Published : 06 Oct 2016 11:13 AM
Last Updated : 06 Oct 2016 11:13 AM

மில்லர் காட்டடி சதம்: ஆஸி.க்கு எதிராக 372 ரன்களை விரட்டி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!

டர்பனில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் 371 ரன்களை மகா விரட்டல் செய்த தென் ஆப்பிரிக்கா 372/6 என்று அபார வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்று கைப்பற்றியது.

மேலும், 2009-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்கிறது தென் ஆப்பிரிக்கா.

டேல் ஸ்டெய்ன், ரபாதா ஆகியோருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தென் ஆப்பிரிக்க அணியில் டேவிட் மில்லர் 79 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 118 ரன்களை குவித்து இறுதி வரை நாட் அவுட்டாக இருந்து வெற்றிக்கு இட்டுச் சென்றார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியடைந்த துரத்தலாகும் இது.

ஆஸ்திரேலியாவின் 372 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்கா 49.2 ஓவர்களில் எடுத்து தொடரை வென்றது. முன்னதாக, ஆஸ்திரேலியாவை படுத்தி எடுக்கும் குவிண்டன் டி காக் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 70 ரன்கள் எடுத்தார். ஹஷிம் ஆம்லா 30 பந்துகளில் 45 ரன்களையும், டுபிளெசிஸ் 32 பந்துகளில் 33 ரன்களையும் எடுத்தனர்.

372 ரன்கள் இலக்கைத் துரத்த களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டி காக், ஆம்லா களமிறங்கினர். ஆம்லா நிதானமாகத் தொடங்கினாலும் பிறகு அருமையான ஆட்டத்தை ஆடினார். பெரிய மட்டைச் சுழற்றல் இல்லாவிடினும் கிரீசுக்குள் தன்னை அழகாக நகர்த்திக் கொண்டு 10 பந்துகளில் ஆஃப் திசையிலும் லெக் திசையிலும் 7 பவுண்டரிக்ளை விளாசினார். கடைசியில் 30 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து ஹேஸ்டிங்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். 8.3 ஓவர்களில் 66/1 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா. இவர் அடித்த 9 பவுண்டரிகளில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் வொராலை மட்டுமே 5 பவுண்டரிகள் அடித்தார் ஆம்லா.

டு பிளெசிஸ் களமிறங்கிய பிறகு குவிண்டன் டி காக் அடித்து ஆடத் தொடங்கினார். குறிப்பாக மார்ஷ் வீசிய ஸ்லோ பந்தை லாங் ஆஃபில் அருமையாக அடித்த சிக்ஸ் கிளாஸ் ரகத்தைச் சேர்ந்தது. அதே போல் டிராவிஸ் ஹெட் பந்தை ஸ்வீப் செய்து பைன் லெக் பவுண்டரிக்கு விரட்டி 36 பந்துகளில் அரைசதம் கண்டார், அரைசதம் எடுத்த மகிழ்ச்சியை கொண்டாட ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட்டில் சிக்ஸ் விளாசினார்.

பிறகு, டுபிளெசிஸிற்கு சாம்பா பந்தில் ஸ்மித் கவர் திசையில் கடினமான வாய்ப்பைத் தவறவிட்டார். ஆனாலும் டுபிளெசிஸ் நீடிக்கவில்லை. 32 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஹெட் பந்தில் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டுபிளெசிஸ், டிகாக் இணைந்து சுமார் 9 ஓவர்களில் 74 ரன்களை சேர்த்தனர். முதல் 20 ஓவர்களில் டி20 போல் 161/2 என்று இருந்தது தென் ஆப்பிரிக்கா.

டி காக் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 70 ரன்கள் எடுத்து டிரெமெய்ன் பந்தை புல் செய்ய முயன்று டாப் எட்ஜில் பெரிய கொடியை ஏற்றி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 21 ஓவர்கள் முடிவில் 164/3. ரைலி ரூசோவ் அதிக நேரம் நீடிக்கவில்லை 18 ரன்களில் அவர் சாம்ப்பா பந்தில் எல்.பி.ஆனார். 24 ஓவர்கள் முடிவில் 179/4. அதாவது ரன் விகிதம் 7.45, வெற்றிக்கு தேவையான ரன் விகிதம் 7.42.

மில்லர் காட்டடி தர்பார்:

டேவிட் மில்லர் களமிறங்கி கொஞ்ச நேரத்துக்கு பந்தை பீல்டர் கைகளில் நேராகவே அடித்துக் கொண்டிருந்தார், சாம்ப்பாவும் மிட்செல் மார்ஷும் கொஞ்சம் இறுக்கினர். இதனால் மில்லர் முதல் 11 பந்துகளில் 2 ரன்களையே எடுத்திருந்தார். இதனால் வெற்றிக்கான ரன் விகிதம் 8 ரன்களைத் தொட்டது.

அப்போதுதான் ஸாம்பா 28-வது ஓவரை வீச வர புகுந்தார் மில்லர். முதல் பந்து ஒரு அபாரமான ஸ்வீப், இது அதிக உயரம் கூட எழும்பவில்லை, ஆனால் சிக்ஸ். ஃபிளாட் சிக்ஸ். பிறகு லாங் ஆன். லாங் ஆஃபில் 2 பவுண்டரிகள் என்று அந்த ஓவரில் 16 ரன்கள் வந்தது. ஆனால் அதன் பிறகும் மார்ஷ் ஒரு ஓவரில் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஹேஸ்டிங்ஸ் 30வது ஓவரில் 3 ரன்களையே விட்டுக் கொடுத்தார். 31-வது ஓவரில் மார்ஷ் மீண்டும் 6 ரன்களையே விட்டுக் கொடுத்தார், பவுண்டரிகள் திடீரென பஞ்சமாயின. இந்த நெருக்கடியில்தான் டுமினி 20 ரன்களில் லெக் திசையில் பெரிய ஷாட்டில் கேட்ச் ஆனார்.

இவர் அவுட் ஆன ஓவரிலும் 3 ரன்களே வந்தது. எனவே 32 ஓவர்களில் 220/5 என்ற நிலையில் வெற்றிக்கு தேவைப்படும் ரன் விகிதம் 8.44 என்று அதிகரிக்க மில்லர் ஆவேசமடைந்தார்.முதலில் வொரால் பந்தை ஒதுங்கிக்கொண்டு லாங் ஆஃபில் ஒருசிக்சரையும் ஒரு புல்ஷாட்டில் பவுண்டரியையும் அடித்து அந்த ஓவரில் 11 ரன்கள் வந்தது. பிறகு ஹேஸ்டிங்ச் சற்றே ஷார்ட் பிட்சாக வீச டீப் மிட்விக்கெட்டில் 4 வரிசைகள் தள்ளிப்போய் விழுந்தது பந்து. 45 பந்துகளில் அரைசதம் கண்டார் மில்லர்.

எதிர்முனையில் பிரிடோரியஸ் 15 ரன்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்கா 38 ஓவர்களில் 268/6 என்று இருந்தது, மிட்செல் மார்ஷ் சில நல்ல ஓவர்களை வீசியதால் ரன்விகிதம் கட்டுப்பட வெற்றிக்குத் தேவையான ரன் விகிதம் 8.66 என்று ஆனது. அப்போதுதான் மில்லருடன் பெலுக்வாயோ இணைந்தார்.

இருவரும் இணைந்து ஆட்டமிழக்காமல் 70 பந்துகளில் 107 ரன்களை விளாசி வெற்றிக்கு இட்டுச் சென்றனர். 45 பந்துகளில் அரைசதம் கண்ட டேவிட் மில்லர் அடுத்த 24 பந்துகளில் மேலும் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 69 பந்துகளில் சதம் கண்டார். கடைசியில் இன்னொரு சிக்சரையும் பவுண்டரியையும் அடித்து 10 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 79 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தர்.

பெலுக்வயோ 39 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். தென் ஆப்பிரிக்கா 49.2 ஓவர்களில் 372/6 என்று ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2-வது பெரிய வெற்றித்துரத்தலைச் சாதித்தது. 8 ஓவர்கள் வரையிலும் 44 ரன்களை மட்டுமே கொடுத்து சிக்கனம் காட்டிய மிட்செல் மார்ஷ் அதன் பிறகு 2 ஓவர்களில் 17 ரன்களைகொடுத்து 10 ஓவர்களில் 61 ரன்களுடன் சிக்கனமாக வீச்சாளராகவே திகழ்ந்தார்.

ஆட்ட நாயகனாக டேவிட் மில்லர் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x