்த முறையில் பட்டை தீட்டி உள்ளார்.

இந்த சீசனில் கவுசிக் காந்தி 726 ரன்களும், கேப்டன் அபிநவ் முகுந்த் 689 ரன்களும் குவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின் கிரைஸ்ட், விக்னேஷ், நடராஜன் ஆகியோரை கொண்ட வேகப்பந்து வீச்சு கூட்டணி மும்பை வீரர்களுக்கு நெருக்கடி தரக்கூடும்.

நாக்பூரில் நடைபெறும் மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் ஜார்க்கண்ட் - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x