Published : 07 Dec 2016 03:51 PM
Last Updated : 07 Dec 2016 03:51 PM

மொகமது ஷமியா? புவனேஷ்வர் குமாரா?: விராட் கோலி பேட்டி

முழங்கால் காயம் காரணமாக மொகமது ஷமி வியாழனன்று மும்பையில் தொடங்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த விராட் கோலி, ஷமி ஆடுவது பற்றி அனைவரும் சேர்ந்து கூட்டாக முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார். ஷமி ஆட முடியாது போனால் புவனேஷ் குமார் விளையாடுவார் என்று தெரிகிறது. அதே போல் தொடக்க நிலைக்கு விஜய், ராகுல் களமிறங்குவர். பார்த்திவ் படேல் விக்கெட் கீப்பராக நீடிப்பார் என்றும் தெரிகிறது.

விராட் கோலி பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

ராகுல், ஷமி குறித்து..

ராகுல் நல்ல நிலையில் உள்ளார். மொகமது ஷமியைப் பொறுத்தவரை இன்று மாலை அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. அதாவது அவர் விளையாட முடியும் என்று நினைக்கிறாரா என்பதைப் பொறுத்து முடிவெடுக்கப்படும். மொஹாலி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு முழங்காலில் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து முழங்கால் பிரச்சினை இருந்து வருவதால் அனைவரும் சேர்ந்தே அவர் ஆடுவது குறித்து முடிவெடுக்கப் போகிறோம்.

அவரை வலுக்கட்டாயமாக விளையாட வைத்து தொடரில் மீதமிருக்கும் போட்டிகளுக்கு அவரை இழக்க முடியாது, என்றார் கோலி.

3-வது டெஸ்ட் போட்டிக்கும் 4-வது டெஸ்ட் போட்டிக்கும் இடையே நீண்ட இடைவெளி குறித்து...

இந்த இடைவெளி நாங்கள் கேட்டதல்ல, பயணத் திட்டத்திலேயே இருப்பது. நாங்கள் இங்கிலாந்து செல்லும் போதும் 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன் 8 நாட்கள் இடைவெளியும் டெஸ்ட் தொடருக்கும் ஒருநாள் தொடருக்கும் இடையே 25 நாட்கள் இடைவெளியும் கேட்போம். மிகப்பெரிய கிரிக்கெட் சீசனில் இது போன்ற இடைவெளி நல்லதே. இது புத்துணர்வு அளிக்கக் கூடியதே.

கடும் கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே குடும்பத்தினரை பார்த்து வந்தது குறித்து..

போட்டிகளுக்கு இடையே குடும்பத்தினரை பார்க்க வீட்டிற்குச் செல்லும் போது கூட கிரிக்கெட்டை முழுதும் விட்டு விட முடியாது. ஒரு கேப்டனாக நான் என்ன செய்து விட்டேன், எப்படி கொண்டு செல்வது ஆடுவது போன்றவற்றை மனக்கண் முன் கொண்டு வந்து திட்டமிட வேண்டும். ஆனால் அதே வேளையில் கிரிக்கெட்டை மறந்து குடும்பத்துடன் வாழ்க்கையை மகிழ்வாக கழிப்பதும் அவசியம். ஆனால் நம் நாட்டின் பார்வையே வேறு. எப்போதும் கிரிக்கெட் வீரர்கள் ஆட்டத்தில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆனால் தொழில்பூர்வ கிரிக்கெட் வீரர்கள் என்பதால் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் வலைப்பயிற்சி என்று ஈடுபடும்போது புத்துணர்வு பெற்று விடுவோம்..

பந்துவீச்சு, அணிச்சேர்க்கை பற்றி...

வீரர்கள் தங்கள் தவறுகளை அடையாளம் காண்பது உதவியாக அமைகிறது. சீராக வீசுவதையும் எப்போதும் பேட்ஸ்மென்களை நோக்கியே செயல்படுவதிலிருந்து விலகி சீரான முறையில் லைன் லெந்த் என்று கவனம் செலுத்துவதும் முக்கியம். அதாவது பொறுமை என்பது அவசியம். எப்போதும் பேட்ஸ்மெனை நோக்கி கவனம் செலுத்துவதில் பிரச்சினை என்னவெனில் அந்த 4-5 ஓவர்களில் எதிரணி 25-30 ரன்களை எடுத்தால் அது ஆட்டத்தை தீர்மானிப்பதாக மாறிவிடும், மாறாக அந்த 4-5 ஓவர்களில் 4-5 ரன்கள்தான் கொடுக்கப்படுகிறது என்றால் பேட்ஸ்மெனைக் கட்டுப்படுத்தி நெருக்கடி கொடுப்பதாக அமையும். இதுதான் அவர்களது வழக்கம், எப்போதும் 5 விக்கெட்டுகளை தான் வீழ்த்த வேண்டும் என்று யாரும் நினைத்து பிரயத்தனப்படுவதில்லை. எனவே பிரயத்தனங்கள் கூடாது, சுயநலம் கூடாது. இதைத்தான் பவுலர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

பேட்டிங்கைப் பொறுத்தவரை ராகுல், விஜய்தான் நம் தொடக்க வீரர்கள், இவர்கள் இருவரும் வேறு நிலைகளில் இறங்கி பழக்கமில்லாதவர்கள் எனவே இவர்கள்தான் தொடங்கப் போகின்றனர்.

விஜய், ரஹானே பார்ம் குறித்து...

முரளி விஜய், அஜிங்கிய ரஹானே இருவரும் திடமான வீரர்கள். முதல் டெஸ்ட்டில் சதம் எடுத்தார். அதே போல் ரஹானேவும் மீண்டெழுவார், நியூஸிலாந்தில் நான் பெருமையளிக்கக் கூடிய ஸ்கோர்களை எடுக்கவில்லையே..நன்றாக ஆடவில்லை என்பதற்காக நாங்கள் வீரர்களை அணியிலிருந்து நீக்குவதில்லை.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x