Published : 08 Nov 2016 05:25 PM
Last Updated : 08 Nov 2016 05:25 PM

முதல் டெஸ்ட் முன்னோட்ட பார்வை: இந்திய சுழலை சமாளிக்குமா இங்கிலாந்து?

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நாளை முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதில்லை என்பது கோலி தலைமைக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாக தற்போது எழுந்துள்ளது.

இங்கிலாந்துக்கு இம்முறை ஒரே சாதகம் டி.ஆர்.எஸ் முறைக்கு இந்தியா ஒப்புக் கொண்டதே. அதனை சரியாக சாமர்த்தியமாக பயன்படுத்த்துவதில் இங்கிலாந்துக்கு அனுபவம் உள்ளது, இந்திய அணிக்கு அனுபவம் போதாது. எந்த ஒரு வீரரும் பிளம்பாக வாங்கி விட்டு ரிவியூவை விரயம் செய்யலாம். அல்லது நெருக்கமான பீல்டர்கள் மட்டையில் பட்டு கேட்ச் வந்ததாக சாதித்து ரிவியூவை விரயம் செய்யலாம். எனவே இந்திய அணி ரிவியூ முறையை சாதுரியமாக அணுகப் பழக வேண்டியுள்ளது

கடந்த முறை இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே குக் தலைமை இங்கிலாந்து வென்றது குறிப்பிடத்தக்கது. அப்போது கிரேம் ஸ்வான், மாண்டி பனேசர் இந்திய அணி நிர்வாகத்தின் “முதல் பந்திலிருந்தே திரும்பும் பிட்ச்கள்” என்ற தாரக மந்திரத்தை கேலி செய்யும் விதமாக பந்து வீசி இந்திய அணியின் தோல்விக்கு பெரும் காரணமாக அமைந்தனர்.

ஆனால் இம்முறை இங்கிலாந்து அணியில் அப்போதைய அனுபவசாலி ஸ்பின்னர்கள் இல்லை. அதற்காக மொயின் அலியின் ஆஃப் ஸ்பின்னை குறைத்து மதிப்பிடுவதற்கும் ஒன்றுமில்லை. ஏனெனில் இங்கிலாந்திலேயே அவர் இந்திய பேட்டிங் வரிசையை சில பல விக்கெட்டுகள் மூலம் பகடியாடியுள்ளார்.

இந்திய அணி தனது சொந்த மண்ணில் கடைசியாக கடந்த 2012-ல் இங்கிலாந்துக்கு எதிராக கொல்கத்தாவில் தோல்வியடைந்திருந்தது. அதன் பின்னர் 14 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை எதிர்கொள்ளாமல் அதீத பலத்துடன் வலம் வருகிறது இந்திய அணி.

இம்முறை இங்கிலாந்து எதிர்கொள்ள வேண்டியிருப்பது கோலி என்ற கேப்டன் மற்றும் பேட்ஸ்மெனின் ஆக்ரோஷமான அணுகுமுறை மற்றும் சொல்லவே வேண்டியிராத அஸ்வின், ஜடேஜா கூட்டணியை. சமீபத்தில் வங்கதேசத்தில் அறிமுக ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து கடுமையாக திணறியது, அந்த அணியின் ஜோ ரூட், அலில்ஸ்டர் குக் போன்றவர்களே திணறினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது விழுந்த 40 இங்கிலாந்து விக்கெட்டுகளில் 38 விக்கெட்டுகளை ஸ்பின்னர்கள் கைப்பற்றினர்.

இந்நிலையில் அஸ்வின் இருக்கும் ஃபார்மில் இங்கிலாந்துக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது என்றே கூற வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இந்திய அணிக்கு இன்னும் சுலபமும் கூட என்பதாகத்தான் தெரிகிறது. ஜேம்ஸ் ஆண்டர்சன் இல்லாதது இந்தியாவுக்கு கூடுதல் நற்செய்தி, ஏனெனில் அவர் ரிவர்ஸ் ஸ்விங்கை மிகவும் துல்லியமாக வீசக்கூடியவர், விராட் கோலியின் பேட்டிங்கில் சிலபல விரிசல்களை ஏற்படுத்தியவர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

எனவே இங்கிலாந்து அணி, இந்திய மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் பெரிய அளவில் பங்களிப்பு செய்து வரும் பின் கள பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்தி விரைவில் வீழ்த்த ரிவர்ஸ் ஸ்விங் ஆயுதம் பெரிதும் உதவும். அதில் தற்போது ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தற்போது சிறந்து விளங்குகிறார். அதே போல் இங்கிலாந்தின் பின் கள வீரர்கள் பேட்டிங்கில் பங்களிப்பு செய்யும் அவசியம் இருக்கிறது. இதில் பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ ஆகியோ தலைமையில் பிராட் உள்ளிட்டோர் சில பங்களிப்புகளை மேற்கொண்டால் இங்கிலாந்து நிச்சயம் ஒரு அச்சுறுத்தலான அணியே. பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி காரத் பேட்டீ ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

ராகுல் அதிரடி தொடக்கம் இம்முறை இல்லாததால் இங்கிலாந்துக்கு கொஞ்சம் சவால் குறைவு. கம்பீர், விஜய் கூட்டணியில் கம்பீருக்கு கடந்த இங்கிலாந்து தொடர்களின் சொந்த சொதப்பல்களை அந்த அணியின் பந்து வீச்சு நினைவு படுத்தினால் இங்கிலாந்து உண்மையில் ஒரு சவால்தான். முரளி விஜய் ஃபார்மில் பிரச்சினை இல்லாவிட்டாலும் ரன்கள் அடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார், எனவே அவருக்கு இங்கிலாந்து கூடுதல் நெருக்கடி அளிக்கும் என்றே கூறலாம்.

ரஹானே முதல் டெஸ்ட் போட்டியில் எப்பவும் சொதப்பி வருகிறார், தொடரின் மற்ற போட்டிகளில்தான் அவர் ஃபார்முக்கு வருவது வழக்கமாகி வருகிறது. அதே போல்தான் கோலியின் சீரான தன்மை சற்று குறைவுதான். உச்சகட்ட பார்மில் இருக்கும் போது 3 போட்டிகளுக்கு ஒரு சதம் என்ற விகிதத்தில் அவர் ஆட வேண்டும். ஆனால் இம்முறை அவர் இங்கிலாந்துக்கு தனது சொந்த பேட்டிங் மூலம் பதிலடி கொடுப்பார் என்ற பரவலான எண்ணம் ரசிகர்களிடையே மிகுந்துள்ளது. காரணம் இங்கிலாந்துக்கு எதிராக கோலியின் சராசரி 20.12. உண்மையில் இங்கிலாந்து பவுலர்கள் கவலைப்பட வேண்டிய பேட்ஸ்மென் புஜாராதான். புஜாரா மற்றும் ஜடேஜா தங்கள் சொந்த மண்ணில் ஆடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டாஸில் இங்கிலாந்து வென்று 350-400 ரன்கள் பக்கம் அடித்தால், இந்திய அணியை நெருக்க முடியும், ஏன் தோல்வி அதிர்ச்சிக்கும் தள்ள முடியும்.

இவற்றைச் செய்தால் இங்கிலாந்துக்கு பலன் கிடைக்கலாம்:

1. டாஸ் வெல்வது. வெல்வதோடு இல்லாமல் 380-400 ரன்களை குவிப்பது

2. டாஸ் வெல்ல முடியாவிட்டாலும் இந்தியா முதலில் பேட் செய்தால் ரன்குவிப்பைக் கண்டு பதறி எதிர்மறை பவுலிங் செய்யாமல் இருப்பது, எப்போதும் நெருக்கமான கள வியூகத்துடன் இந்திய பேட்ஸ்மென்களை ‘அட்டாக்’ செய்வதோடு பவுண்டரிகளை வறளச் செய்து, ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்யவிடாமல் நிறுத்துவது.

2. அஸ்வினை தொடக்கத்திலேயே பாசிட்டிவ் ஆக ஆடி, அதிக ஓவர்களை தொடர்ச்சியாக வீசச் செய்யாமல் பார்த்துக் கொள்வது

3. இந்திய பின் கள வீரர்களை அதிக ரன்கள் எடுக்கவிடாமல் செய்வது

4. இந்திய பலவீனமான ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் ஷார்ட் பிட்ச் உத்திகளை சாதுரியமாக பயன்படுத்துவது.

5. கேப்டன் கோலியை விரைவில் வீழ்த்தி இந்திய அணியை பலவீனமடையச் செய்வது.

6. ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக பதற்றமடையாமல், ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து ஒன்று, இரண்டு என்று ரன்களைச் சேர்த்து அவ்வப்போது ஆக்ரோஷம் காட்டி நெருக்கமான களவியூகத்தை முறியடிப்பது.

7. அனைத்தையும் விட முக்கியமானது கேட்ச்களை கோட்டை விடாமல் பிடிப்பது.

8. ஆட்டத்தின் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் சோர்வடையாமல் கடும் நெருக்கடி கொடுப்பது.

அணிச் சேர்க்கை:

ரோஹித் சர்மா இல்லாததால் அந்த இடத்திற்கு கருண் நாயரா, அல்லது ஹர்திக் பாண்டியாவா என்ற கேள்வி இந்திய அணிக்கு உள்ளது. பாண்டியாவை 5-வது பவுலராகவும் 8-வது நிலையில் இறங்கும் பேட்ஸ்மெனாகவும் இந்தியா களமிறக்கவும் வாய்ப்பு உள்ளது. அதே போல் அமித் மிஸ்ராவின் இடமும் உறுதியாக இல்லை. ஏனெனில் 2 வேகப்பந்து வீச்சு 2 ஸ்பின், ஒரு 5-வது பவுலர் என்றால் அதில் ஹர்திக் பாண்டியாவை நுழைக்க வாய்ப்புள்ளது. 3 ஸ்பின்னர்கள் என்றால்தான் அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு கிடைக்கும், அவர் கூட நன்றாக பேட்டிங் ஆடுபவர்தான், எனவே இந்த அணித் தேர்வுக் குழப்பங்கள் உள்ளன. ஆனால் அனில் கும்ப்ளே இந்த விவகாரத்திற்கு சரியான தீர்வு வழங்குவார்.

இந்திய அணி:

கவுதம் கம்பீர், முரளி விஜய், புஜாரா, விராட் கோலி, ரஹானே, கருண் நாயர் / ஹர்திக் பாண்டியா, அஸ்வின், சஹா, ஜடேஜா, மொகமது ஷமி, இசாந்த் சர்மா.

இங்கிலாந்து அணியில் 19 வயது ஹசீப் ஹமீது புதிய இளம் தொடக்க வீரராக களமிறங்கவுள்ளார். இங்கிலாந்து அணியின் இளம் தொடக்க வீரர் இவரே.

இங்கிலாந்து அணி வருமாறு:

அலிஸ்டர் குக், ஹசீப் ஹமீத், ஜோ ரூட், பென் டக்கெட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், பிராட், காரத் பேட்டீ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x